காரமடை அரங்கநாத பெருமாளுக்கு திருக்கல்யாணம்

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாத சுவாமி கோவில் மாசிமகத் தேர்திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாளின் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் மாசிமகத் திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் இரவு உற்சவர் அரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அன்னவாகனம், சிம்மவாகனம், அனுமந்த வாகனங்களில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து, 16ம் தேதி இரவு கருட சேவை நிகழ்ச்சியும் நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. இதற்காக, பெட்டத்தம்மன் மலை குகையில் குடிகொண்டுள்ள அம்மன் (அரங்கநாயகி தாயார்) அழைத்து வரப்பட்டார். கோவில் அரங்கநாயகி தாயார் சன்னதி முன்பு அமைக்கப்பட்டிருந்த மணமேடையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மணக்கோலத்தில் அரங்கப் பெருமாள் வீற்றிருந்தார்.  

திருமலை நல்லான் சக்ரவர்த்தி சுவாமிகள், வேதவியாசர் சுதர்சன பட்டர் சுவாமிகள், ஸ்ரீதர் பட்டர் சுவாமிகள் மற்றும் திருக்கோவில் தலைமை அர்ச்சகர் சுரேஷ் நாரயண் அய்யாங்கார் மற்றும் ரங்கநாத அய்யங்கார், திருவேங்கட அய்யாங்கார், மதுசூதன அய்யாங்கார் ஆகியோர் யாகம் வளர்த்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். பின்னர், சுமங்கலி  பெண்கள் அனைவருக்கும் தாலிசரடுகள் வழங்கப்பட்டது. மணக்கோலத்தில் பெருமாள் பல்லக்கில் திருவீதியுலா வந்து கோவில் வளாகத்தில் உள்ள கல்யாண்மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 8 மணிக்கு யானை வாகன உற்சவம் நடந்தது. இன்று (19ந் தேதி) பிற்பகல் 2.45 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

Related Stories: