கடலாடும் விழா

மாசி மகம் என்பது மாசி மாதப் பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் கொண்டாடப்படும் விழாவாகும். இவ்விழாவானது ‘கடலாடும் விழா’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பிறவி என்னும் பெருங்கடலில் அமிழ்ந்து கிடக்கும் மானிட ஆன்மாவானது இறைப் பரம் பொருளின் அருட் கருணை என்னும் ஆனந்த வௌ்ளத்தில் மூழ்கித் திளைத்தல் வேண்டும் என்பதனை குறிப்பால் உணர்த்தலே இவ்விழாவின் உள்ளார்ந்த நோக்கம் ஆகும்.  இந் நன்னாளில் தான் உமையவள் தக்கனின் மகளாக அவதாரம் செய்தாள். மாசி மகத் தன்று தக்கன் தன் மனைவியாகிய வேதவல்லியுடன் யமுனை ஆற்றில் நீராடினான். பின் அவன் அந்நதியின் தாமரை மலரில் இருந்த வலம் புரிச் சங்கினைத் தொட அது பெண்ணாய்மாறிற்று. இச்செயல் ஈசனின் திருவருளால் நிகழ்ந்தது என்பதனை உணர்ந்து அப்பெண்ணிற்கு தாட்சாயிணி எனப் பெயரிட்டு வளர்த்தான் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. மேலும் இந்தநாளில் தான் திருமால்வராக அவதாரம் எடுத்து பூமியைக் கடலில் இருந்து  மீட்டார் என வைணவ இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இந்நாள் முருகனுக்கும் உரிய நாளாகும்.

இந்த நாளில் தான் முருகன் சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்தார்.  எனவே சிவபெருமான், திருமால், முருகன் என்னும் முப்பெரும் கடவுளருக்கும் உரிய நாளாக இது போற்றப்படுகிறது. நதிகளில் நீராடல் என்பது தமிழரின் பண்பாடு சார்ந்தமரபே ஆகும். தமிழ் இலக்கியங்களில் குறிக்கப்படும் தை நீராடல், மார்கழி நீராடல் என்பதனை ஈண்டு நினைவு கூறல் நலம். எனினும் இம்மாசித் திருநாளில் நீராடல் என்பதற்கு வருணனோடு தொடர்புடையகதை ஒன்று சொல்லப்படுகிறது. வருண பகவானுக்கு ஒருமுறை பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அதனால் அவர் கட்டப்பட்டு கடலில் வீசப்பட்டார். வருணன் செயல்பட இயலாது போகவே உலகம் வறட்சியால் பாதிக்கப்பட்டது . உலக உயிர்கள் சொல்லொண்ணாத் துன்பத்தினை அனுபவித்தன. தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்: அவர்களின் வேண்டுகோளை ஏற்ற இறைவன் வருணனை விடுவித்தார். வருணன் விடுதலை பெற்ற திருநாளே மாசி மகம் எனப்பட்டது.

விடுதலை பெற்ற வருணன் சிவபெருமானிடம் வரம் வேண்டினான். தான் கடலில் இருந்த காலத்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றமையால் தன்னைப் போன்று வழிபடும் அனைவரும் பிறவிப் பிணிகள் நீங்கி உயர்வு பெற வேண்டும் என்பதே அவ்வரம் ஆகும். இறைவனும் மகிழ்ந்து அத்தகைய வரத்தினை வழங்கினார். அதன் அடிப்படையிலேயே மாசி மகத்தன்று நீராடல் என்னும் நிகழ்வு தோற்றம் பெற்றது. அவ்வாறு நதியில் நீராடும் காலத்து ஒற்றை ஆடையுடன் நீராடல் கூடாது.  உடன் பிறிதோர் ஆடையும் அணிந்திருத்தல் வேண்டும் என நமது புராணங்கள் குறிப்பிடுகின்றன.  ஒருமுறை நீராடி எழுந்தால் பாவங்கள் விலகும். இரண்டாம் முறை நீராடி எழுந்தால் தேவலோகத்தில் வீற்றிருக்கும் பெருமை கிடைக்கும். மூன்றாம் முறை நீராடி எழுந்தால் நீராடுபவர் செய்த புண்ணியத்திற்கு எல்லையே இல்லை.  நீராடும் காலத்துச் சிவபுராணம் சொல்லுதல், மேலும் சிறப்புடைத்தாம்.

இந்த மாசித் திருநாள் காமனை சிவபெருமான் எரித்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது.  சிவபெருமான் தவம் செய்யும் பொருட்டு தியானத்தில் ஆழ்ந்தார். அவர் தவத்தில் ஆழ்ந்தமையால் உலகின் கண் தீமைகள் பெருகத் தொடங்கின. சூரபத்மன் தான் கொண்ட வரத்தின் வலிமையால் தேவர்களைத் துன்புறுத்தத் தொடங்கினான். அவனின் இன்னல் பொறுக்காத தேவர்கள் பிரம்மனிடம் சென்று முறையிட்டனர். பிரம்மனனை அழைத்து சிவபெருமானின் தவத்தினைக்களைப்பதற்கு மன்மத அம்பினை ஏவுமாறு கூறினார். அவரின் சொல்லினைக் கேட்ட மன்மதனோ சிவபெருமானின் கையும் விழியும் மெய்யும் கூட நெருப்பின் வடிவம் ஆகும். எனவே அவரின் மேல் மன்மத அம்பினைச் செலுத்தி மீண்டும் உயிரோடு மீளல் கடினம் என்றான். இதனை கந்த புராணத்தில் கச்சியப்பர்,

கையும் மெய்யும் கதிரார் விழியும்

மெய்யும் தழலாம் விமலன் தனையான்

எய்யும் படி சென்றிடின் இவ்வுயிர் கொண்டு

உய்யும் திறமும் உளதோ உரையாய்

என குறிப்பிடுவார். ஆனால் மன்மதனின் பேச்சினைக் கேளாத பிரம்மன் உலகில் ஒருவருக்கு நம்மால் செய்ய இயலும் உதவி ஒன்று உண்டாகில் அதனை அத்தகையவர் கேளாமல் செய்வதே சிறப்பாம். பிறர் கேட்ட வழி செய்தல் இரண்டாம் நிலையில் வைக்கப் பெறும். கேட்ட பின்னும் பலகால் தாழ்த்திச் செய்தல் சிறப்பன்று என்றார். இதனை,

என்னானும் ஒருதவியாதொருவன்யார்க் கெனினும்

தன்னால் முடிவதெனில்தானே முடித்தல் தலை

சொன்னால் முடித்தல் இடையாகும்

சொல்லுகினும்

பன்னால் மறுத்துப் புரிதல் கடைப்

பன்மையதே

என்ற கந்த புராணப் பாடலால் அறியலாம். பிரம்மனின் இத்தகைய உரையினை மனத்தினுட் கொண்ட மன்மதன் சிவபெருமான் மேல் மலர் அம்பினை எய்தற்குப் புறப்பட்டான். அதனைக் கண்ட ரதி இடைப் புகுந்து தடுத்தாள். அச்செயலால் ஆபத்து வந்து சேரும் என்றாள். ஆனால் மன்மதனோ அவளை மறுத்து பிரம்மனின் வேண்டுகோள் ஈதெனக் கூறிக் கயிலை சென்றான். கயிலையில். சிவபெருமான் சனகாதி முனிவர்க்கு நான் மறை உரைத்து நல் வழிகாட்டியதுடன் தவ நிலையில் அமர்ந்தார். அவரின் தவ நிலையினைக் கலைக்கும் பொருட்டு மன்மதன் மலர்க் கணையை எய்தான். உடன் சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணிணை விழித்துப் பார்த்தார். அந் நெற்றிக் கண்ணில் இருந்து வந்த நெருப்புப் பொறியின் வெப்பம் தாளாமல் மன்மதன் எரிந்து சாம்பலானான். அதனால் எழுந்த புகையானது கயிலாயம் முழுவதும் பரவியது. இதனை

விட்ட வெம்ப கழிந்தும் வியத்தகு விமலன் மீது

பட்ட லுஞ்சிறிதே வேளைப் பார்த்தனன் பார்த்தலோடும்

தடமதழல்பொதிந்த நெற்றிக் கண்ணதுகடிதேகாமற்

சுட்டது கயிலை முற்றுஞ்சூழ்பகைபரவிற்றன்றே

என்ற கச்சியப்பரின் பாடல் உணர்த்தி நிற்கும். தனது கணவனான மன்மதன் எரிந்ததனை அறிந்தரதி,  

செம் பதுமை திருக்குமரா!

தமியேனுக்கு ஆருயிரே! திருமால் மைந்தா

சம்பரனுக்கு ஒரு பகைவா! கன்னல் வரிச்

சிலை பிடித்த தடக்கை வீரா!

அம்பவளக் குன்றனைய சிவன் விழியால்

வெந்துடலம் அழிவுற்றாயே!

உம்பர்கள்தம்விழியெல்லாம்உறங்கிற்றோ!

அயனாரும் உவப்புற்றாரே

என்றெல்லாம் அழுது புலம்பினாள். அவளின் புலம்பலைக் கேட்ட சிவபெருமான் ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும் வண்ணம் மன்மதனை உயிர்ப்பித்துக் கொடுத்தார். இத்தகைய நிகழ்வு நடந்த மாதம் மாசி மகப்பொழுது என்பதனால் இம்மாதம் மேலும் சிறப்புப் பெறுகிறது. இதன் வழி உலகத்தார் காமத்தினை வென்று கடைத்தேற வேண்டும் என்பது உணர்த்தப்பட்டது. திருஞான சம்பந்தர் மாசி மகத் திருநாளைத் தனது பதிகத்தில் குறிப்பிடுகிறார். மயிலாடுதுறையில் வணிகர் குலத்தில் தோன்றியவர் சிவநேசச் செட்டியார். அவருக்கு அருமை மகள் ஒருத்தி இருந்தாள், அவளின் பெயர்பூம்பாவை என்பதாம். அவளைத் திருஞான சம்பந்தருக்கு மணம் முடித்துக் கொடுப்பது என்னும் எண்ணத்துடன் வளர்த்து வந்தார்.  அப்பெண் ஒருநாள் மலர் பறிக்க மலர் வனம் சென்ற பொழுது பாம்பு ஒன்று தீண்டியது. சிவநேசச் செட்டியார் மருத்துவர்களை அழைத்து வந்து மருத்துவம் செய்து பார்த்தும் மருத்துவம் பழிக்காது இறந்து போனாள்.

அதனைக் கண்டு வருந்திய சிவநேசச் செட்டியார் அப்பெண் திருஞான சம்பந்தருக்காகவளர்க்கப் பெற்றவள் ஆகையால் அவர் வரும் வரைக்கும் அவளைத் தகனம் செய்த எலும்பினையும் சாம்பலையும் வைத்திருப்பேன் என்று பாதுகாத்து வந்தார், திருஞான சம்பந்தர் திருவொற்றியூர் வருகை தந்திருப்பதனை அறிந்து அவரை மயிலாப்பூருக்கு அழைத்து வந்தார். அவரின் காலடியில் வீழ்ந்து பணிந்து தன்மகள் தொடர்பான செய்தியினைத் தெரிவித்தார். அதனைக் கேட்ட திருஞான சம்பந்தர் அவர் மகளின் எலும்பும் சாம்பலும் இருக்கும் குடத்தினை கோயிலின் புறமாகக் கொண்டு வருக! எனப் பணித்தார். சிவநேசச் செட்டியாரும் அதனைக் கொண்டுவர அக்குடத்தினை கபாலீஸ்வரரின் முன்வைத்து வணங்கினார் திருஞான சம்பந்தர். பின் இறைவனை நினைந்து  பூம்பாவை உயிருடன் எழுந்து வரப்பதிகம் பாடினார், அப்பதிகம்

மட்டிட்ட புன்னை யங்கானல் மடமயிலைக்

கட்டிடங் கொண்டான் கபாலீச் சரமமர்ந் தான்

ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல் கணத்தார்க்

கட்டிடல் காணா தேர போதியோபூம்பாவாய்

எனத் தொடங்குவதாகும். இப்பாடலில் மயிலையில் நடைபெறும் ஐப்பசி ஓணத் திருநாள், கார்த்திகைத் திருநாள், திருவாதிரைத் திருநாள், தைப்பூசத் திருநாள், மாசிமகத் திருநாள், பங்குனி உத்திரத் திருநாள், சித்திரை அட்டமித் திருநாள், ஊஞ்சலாட்டுத் திருநாள், பெருஞ்சாந்தித்திருநாள் (கும்பாபிடேக நன்னாள் ) போன்ற விழாக்களைச் சுட்டுவார் திருஞானசம்பந்தர். அவற்றுள் மாசி மகத்தினைச் சுட்டுமிடத்து கடலாடல் என்னும் சொல்லினையும் பயன்படுத்துவார் திருஞானசம்பந்தர்,

அப்பாடல்,

மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்

கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்

தான் அடலா னேறூரு மடி களடி பரவி

நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்

என்பதாகும். இப்பதிகத்தின் முதல் பாடலாகிய மட்டிட்ட புன்னை யங்கானல் என்னும் முதல் பாடலிலே பூம்பாவாய் உயிர் பெற்று எழுந்தாள். பின் ஒவ்வொரு பாட்டிலும் வளர்ந்து பன்னிரண்டு வயதினை அடைந்தாள். உடன் சிவநேசச் செட்டியார் அவளைத் திருஞானசம்பந்தர் திருமணம் செய்து கொள்ள வேண்டினார். அதற்கு ஞானசம்பந்தரோதாம் இறைவனின் திருவருளால் பூம்பாவையினை உயிர்ப்பித்தமையால் அவள் எனக்கு மகளாவாள் என்று கூறி மகளாகவே ஏற்றுக் கொண்டார். இத்தகைய நிகழ்விற்கு ஞானசம் பந்தரின் மாசி மகப்பதிவுடன் கூடிய பதிகமும் காரணம் ஆகும். வைணவ மரபில் மாசிமகம் தோற்றத்திற்கெனபிறிதோர் காரணம் கூறப்படுகிறது. மக நட்சத்திரம் திருமாலுக்குரிய சிறந்த நாட்களுள் ஒன்றாகும். இந்நாளில் தீர்த்த வாரி என்னும் வழிபாட்டு முறைமை பின் பற்றப் படுகிறது.பாற் கடலுள் பள்ளி கொண்டுள்ள பரந்தாமனை அப்பொழுது மலர்ந்த தாமரை மலரை வைத்து வழிபட வேண்டும் எனப் புண்டரீக முனிவர் விரும்பினார்.

எனவே தாமரை மலரினை மாமல்லபுரக் கடற்கரையில் வைத்துவிட்டு பாற்கடலுள் பள்ளி கொண்டுள்ள திருமாலைக் காண வேண்டும் என்னும் ஆவலுடன் கடல் நீரை இறைத்துக் கொண்டிருந்தார்.  அவரின் முயற்சியைக் கண்டு மனம் மகிழ்ந்த திருமால் தானே ஒரு முதியவரின் வடிவில் வந்தார். தனக்குப் பசிப்பதால் ஊரினுள் சென்று உணவு வாங்கி வருமாறு புண்டரீக முனிவரை அனுப்பி விட்டுத் தான் கடல் நீரை இறைக்கலானார். வந்து பார்த்த முனிவர் கடல் உள்வாங்கியிருப்பதுடன் தான் வைத்த மலர் திருமாலின் பாதங்களில் இருப்பதையும் கண்டு மகிழ்ந்தார். இவ்வாறு திருமாலே தன் திருக்கரத்தால் இறைத்த அர்த்த சேது என்னும் கடலில் நீராடல் மிகவும் சிறந்ததாகும். இந்நன்னாளில் கும்பகோணத்தில் உள்ள மகாமகக் குளத்தில் நீராடல் மிக உயர்ந்த பலன்களைத் தரும். மாசி மகத்தன்று கங்கை, யமுனை, சரஸ்வதி. காவிரி, கோதாவரி, பொருநை போன்ற புண்ணிய நதிகள் எல்லாம் இக்குளத்தில் நீராடி தங்கள் பாவத்தினைப் போக்கிக் கொள்கின்றன எனப் புராணங்கள் குறிப்பிடுகின்றன.

இத்திருநாளில் ஆழ்வார்களின் மங்களாசாசனம் பெற்ற நூற்றியெட்டு வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றான சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருக்கோட்டியூரில் நடைபெறும் திருவிளக் கெடுத்தல் என்னும் வழிபாட்டு முறைமை சிறப்பான தாகும். ஏதேனும் ஒரு வேண்டுதலின் அடிப் படையில் திருக்குளத்தில் வேண்டுதல் நிறைவேறியோர் ஏற்றிய விளக்கினை எடுத்துச் செல்வர். அதனைத் தன் வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வர்,  தனது வேண்டுதல் நிறைவேறியவுடன் தான் எடுத்துச் சென்ற விளக்குடன் ஒற்றைப் படை எண்ணிக்கையில் வருமாறு விளக்குகளைச் சேர்த்து அடுத்து வரும் மாசிமகத் திருநாளில் ஏற்றி வழிபடுவர். மாசிமகத் திருநாள் சைவ, வைணவ மரபுகளில் உயர்த்திக் குறிக்கப்படும் சிறப்பினைத் தன்னுள் கொண்டுமைந்ததாகும். எனவே இத்தகைய நாளில் நதிகளில் நீராடி இறைப்பரம் பொருள்களை வணங்கி அவர்கள் தம் திருவருள் பெற்று வாழ்வில் மேன்மை அடைவோம்!

முனைவர் மா. சிதம்பரம்

Related Stories: