கொள்ளிடத்தில் தீர்த்தவாரி : சமயபுரம் மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சீர்வரிசை

திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல்நாள் இரவு அம்பாள் கேடயத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். அதேபோல் விழா நாட்களில் தினமும் அம்பாள் இரவில் சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், சேஷ வாகனம், வெள்ளி குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். தினமும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை வழிபட்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா நேற்றுமுன்தினம் நடந்தது. இதனை முன்னிட்டு உற்சவ அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணியளவில் தெப்பக்குள மண்டபத்திற்கு வந்தார். பின்னர் 7.45 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார். தெப்பத்தில் எழுந்தருளிய அம்பாள் வாணவேடிக்கைகள் முழங்க மைய மண்டபத்தை மூன்று முறை சுற்றி வந்தார். தொடர்ந்து அம்பாள் தெப்பக்குளத்தில் உள்ள மைய மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆரானைகள் நடந்தது. தொடர்ந்து அம்பாள் தெப்பக்குளத்தில் இருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைந்தார். நேற்று மாலை 3.30 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளுதல் நடந்தது.

இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடமிருந்து சமயபுரம் மாரியம்மன் சீர் பெறும் நிகழ்ச்சி கொள்ளிடத்தில் நடைபெற்றது.  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அதிகாரி ஜெயராமனிடம் இருந்து  சமயபுரம் மாரியம்மன் கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் சீர்வரிசையை பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து அதிகாலை 1 மணி முதல் 2 மணி வரை மகா அபிஷேகம் நடந்தது. அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 11ம் திருநாளான இன்று கொள்ளிடத்திலிருந்து அம்மன் கண்ணாடி பல்லக்கில் நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக வழிநடை உபயம் கண்டருளுகிறார். இன்றுடன் தைப்பூச விழா நிறைவடைகிறது.

Related Stories: