தனித்துவம் மிக்க தை மாதம்!

* ரத சப்தமி என்பது தை மாதத்தின் வளர்பிறையில் வரும் சப்தமி திதி அன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில்தான் சூரியன் தனது வட அரைக்கோளப் பயணத்தைத் தொடங்குகிறார். இந்நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி தீபம் ஏற்றி சூரிய வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினத்தில் தங்களால் இயன்ற தானங்களைச் செய்யலாம். இந்நாளில் விரத முறை கொள்வதால் ஆரோக்கியம், செல்வம், புத்திரப்பேறு, நீண்ட ஆயுள், பகைவர்களை வெல்லும் சக்தி, வெற்றி, நிலம், தானியம், புண்ணியம் ஆகியவை கிடைக்கும். மனக்கவலை, வியாதி ஆகியவைற்றை நீக்கும். வழியில்லாமல் தவிக்கும்போது வழி காட்டும் என்று கருதப்படுகிறது.

* தை மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசி சபலா ஏகாதசி என்றழைக்கப்படுகிறது. இந்நாளில் உணவின்றி விரத முறை மேற்கொண்டு வழிபாடு செய்ய நாம் செய்யும் பாவங்கள் எல்லாம் நீங்கும். அன்றைய தினம் பழங்களை தானம் செய்வதால் ஒளி மயமான வாழ்க்கை அமையும். இல்லறம் இனிக்கும். லும்பகன் என்னும் இளவரசன் இவ்விரதத்தைக் கடைப்பிடித்து பாவங்கள் நீங்கி அரச பதவியைப் பெற்று பின் வைகுந்த பதவியையும் பெற்றான்.

* தை மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி புத்ரதா ஏகாதசி என்றழைக்கப்படுகிறது. இந்நாளில் ஏகாதசி விரத முறை மேற்கொண்டு வழிபாடு செய்ய புத்திர‌ பாக்கியம் கிடைக்கும். சுகேது மான் என்ற அரசன் பிள்ளை இல்லாக் குறையை இவ் ஏகாதசி விரத முறையைப் பின்பற்றி நல்ல மகனைப் பெற்றான். தன் நாட்டில் உள்ளோரும் இவ்விரத முறையைப் பின்பற்றச் செய்தான். இந்த ஏகாதசி வம்சாவளியைப் பெருகச் செய்யும் சந்தான ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

* தை இரண்டாம் நாள் சாவித்ரி கௌரி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. பதினாறு வயது மார்க்கண்டேயருக்கு நீண்ட ஆயுளைப் பெற சிவபிரான் அருளிய விரதம் இது. இவ்விரதத்தின் சிறப்பினை மார்க்கண்டேயர் தருமருக்கு கூறி அதனை தருமர் பின்பற்றினார் என்று கூறப்படுகிறது. இவ்விரத முறையில் தை இரண்டாம் நாள் அன்று விரதமிருப்போர் அதிகாலையில் நீராடி களிமண்ணால் செய்த சாவித்ரி அம்மனை பூஜை செய்ய வேண்டும். அன்றைய தினம் ஒன்பது முடிச்சுக்கள் போடப்பட்ட கயிற்றினைக் கையில் கட்டி மௌன விரதம் இருக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒன்பது நாட்கள் பூஜையைச் செய்ய வேண்டும். பின் மேற்கூறிய முறையில் தொடர்ந்து ஒன்பது வருடங்கள் பூஜையைச் செய்ய வேண்டும்.  ஒன்பதாவது ஆண்டு முடிவில் ஒன்பது முறங்களில் ஒவ்வொன்றிலும் வெற்றிலை, பாக்கு, பழங்கள், மஞ்சள் கிழங்குகள் என அனைத்தும் ஒன்பது எண்ணங்களுடன் வைத்து ஒன்பது சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், முறம் ஆகியவற்றை தானம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் நீண்ட ஆயுள், சந்தான பாக்கியம், நீடித்த செல்வம் ஆகியவை கிடைக்கும்.

* தை மாதத்தில் வரும் முதல் செவ்வாய்க் கிழமை முதல் தொடங்கி செவ்வாய்க் கிழமைகளில் பைரவ விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரத்தின்போது பைரவருக்கு வடை மாலை அணிவிக்கப்படுகிறது. இதனால் சகல நன்மைகளும் கிடைக்கும். வீரபத்ர வழிபாடு என்பது செவ்வாய் தோறும் ஓர் ஆண்டு காலம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஓராண்டு வழிபட முடியாதவர்கள் தை மாத செவ்வாய்க் கிழமையில் மட்டுமாவது இவ்வழிபாட்டினைக் கடைப்பிடிக்கலாம். இவ்வழிபாட்டை மேற்கொள்வது நீங்காத தடையை நீக்கும். தீராத பகையைத் தீர்க்கும். நவகிரக பாதிப்புகளிலிருந்து நம்மைக் காக்கும்.

* உத்திராயண காலத்தின் ஆரம்ப மாதமான தை மாதத்தில் வரும் வெள்ளிக் கிழமையில் அம்மன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அன்றைய தினங்களில் அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி உள்ளிட்ட அம்மன் குறித்த பாடல்களைப் பாடி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

- சந்தியா முரளிதரன்

Related Stories: