சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா திருவிழா இன்று 14ம்தேதி காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுக்கு இருமுறை திருவிழா நடப்பது வழக்கம். ஆனி மாதத்தில் ஆனித்திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா திருவிழாவும் நடக்கும். மார்கழி மாதத்தில் நடக்கும் ஆருத்ரா திருவிழா இன்று 14ம்தேதி காலை 8.30 மணிக்கு மேல் கொடியேற்றத் துடன் தொடங்கியது. கோயில் கொடிமரத்தில் உற்சவ ஆச்சார்யர் நடராஜ தீட்சிதர் கொடியேற்றி வைத்தார்.

இதனையொட்டி நேற்று முன்தினம் இரவு முதல் கோயிலில் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. வரும் 22ம் தேதி (சனிக்கிழமை) முக்கிய விழாவான தேர்திருவிழா நடக்கிறது. அன்று காலை 5.30 மணிக்கு மேல் கோயில் சித்சபையில் இருந்து ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜமூர்த்தி தேரில் எழுந்தருள்கின்றனர். பின்னர் தனித்தனி தேர்களில் வீதியுலா நடக்கிறது. 23ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3.00 மணிக்கு மேல் ராஜசபை என்கிற ஆயிரங்கால் மண்டபத்தில் சாமிக்கு மகாபிஷேகமும் 10 மணிக்கு மேல் திருவாபரண அலங்காரமும், மதியம் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசன விழாவும் நடக்கிறது. 24ம் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது.

Related Stories: