நல்லறங்களை அழிக்கும் ‘பகட்டு’

மிகச்சிறிய செயலாக இருந்தாலும் அதை இறைவனுக்காக என்று தூய மனத்துடன் செய்யும் போதுதான் அதற்கான நற்கூலி  புண்ணியம் கிடைக்கும். அப்படியில்லாமல், பாராட்டுக்காகவும் பகட்டுக்காகவும் செயல்படுவது நல்லறங்களையே செல்லரிக்கச் செய்துவிடும் ஒரு தீய பண்பாகும். இதுகுறித்து இஸ்லாமியப் பேரறிஞர் மௌலானா மௌதூதி அவர்கள் பின்வருமாறு விளக்கம் தருகிறார்கள்: “நல்லது செய்ததற்குப் பாராட்டைப் பெற வேண்டும் என்கிற ஆசை தற்பெருமைக்கும் அகந்தைக்கும் இணையானது. இது ஈமான்இறைநம்பிக்கைக்கே உலை வைக்கக் கூடியதாகும். இதனால்தான் பாராட்டு பெறும் ஆசை, “முக்காடு அணிந்த இணைவைப்பு” என்று வர்ணிக்கப்படுகிறது.

இறைவனின் உவப்பை நாடியே மனிதன் செயலாற்ற வேண்டும் என்று இறைவன் மீதும் மறுமையின் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையை கோருகிறது. எந்த ஒரு செயலுக்கும் உலக ஆதாயங்களையே நோக்கமாகக் கொள்ளாமல் இறைவனிடமிருந்து கிடைக்கும் நற்கூலியை மட்டுமே எதிர்பார்க்க வேண்டும். மறுமையில் கிடைக்க இருக்கும் வெகுமதிகளைப் பெறுவதே நம் நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால், ஒரு “பகட்டு விரும்பி”யின் செயல் இதற்கு மாறாக அமைகிறது. மக்களிடமிருந்து பெயர், புகழ், விருதுகள் பெறுவதையே அவன் நாடுகிறான். தனது செயலுக்கான பங்குகள், விருதுகள் இந்த உலகிலேயே கிடைத்துவிட வேண்டும் என விரும்புகிறான்.

இவனுடைய தொண்டுகள், சேவைகள் எதுவுமே இறைவனுக்காகவும் இல்லை, இறைவனை நோக்கியும் இல்லை, இறை மார்க்கத்தை நோக்கியும் இல்லை. ஆகவே  இவன் செய்த தொண்டுகள் எவ்வளவு பெரிதாக இருந் தாலும் இறைவனின் மதிப்பீட்டில் அவை நற்செயல்களாகவே கணிக்கப்பட மாட்டா.

உயிரணுக்களைக் காசநோய் அரித்துவிடுகிறது. அதுபோல் இந்தப் பகட்டு எனும் நோய் வாய்மை உணர்வை அரித்துவிடுகிறது.” எத்துணை ஆழமான கருத்துகள். அதனால்தான் இறைத் தூதர்(ஸல்) அவர்கள், பகட்டு, முகஸ்துதி ஆகியவற்றில் கவனமாக இருக்கும்படி நம்மை எச்சரித்துள்ளார். ஒருவரை அளவுகடந்து முகத்துக்கு நேராகப் பாராட்டுபவரின் முகத்தில் மண் அள்ளி வீசுங்கள் என்னும் அளவுக்குக் கடுமையாகக் கண்டித்துள்ளார். தொழுகை போன்ற வழிபாடாக இருந்தாலும் சரி, ஜகாத் போன்ற தான தர்மங்களாக இருந்தாலும் சரி, பிறருக்கு உதவும் களப்பணியாக இருந்தாலும் சரி, பகட்டை ஒதுக்கிவிட்டு, படைத்தவனின் அருளைப் பெறுவதையே நோக்கமாகக் கொள்வோம்.

இந்த வார சிந்தனை

“அவர்களுக்குக் கேடுதான்..!  அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகவே செயல்படுகிறார்கள்.” (குர்ஆன் 107:6)

 

சிராஜுல்ஹஸன்

Related Stories: