எது சாபம், எது வரம்?

ஞானியிடம் சென்ற மன்னர், எனக்கு ஓர் இறுதி வாசகம் எழுதிக்கொடுங்கள்; அது வாழ்வின் உண்மையை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்றார். உடனே ஞானியும் மறுக்காமல் ஒரு வாசகம் எழுதிக்கொடுத்தார். அதைப்படித்த மன்னர் அதிர்ச்சி அடைந்தார். அது ஒரு சிறுகவிதை. ‘‘அப்பனும் இறப்பான், பிள்ளையும் இறப்பான், அதன்பின் பேரனும் இறப்பான்’’ என்றிருந்தது. மன்னர் ஞானியிடம், ‘‘பிறந்தவர்கள் அனைவருமே இறப்பார்கள் என்பது எல்லோர்க்கும் தெரியும். ஆனால் ஞானியாகிய நீங்கள் மக்களுக்கு வரம் தருவதுபோல் வார்த்தை இல்லாமல் சாபம் தருவதுபோல் வார்த்தைகள் எழுதலாமா? எனக்கோபத்தோடு கேட்டார். அதற்கு ஞானி, இதுவா சாபம்? இது வரம் அல்லவா என்றார். முதலில் அப்பன் இறப்பான், பிறகு பிள்ளை இறப்பான், பிறகு பேரன் இறப்பான், அதுதானே முறை!

உனது பெற்றோர் தங்களது இறுதிச்சடங்கை நீ செய்ய வேண்டும் என்றுதானே ஆசைப்படுவார்கள். நீ மறைந்து உனக்கு மகன் இறுதிச்சடங்கை செய்வதுதான் இயல்பு. அப்படியில்லாமல் நீ இருக்க உனது மகன் இறந்து நீ இறுதிச்சடங்கு செய்ய நேரிட்டால் உனக்கு எப்படி இருக்கும்? அதுதான் சாபம். அப்படியானால் இது வரம்தானே என்றார்.‘‘எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது. ஏனெனில் நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது. நாம் இறைப்பற்று இன்றி வலுவற்று இருந்தபோதே குறித்த காலம் வந்ததும் கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம்.

ஆனால் நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காக தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார். ஆகையால் இப்போது நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகி அவர் வழியாய் தண்டனையிலிருந்து தப்பி மீட்புப் பெறுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ? நாம் கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும் அவருடைய மகன் நமக்காக உயிரைக் கொடுத்ததால் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம். அப்படியானால் ஒப்புரவாக்கப்பட்டுள்ள நாம் வாழும் அவர் மகன் வழியாகவே மீட்கப்படுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ!

அது மட்டும் அல்ல, இப்போது கடவுளோடு நம்மை ஒப்புரவாக்கியுள்ள நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நாம் கடவுளோடு உறவு கொண்டு பெரு மகிழ்ச்சி அடைகிறோம். இம்மகிழ்ச்சியை நமக்குத் தருபவர் கடவுளே. ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது. அந்தப் பாவத்தின் வழியாய் சாவு வந்தது. அதுபோலவே எல்லா மனிதரும் பாவம் செய்ததால் எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது.’’  (உரோமையர் 5: 512) ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனை தீர்ப்பாய் அமைந்ததுபோல் ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது.

ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல் ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆனார்கள். பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது. இவ்வாறு சாவின் வழியாய் பாவம் ஆட்சி செலுத்தியதுபோல் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் அருள் ஆட்சி செய்கிறது. அந்த அருள்தான் மனிதர்களைக் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக்கி நிலை வாழ்வு பெற வழி வகுக்கிறது.

 ‘‘மணவைப்பிரியன்’’ஜெயதாஸ் பெர்னாண்டோ

Related Stories: