கார்த்திகை முதல் சோமவாரம் : குற்றால அருவியில் புனித நீராடி பெண்கள் சுமங்கலி பூஜை

தென்காசி: கார்த்திகை மாதத்தில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் சோமவார சுமங்கலி பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சோமவாரத்தில் பெண்கள் தங்களது கணவருக்கு நீண்ட ஆயுள் வேண்டி அதிகாலையில் குற்றால அருவியில் புனித நீராடி, அருகில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தின் முதல் திங்கள்கிழமையான நேற்று குற்றாலம் மெயினருவியில் அதிகாலை 2 மணி முதலே ஏராளமான பெண்கள் புனித நீராடினர். பின்னர் குற்றாலநாதர் கோயில் அருகில் உள்ள கன்னிவிநாயகர் கோயில் மற்றும் செண்பக விநாயகர் கோயிலில் 11 முறை சுற்றி வந்து பிரகாரத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பழம், மஞ்சள் வைத்து சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனர்.

இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அதிகாலை வேளையில் 2 மணி முதல் 7 மணி வரை ஆண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, பெண்கள் குளிக்க போலீசார் அனுமதித்தனர். பின்னர் 7 மணி முதல் 10 மணி வரை ஆண்களை குளிக்க அனுமதித்தனர்.

காலை 10 மணிக்கு மேல் மீண்டும் பெண்கள் கூட்டம் அதிகமானதால் ஆண்களை நிறுத்தி வைத்து விட்டு சிறிது நேரம் ஆண்களும், சிறிது நேரம் பெண்களும் என மாறி மாறி குளிக்க அனுமதித்தனர்.

Related Stories: