திருக்குறளில் போக்குவரத்து

குறளின் குறள் - 93

போக்குவரத்துக்குப் பயன்படும் பேருந்துகளில் திருக்குறள் எழுதப்பட்டிருப்பதைக் காண்கிறோம். அதுசரி. போக்குவரத்தைப் பற்றித் திருக்குறளில் திருவள்ளுவர் ஏதாவது எழுதியிருக்கிறாரா? எழுதியிருக்கிறார். திருவள்ளுவர் சில குறட்பாக்களில் சில செய்திகளை விளக்கும்போது அவர் காலத்தில் பயன்பட்ட போக்குவரத்துச் சாதனங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். சிவிகை, தேர், நாவாய், மாட்டு வண்டி ஆகிய நான்கும் அக்காலத்தில் மனிதர் பயணப்பட உதவியிருக்கின்றன என்பதைத் திருக்குறளிலிருந்து  தெரிந்து கொள்கிறோம்.

'அறத்தாறிது வென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.’ (குறள் எண் 37)

என்ற குறள் சிவிகையைச் சுமந்து வருகிறது. அறத்தினால் வரும் பயன் இன்னதென்று நூல்களைக் கொண்டு மெய்ப்பிக்க வேண்டியதில்லை. பல்லக்கைத் தூக்கிச் செல்பவனையும் அதில் பயணம் செய்பவனையும் கண்ட அளவில் அறிந்து கொள்ளலாம்.

'உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து.' (குறள் எண் 667)

ஒருவரது உருவம் சிறியதாக இருப்பதைப் பார்த்து ஏளனம் செய்தல் தகாது. உருண்டு செல்லும் பெரிய தேர்க்கு சின்னஞ்சிறிய அச்சாணிதான் ஆதாரம். சமுதாயத் தேருக்கு அச்சாணி போன்ற மனிதர்கள் இருப்பதுண்டு.

'கடலோடா கால்வல் நெடுந்தேர், கடலோடும்

நாவாயும் ஓடா நிலத்து.’ (குறள் எண் 496)

வலிய உருளைகள் கொண்ட தேர் நிலத்தில் ஓடுமேயன்றிக் கடலில் ஓடாது. அதுபோல் கடலில் ஓடும் நாவாய் நிலத்தில் ஓடாது. ஆகையால் இடமறிந்து செயல்பட வேண்டும்.

'மடுத்த வாயெல்லாம் பகடன்னான் உற்ற

இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.’ (குறள் எண் 624)

மாட்டு வண்டியில் பூட்டப்பட்ட காளைமாடு மேடு, பள்ளம் போன்ற தடைகள் பல நேர்ந்த போதெல்லாம் உறுதியோடு வண்டியை இழுக்கும். அதுபோல மனஉறுதி

கொண்டவனைச் சூழும். துன்பங்கள்தான் துன்பத்திற்கு உள்ளாகும். அவன் துன்பமடைவதில்லை.

'பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின்.' (குறள் எண் 475)

அதிக கனமில்லாத மயிலிறகுதானே என நினைத்து வண்டியில் அதை மிகுதியாக ஏற்றினால் அதன் பாரத்தால் வண்டி அச்சு முறிந்துவிட வாய்ப்பிருக்கிறது. எனவே ஒருவரின் வலிமை என்னவென அறிந்து அதற்குத் தக நாம் நடந்து கொள்ள வேண்டும். வள்ளுவர் காலத்தில் போக்குவரத்திற்குப் பயன்பட்ட சிவிகை என்கிற பல்லக்கு பின்னரும் பலகாலம் பயன்பட்டு வந்திருக்கிறது. அரசிகள் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குப் பல்லக்கில்தான் பயணப்பட்டார்கள். கல்கி, நா. பார்த்தசாரதி, அகிலன், சாண்டில்யன், ஜெகசிற்பியன், விக்கிரமன், கோவி மணிசேகரன், கெளதம நீலாம்பரன் உள்ளிட்ட சரித்திர நாவலாசிரியர்கள் எழுதிய வரலாற்று நாவல்களில் அரச குடும்பத்துப் பெண்கள் பல்லக்கில் பயணப்படுவதைப் பார்க்கமுடியும்.

பல்லக்கு தூக்குவதற்கென்றே தனி ஊழியர்கள் அமர்த்தப் பட்டிருந்தார்கள். பல்லக்குத் தூக்கிகள் (palanquin bearers) என்ற தலைப்பில், கவிஞரும் இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்பட்டவருமான சுதந்திரத் தியாகி சரோஜினி நாயுடு புகழ்பெற்ற ஆங்கிலக் கவிதை ஒன்றை எழுதியிருக்கிறார். தமிழில் 'பல்லக்குத் தூக்கிகள்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் சுந்தர ராமசாமி எழுதிய படைப்பு பிரபலமானது. பல நவீன நாடகக் குழுக்களால் நாடகமாகப் பலமுறை மேடையேற்றப்பட்ட பெருமைக்குரியது அது. ஆலயங்களில் உற்சவ மூர்த்தியை அலங்கரித்துப் பல்லக்கில் ஏற்றி ஊர்வலம் வரும் வழக்கம் இப்போதும் நடைமுறையில் உள்ளது.

பூப்பல்லக்கு, முத்துப் பல்லக்கு என ஆலயப் பல்லக்குகள் பலவகைப்பட்டவை. பலரைக் கவர்ந்த பல்லாக்கு கண்ணதாசனையும் கவர்ந்திருக்கிறது. 'பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம் போக, நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக’ என அவர் எழுதிய திரைப்பாடல், எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் டி.எம். செளந்தரராஜன் குரலில் 'பணக்காரக் குடும்பம்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்று இன்றளவும் உயர்ந்த தத்துவப் பாடலாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தேரைப் பற்றிச் சொல்கிறாரே வள்ளுவர், அன்று மன்னர்கள் தேரில்தான் பல்வேறு இடங்களுக்குச் சென்றார்கள். படர்வதற்குக் கொழுகொம்பில்லாமல் தவித்த முல்லைக் கொடிக்குத் தேரையே வழங்கிய வள்ளல் என்று பாரியைப் புகழ்கிறது சங்கத் தமிழ்.

நான்கு வகைப் படைகளை மன்னர்கள் வைத்திருந்தார்கள். யானைப் படை, குதிரைப் படை, காலாள் படை இவற்றோடு தேர்ப்படையும் முக்கியமான ஒன்று. தேரோட்டும் கலையை மன்னர்கள் அறிந்து வைத்திருந்தார்கள். நளன் மிகச் சிறந்த தேரோட்டி. ருதுபர்ண மகாராஜாவை நளன் தேரில் அழைத்துச் செல்லும் சம்பவம் ஒன்று புகழேந்திப் புலவர் எழுதிய நளவெண்பா நூலில் பிற்பகுதியில் வருகிறது. ருதுபர்ணனின் மேலாடையாகிய உத்தரீயம் மிக வேகமாக ஓடும் தேரிலிருந்து கீழே விழுந்ததாம். 'நிறுத்து, அதை எடுக்கவேண்டும்!’ என்று ருதுபர்ணன் சொல்வதற்குள் தேர் இருபத்து நான்கு காத தூரத்தைத் தாண்டிவிட்டதாம். அத்தனை விரைவாகத் தேரோட்ட வல்லவன் நளன் எனப் புகழ்கிறார் புகழேந்தி.

`

'மேலாடை வீழ்ந்தது எடுவென்றான் அவ்வளவில் நாலாறு காதம் நடந்ததே - தோலாமை

மேல்கொண்டான் ஏறிவர வெம்மைக் கலிச்சூதில் மால்கொண்டான் கோல்கொண்ட மா!’

கண்ணக் கடவுளே தேரோட்டிதான். கண்ணன் அர்ச்சுனனுக்குத் தேரோட்டியாக இருந்ததால்தானே, பார்த்த சாரதி என போற்றப்படுகிறான்? சென்னை திருவல்லிக்கேணியில் கோயில் கொண்டுள்ள பார்த்தசாரதியால் கவரப்பட்டவர் பாரதியார். பகவத் கீதை என்ற புனித நூல் சொல்லப்பட்ட இடம் போர்க்களத்தில் நின்று கொண்டிருந்த தேர்தான். கண்ணன் தேரோட்டிய செய்தியையும் தாம் எழுதிய கண்ணன் பாட்டில் பதிவுசெய்கிறார் பாரதி:

 

 'கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சில்

கலக்கமிலாது செய்வான் - பெருஞ்

 சேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில்

   தேர்நடத்திக் கொடுப்பான் - என்றன்

 ஊனை வருத்திடு நோய்வரும் போதினில்

   உற்ற மருந்து சொல்வான் - நெஞ்சம்

 ஈனக் கவலைகள் எய்திடும் போதில்

   இதஞ்சொல்லி மாற்றிடுவான்’

   

இப்போது பெரிய ஆலயங்கள் பலவற்றில் தேர் உண்டு. தேரை நிறுத்துவதற்கென்று தேர்நிலை தனியாகக் கட்டப்பட்டு தேர் வீதிவலம் வராத காலங்களில் அங்கு நிறுத்தப்படும். உற்சவ காலங்களில் கடவுள் தேரில் பவனி வருவார். கோபுரங்களில் மிக அழகிய கோபுரம் 'வில்லிபுத்தூர் கோபுரம் என்று சொல்லப்படுவது போல, தேர்களில் மிக அழகான தேர் திருவாரூர் ஆலயத் தேர் என்று சொல்லப்படுகிறது. திருவாரூர்த் தேரழகு என்ற சொல்லாட்சியே தமிழில் உண்டு. மரத்தாலான ஆலயத் தேர்கள் அழகிய சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டு கலைப் பொக்கிஷமாகத் திகழ்கின்றன. எல்லா வீதிகளிலும் ஆலயத் தேர் ஓடுவதும், தேரை எல்லாப் பிரிவு மக்களும் வடம்பிடித்து இழுப்பதும் மக்களிடையே ஒற்றுமையுணர்வு தோன்றப் பயன்பட்டிருக்கிறது.

கடவுள் இன்றளவும் தேரிலேறி ஓடி ஓடி எல்லா ஜாதி மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்குப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்! தேரைப் பற்றிச் சொல்கிற வள்ளுவர் தேரில் உள்ள அச்சாணி பற்றியும் பேசுகிறார். அச்சாணிதான் தேர் உருண்டு செல்ல உதவுகிறது. ஆனால் அது தேரைப் போல் பெரியதல்ல. மிகச் சிறியது ராமாயணம் என்ற பெரிய இதிகாசத்திற்கு அச்சாணியாய் விளங்கும் சம்பவம் ராமன் வனவாசம் போகும் சம்பவம்தான். அவன் வனத்திற்குப் போயிராவிட்டால் ராவண வதமே நிகழ்ந்திராது. அவதார நோக்கமே ராவணனை வதம் செய்வதுதானே?  

ராமாயணத்தின் அச்சாணி போன்ற அச்சம்பவத்திற்கு அடிப்படையாக அமைந்தது உண்மையிலேயே ஓர் அச்சாணி தான். ஒரு காலத்தில் தசரதர் ஓட்டிய தேரில் போர் வேகமெடுத்த தருணத்தில், அச்சாணி கழன்றுவிட்டது. அப்போது தசரதருக்குத் தேரோட்டியாக விளங்கிய அவர் மனைவி கைகேயி அளவற்ற துணிச்சலோடு அச்சாணி கழன்று விடாமல் ஓடும் தேரிலேயே சக்கரத்தின்மேல் தன் கையை வைத்துத் தடுத்து வீரச் செயல் புரிந்தாள். அதனால் வெற்றியடைந்த தசரதர் தன் வெற்றியைத் தனக்குச் சாத்தியப்படுத்திய மனைவி கைகேகிக்கு இரண்டு வரங்களைக் கொடுக்க முன்வந்தார்.

அந்த வரங்களைப் பின்னர் வாங்கிக் கொள்கிறேன் எனத் தவணை கேட்டாளே கைகேயி, அங்கேதான் சூடு பிடிக்கிறது ராமாயணம். கழலவிருந்த அச்சாணி, கைகேயியின் சாதுரியத்தால் கழலாமல் நின்றுவிட்டாலும் கூட, பின்னாளில் ராவணனின் பத்துத் தலைகளும் அவன் கழுத்திலிருந்து கழன்று விழ அல்லவா காரணமாகிவிட்டது! சிறிய அச்சாணி பெரிய தேரைத் தாங்குவதுபோல் நம் தேசத் தலைவர்களில் ஒருவர் உயரத்தால் சிறியவராக இருந்தாலும் தேசத்திற்கே பெருமை சேர்த்தார். அவர் லால்பகதூர் சாஸ்திரி. குள்ளமான ஆனால் உயர்ந்த மனிதர் அவர்! 'ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ என நம் நாட்டுப் போர்வீரர்களுக்காகவும் நம் விவசாயிகளுக்காகவும் உரத்துக் குரல் கொடுத்தவர்.

தாம் ரயில்வே மந்திரியாக இருந்த காலகட்டத்தில் நடந்த அரியலூர் ரயில் விபத்திற்குத் தாமே பொறுப்பேற்றுப் பதவியிலிருந்து ராஜினாமா செய்தவர். இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை வந்தபோது எல்லோரும் திங்கட்கிழமை தோறும் ஒருவேளை உணவைத் துறக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார். பாரத தேச மக்கள் அனைவரும் நிலைமை சீராகும் காலம் வரை அவரது வேண்டுகோளுக்கு அடிபணிந்தார்கள் என்பதே அவர்மேல் மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும். திருவள்ளுவர் குறிப்பிடும் நாவாய் என்பது ஓடம் தான்.

ராமாயணத்தில் புகழ்பெற்ற ஓர் ஓடக்காரன் வருகிறான். அவனே குகன். ராமபிரானின் பேரன்பைப் பெற்றவன். வனவாசம் செல்லும் ராமனையும் லட்சுமணனையும் சீதா தேவியையும் தன் ஓடத்தில் அழைத்துக் கொண்டு கங்கையின் அக்கரை சேர்க்கிறான் அவன். அவன் செய்த அந்தப் பணிக்கு தன்னால் இயன்ற கூலி தரவேண்டும் என விரும்புகிறது ராமன் உள்ளம். ஆனால் குகன் கூலி வாங்கிக் கொள்ள மறுத்துவிடுகிறான் என எழுதுகிறார் ராமசரித மானஸ் என்ற இந்தி ராமாயணத்தை எழுதிய துளசிதாசர். மறுப்பதற்குக் குகன் சொல்லும் காரணம் வெகு அழகு.

ஒரே தொழிலில் ஈடுபட்டோர் தங்களுக்குள் கூலி வாங்கிக் கொள்ளக் கூடாது என்பது சாஸ்திரம். ராமனும் ஓர் ஓடக்காரன் தானே? அவன் பிறவிப் பெருங்கடலை ஜீவான்மாக்கள் கடந்து முக்திக் கரை சேர்வதற்காக ஓடம் ஓட்டும் கடவுளாகிய ஓடக்காரன் அல்லவா என்கிறான் குகன். ராமன் தெய்வம்தான் என்ற ரகசியம் அந்த ஏழை வேட்டுவனுக்குப் புலப்பட்டு விட்டதாக வளர்கிறது துளசி ராமாயணம்.  'அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’ என்ற கண்ணதாசன் திரைப்பாடலை யார்தான் மறக்கமுடியும்? 'ஆண்டவன் கட்டளை' படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில், டி.எம்.செளந்தரராஜன், பி. சுசீலா குரல்களில் ஒலித்த அந்தப் பாடல் இன்றளவும் கேட்போரின் மனத்தைத் தாலாட்டிக்

கொண்டிருக்கிறது.

'காற்றினிலும் மழையினிலும்

   கலங்கவைக்கும் இடியினிலும்

    கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும்’

 

எனத் தம் பாடல் வரிகளில் ஓர் ஓடத்தையே அசைத்துக் காட்டி நம் மனத்தையும் அசைய வைக்கிறார் கவியரசர். 'ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும் கரையினிலே’ என 'காத்திருந்த கண்கள்’ திரைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலக் குரலில் ஒலிக்கும் கண்ணதாசன் பாடலிலும் தத்துவச் சிந்தனைகளைச் சொல்லிக் கொண்டே ஓடம் ஓடுகிறது. திரைப் பாடல்களில் மட்டுமல்ல, 'வாழ்க்கைப் படகு, படகோட்டி’ எனத் திரைப்படங்களின் பெயர்களிலேயே படகு இடம்பெறுகிறது. ஓடத்தை மையப்படுத்திய ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை ஒன்று உண்டு.

வெகுநாள் தவம் செய்த ஒருவன் தான் தண்ணீரில் நடக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளதாகப் பெருமை பேசினானாம். பரமஹம்சர் அவன் பெற்றுள்ள ஆற்றல் நாலணா பெறும் என்கிறார். ஏன் தெரியுமா? அந்த ஆற்றல் இல்லாதவன் ஓடக் காரனுக்கு நாலணா கொடுத்து அக்கரைக்குப் போகப் போகிறான், அவ்வளவு தானே? மனத்தை அடக்கி இறைத் தியானம் செய்து முக்தியை அடைய உதவாத இத்தகைய வித்தைகளால் என்ன பயன் என்று கேட்கிறார் பரமஹம்சர். 'சினமடக்கக் கற்றாலும் சித்தியெலாம் பெற்றாலும்  மனமடக்கக் கல்லார்க்க வாய்ஏன் பராபரமே?’என்ற தாயுமானார் வரிகளின் விளக்கம்தான் பரமஹம்சர் சொல்லும் கதை...

மாட்டு வண்டியைப் பற்றிய குறிப்பும் வள்ளுவத்தில் வருகிறது. மாட்டு வண்டிகள் ஒருகாலத்தில் நாடெங்கும் ஓடிக் கொண்டிருந்தன. இப்போது இருசக்கர வாகனங்கள் பெருகிவிட்டதாலும் நகர வாழ்க்கையில் மாடுகளைப் பராமரிப்பது சங்கடமாக இருப்பதாலும் பெட்ரோல் வாகனங்கள் தரும் வேகத்தை மாட்டு வண்டிகள் தராததாலும் மாட்டு வண்டிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. என்றாலும் கிராமப் புறங்களில் இன்றும் கூட மாட்டு வண்டிகள் ஓடத்தான் செய்கின்றன.

நடிகர் திலகத்தின் நடிப்பால் திரைக்காவியமாக ஒளிவீசிய வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம் எழுதிய பாட்டு மாட்டு வண்டியை மையமாகக் கொண்டதுதான். `மாட்டுவண்டி பூட்டிக்கிட்டு மாப்பிள்ளையைக் கூட்டிக்கிட்டு` என்ற பாடலை மறக்க முடியுமா? வள்ளுவர் நிலத்திலும் நீரிலும் ஓடும் சில வாகனங்களைப் பற்றி எழுதியுள்ளார். திருக்குறள் தரும் சிந்தனைகள் தமிழர்களின் மனத்தில் பலப்பல நூற்றாண்டுகளாய் ஓடிக்கொண்டே இருக்கின்றன. தமிழர்களின் மனம் தறிகெட்டு ஓடாமல் அந்தச் சிந்தனைகள்தான் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றன.

- திருப்பூர் கிருஷ்ணன்

(குறள் உரைக்கும்)

Related Stories: