பழநி மலைக்கோயிலில் கந்த சஷ்டி விழா : சண்முகர் திருக்கல்யாணம்

பழநி: பழநி கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நேற்று காலை நடந்த சண்முகர் திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 8ம் தேதி மலைக்கோயிலில் காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு மலைக்கோயிலில் வள்ளி  தெய்வானை சமேதரராக சண்முகருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி துவங்கியது. திருக்கல்யாணத்தையொட்டி வள்ளி  தெய்வானை சமேத சண்முகருக்கு 16 வகையான அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. பட்டாடை அணிவிக்கப்பட்டு, பல்வேறு ஆபரணங்கள் பூட்டப்பட்டது. பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க மங்கள நாண் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து மாலை மாற்றுதல் போன்ற திருமண சடங்குகள் நடத்தப்பட்டன.

பக்தர்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், வளையல் உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டன. அன்னதானக்கூடத்தில் பக்தர்களுக்கு அறுசுவை திருமண விருந்து நடந்தது. நிகழ்ச்சியில் பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், சித்தனாதன் சன்ஸ் சிவநேசன், செந்தில்குமார், கந்தவிலாஸ் செல்வக்குமார், நவீன் விஸ்ணு, கண்பத் கிராண்ட ஹோட்டல் உரிமையாளர் ஹரிஹரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நேற்றிரவு 7 மணிக்கு ரிஷப லக்னத்தில் பெரியநாயகி அம்மன் கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. டிஎஸ்பி விவேகானந்தன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Related Stories: