கோர்ட் வழக்கை முடித்து வைப்பார் கொடிமரத்து மாடன்

ஆலயங்களில் தேர் ஓடும் முறை வந்தபோது திருச்செந்தூர் முருகன் கோயிலிலும் தேர் ஓட வேண்டும் என்று எண்ணிய நிலச்சுவந்தார்கள்,  கோயிலுக்கு கொடிமரம் வைக்க வேண்டும், மார்கழி மாதம் திருவிழா நடத்த வேண்டும் என முடிவு செய்கின்றனர். உடனே, அப்பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் ஆசாரி என்பவர் தலைமையில் 25 பேர் கொண்ட குழுவினர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்திற்கு மரம் வெட்ட புறப்பட்டனர். 21 வண்டி கட்டி பயணத்தை தொடர்ந்தனர். மரங்களில் கூட தெய்வங்கள், பூதங்கள், ஆவிகள் குடியிருக்கும் என்ற நம்பிக்கை அக்காலத்தில் அதிகம் இருந்தது. அதன் காரணமாக தன்னோடு மாந்திரீகம் தெரிந்த நபரை அழைத்துச் செல்வது நல்லது என்று எண்ணிய ஆறுமுகம் ஆசாரி, நாங்குநேரி அருகேயுள்ள ஏர்வாடி சென்று அங்கு மாந்திரீக சக்தியில் புகழ்பெற்று திகழ்ந்த மந்திரவாதியான சின்னதம்பி மரைக்காயரை தன்னோடு வருமாறு அழைத்தார். அவரும் ஒப்புக்கொண்டு புறப்பட்டார்.

அந்தநேரம் அவரது மனைவி  “நான் பொல்லாத  கனவொன்று நேற்று கண்டேன். வீட்டை விட்டு நீங்கள் வெளியே இன்று மட்டும் செல்லாதீர்கள் என்றுரைத்தாள். அவர் மனைவி சொல்லை மதியாமல் புறப்பட்டார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க களக்காடு மலையில் கொடிமரத்திற்கான மரத்தை தேடினர். கிடைக்கவில்லை அதனால் மலையடியோரமாக அவர்கள் பயணம் தொடர்ந்தது. ஒரு வழியாக மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள காக்காச்சி மலைக்கு வந்தனர். அங்கு அவர்கள் எதிர்பார்த்து வந்த உயர்ந்து வளர்ந்திருந்த சந்தன மரத்தைக் கண்டனர். இந்த மரம் கொடிமரத்திற்கு ஏற்றதானதாகும் என முடிவு செய்து, ஆறுமுகம் ஆசாரி, சின்னதம்பி மரைக்காயரிடம் அந்த மரத்தை காட்டி, இதை வெட்டலாமா? என்று கேட்க, மரைக்காயர் மை போட்டு பார்க்கிறார். அப்போது அந்த மரத்தில் மாயாண்டி சுடலை உள்ளிட்ட 21 தேவதைகள் மரத்தில் குடியிருப்பது தெரிய வருகிறது.

தேவதைகளை மந்திர சக்தி மையினால் மடக்கிக்கொள்ளலாம் என்று கருதிய மரைக்காயர், மரத்தை வெட்டுமாறு கூறுகிறார். மரத்தை தொழிலாளிகள் வெட்டுகின்றனர். முதல் வெட்டு மரத்தின் மீது பட்டதும், வெட்டப்பட்ட கோடாரி சிதறி தொழிலாளிகள் உள்பட 24 பேரை பலி வாங்கியது. இதைக்கண்டு அஞ்சி நடுங்கிய ஆறுமுகம் ஆசாரி, சின்னதம்பி மரைக்காயர் அருகே ஓடி வருகிறார். அவர், மரத்தின் கிழக்கு திசையில் வாயிலிருந்து ரத்தம் கொட்டியபடி இறந்து கிடந்தார். அவரை பார்த்துக் கொண்டிருக்கும் போது நண்பகல் நேரம் வெள்ளிக்கிழமை, மரத்தின் மேலிருந்து ஆதாளி சத்தம் கேட்டது. ஆறுமுகம் ஆசாரி அஞ்சி நடுங்கி, உயிர் பயம் கொண்டு ஓடினார். அவரை பின் தொடர்ந்து 21 தேவதைகளும் ஓல மிட்டு ஓடி வந்தது. மலையடிவாரம் வந்த ஆசாரி, மகாலிங்கம், சொரிமுத்தய்யன், பூதத்தாரும் வீற்றிருக்கும் ஆலயம் வந்தார். சாஸ்தாவின் சந்நதியில் சாஸ்டாங்கமாக விழுந்து கதறி அழுகிறார்.  

‘‘சொரிமுத்து அய்யா காப்பாத்து’’ என கதறுகிறார். அவரின் அழு குரல் கேட்டு, மனமிறங்கிய சொரிமுத்தய்யன் அவர் முன் தோன்றினார். அஞ்ச வேண்டாம் ஆறுமுகம், என் சகோதரன் ஆறுமுகனுக்கு கொடிமரம் வைக்கும் நோக்கில் வந்த உனது பயணம் வெற்றியாகும். இங்கேயே நில் என்று கூறியவாறு, வெளியே

வருகிறார். ஆதாளி போட்டுக்கொண்டிருந்த 21 தேவதைகளையும் அழைத்தார். என்ன வென்று கேட்க, நாங்கள் குடியிருந்த மரத்தை வெட்டினான் இவன் என்று கூறின தேவதைகள். உடனே சொரிமுத்துஅய்யன் ‘‘உங்களுக்கு குடியிருக்க எனது இடத்தில் இடம் தருகிறேன். அந்த மரத்தை நீங்களே என் சகோதரன் அருளாட்சி புரியும் செந்தூருக்கு கொண்டு சென்று ஒப்படைத்து விட்டு வாருங்கள். இங்கு நிலையம் கொண்டு இளைப்பாருங்கள். எனது ஆலயம் அருகே அமரும் நீங்கள் கேட்ட பூஜையை விரும்பி வாங்கிக்கொள்ளுங்கள். என்னை நாடி வரும் பக்தர்கள் உங்களை பூஜிப்பார்கள். அவர்களுக்கு நல்லருள் புரிந்து, மக்களை காத்து வாருங்கள். முதலில் கொடிமரத்தை கொண்டு சேருங்கள்.

மாயாண்டி உனது மாய விளையாட்டுகள் போதும். கொடிமரம் செந்தூர் செல்ல நீ தான் பொறுப்பு’’ என்று உத்தரவிட்டார் சொரிமுத்தய்யனார். பின்னர் அய்யனாரின் உத்தரவை ஏற்று சாந்தமான சுடலைமாடன் தலைமையில் 21 தேவதைகள் திருச்செந்தூருக்கு கொடிமரத்தை கொண்டு சேர்த்தனர். திருச்செந்தூரில் கொடி மரத்தின் கீழ் அவருக்கு சிறிய பீடம் கொடுத்து கொடிமாடன், கொடி மரத்து மாடன் என நாமங்களில் சுடலைமாடன் அழைக்கப்படுகிறார். கொடியேற்றும் போதும், தேரோட்டத்தின் போதும் இவருக்கு சிறப்பு பூஜை உண்டு. கொடிமரத்து மாடன், கொடிமரத்துக்கு மட்டுமன்றி தேருக்கும் ஊருக்கும் காவலாக இருப்பது மட்டுமல்லாமல் நம்பி வரும் பக்தர்களின் வழக்குகளுக்கு தீர்வு அளிக்கும் நாட்டாண்மையாக இருக்கிறார். கோர்ட்டு வழக்குகள் முடிவு பெறாமல் வாய்தா தள்ளிப்போய் அவதியுறும் அன்பர்கள் கொடிமரத்து மாடனிடம் முறையிட்டால் உடனே தீர்ப்பு வருகிறது என்கிறார்கள் பலன் பெற்ற பக்தர்கள்.கொடிமரத்துக்கு காவலாய் சுடலைமாடன் தலைமையில் வந்த 21 தெய்வங்கள்.

1. சிவனிணைந்தபெருமாள், 2. தவசிதம்புரான், 3.பேச்சி, 4.முண்டன், 5.பிரம்மசக்தி, 6. பலவேசக்காரன், 7. மாசானம், 8.கட்டை ஏறும்பெருமாள், 9.தளவாய்மாடன், 10. தளவாய் மாடத்தி, 11. செங்கிடாகாரன், 12.இருளப்பன், 13.பாதாளகண்டி 14. கொம்புமாடன், 15. கருப்பன், 16. கருப்பண்ணசாமி, 17. கருப்பசாமி,  18. புலமாடன், 19. கரடிமாடன், 20. மாஇசக்கி, 21. கருங்கிடாகாரன் ஆகிய தெய்வங்களாகும். இவர்களுடன் கொலைகளம்(படுகளம்) கண்டு தெய்வமான 21 பேரும் வந்தனர்.

1. திம்மக்கா, பொம்மக்காவுடன் பட்டவராயன், 2. சின்னதம்பி, 3. வண்ணார மாடன், 4. இளையபெருமாள்(புதியவன்), 5. கசமாடன். 6. அத்திமாடன், 7. சப்பாணிமாடன், 8. மாலையம்மன், 9. மாடத்தி அம்மன், 10. கன்னியம்மன், 11.பாலம்மன், 12. தடிவீரன் 13. சிவனணைஞ்ச பெருமாள்(சின்னனஞ்சி),14. வன்னியராயன்(வென்னிமால), 15. பிச்சகாலன்(பிச்ச போத்தி), 16. இடைக்கரை புலமாடசாமி, 17. காத்தவராயன், 18.பொன்னிறத்தாள், 19. பட்டாணிசாமி, 20. ஐவராசா, 21. வெங்கலராசன் ஆகிய படுகள தேவதைகளும் வந்துள்ளனர்.

சு. இளம் கலைமாறன்

Related Stories: