உடலும், உள்ளமுமே மோட்சத்துக்கு அழைத்துச் செல்லும் சாதனங்கள்!

அபிராமி அந்தாதி : சக்தி தத்துவம் - 28

(சென்ற இதழ் தொடர்ச்சி)

‘புரிசடையோன்’ -  புரி என்பது இடத்தை குறித்தது. கங்கை தங்கியிருப்பது சிவனின் தலைச் சடையில். ஆற்றல்மிகு கங்கையைத் தன் சடையில் கட்டி, கங்கையின் ஆற்றலை வற்றச் செய்து, அவளை அடிமை கொண்டு, அருளிய ஆற்றல்மிகு சடையை ‘புரிசடை’ என்றும், அதனைக் கொண்ட சிவனை ‘புரிசடையோன்’ என்றும் சிறப்பித்து கூறினார்.  வடமொழி ‘கங்காதரேஸ்வரர்’ எனப் போற்றுகிறது.

‘புடையாள்’ - புடை என்பது கோயிலில் மூலஸ்தானத்தை சுற்றியிருக்கின்ற கோஷ்டம் என்ற, பிறை வடிவம் கொண்ட விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர் துர்க்கை ஆகியோர் எழுந்தருளியிருக்கும் பகுதி. பிறையிலிருந்து புடைத்து வெளிப்படுவதால் ‘புடையாள்’ என்றார்.

‘உடையாள்’ - சிவலிங்கத் திருமேனியில் அரச இலை போல இருக்கும் பகுதியை பிண்டிகை என்றும், ஆவுடையார் என்றும் குறிப்பிடுவர். இதையே சக்தி வழிபாட்டில் உடையாள் எனப்படுகிறது. சிவபெருமானிடம் இணைபிரியாது இருக்கக்கூடிய சக்தியின் வடிவமே இது.

‘பிங்கலை’ - சிவன் கோயில்களிலுள்ள கொடி மரத்தில் இறைவனை வழிபடும்போது தர்ப்பை மற்றும் துணியை முறுக்கி கொடிமரத்தில் சுற்றி அதையே உமையம்மையாக பூஜிப்பர். அந்த உமையம்மைக்கு பிங்கலை என்று பெயர். இந்த கொடி மரத்தை கொம்பு என்றும், அதை சுற்றி இருக்கும் ‘பிங்கலை’ என்ற சக்தியை கொடி என்றும் குறிப்பிடுவர். இதையே அபிராமிபட்டர் ‘கொடியே இளவஞ்சிக் கொம்பே’ (பாடல் - 22) என்பதனாலும் அறியலாம்.

‘நீலி’ - சிவாலயங்களில், திருவிழாக் காலங்களில் சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், நடராஜர், சம்ஹார மூர்த்தி என்ற பல்வேறு இறைதிரு உருவங்களை சிறப்பித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இறை திருமேனிக்கு வழிபாடு செய்வார். அந்த வகையில் பிக்ஷாடனர் என்ற இறையுருவை சிறப்பிக்கும்போது மோகினி என்ற ஒரு சக்தியை வழிபடுவர். பாற்கடலிலிருந்து எடுத்த அமுதத்தை அசுரர்கள் உண்ணக்கூடாது, தேவர்கள் மட்டுமே உண்ணவேண்டும் என்பதற்காக, மகாவிஷ்ணு, அழகிய பெண் வடிவம் கொண்டு, அமுதத்தைவிட தன்னை மோகிக்கும்வகையில் வயப்படுத்திய திருக்கோலமாகும் மகாவிஷ்ணுவின் இந்த மோகினி வடிவத்தையே ‘நீலி’ என்று குறிப்பிடுகின்றார். இவ்வடிவை வணங்குவதால் உடல் உணர்வு தாழ்ந்து உயிர் உணர்வு பெற்று, ஆன்மா சிவஞானத்தை அறிய வழிசெய்யும். மகாவிஷ்ணுவின் நீல வண்ணத்தால் ‘நீலி’ என அழைக்கப்பட்டார் அம்பிகை.

‘செய்யாள்’ - சேய் என்ற சொல்லின் முதல் எழுத்து, மாத்திரை குறைந்து செய் என்றாகி, அல் என்ற பெண் விகுதி சேர்ந்து ‘செய்யாள்’ என்றானது.இச்சொல்லிற்கு குழந்தையை கையில் கொண்டவள், அதாவது வழக்குச் சொல்லில் கைப்பிள்ளைக்காரி என்பர். தேவி மஹாத்மியம் இவளை ஸ்கந்த மாதா என்கிறது. உமையம்மையின் புதல்வர்களை தனியாகக் குறிப்பிடும் சொற்களைக் கொண்டு இதை உறுதி செய்து கொள்ளலாம்:

பிள்ளையார் - கணபதி; சேய் - முருகன்; மைந்தன் - அகோரவீரபத்திரர்; வடு - பைரவர்; ஐயப்பன் - சாஸ்தா. இந்த வகையில் முருகனை கைப்பிள்ளையாக சுமந்திருக்கும் உமையம்மையை ‘செய்யாள்’ என்பர். திருவழுவூரில் கிருத்திவாசருடைய சக்தியாக விளங்கக்கூடிய உமையம்மையின் கையில் முருகன் இருப்பதைக் காணலாம். திருவெண்காடு பிள்ளையிடுக்கியம்மன் என்ற அம்மனைக் கொண்டும் அறியலாம்.

‘வெளியாள்’ - வெளி என்பது ஆகாயத்தைக் குறித்தது. ஆகமங்களில் நடராஜர் கோயிலை அம்பலம் என்று குறிப்பிடுகிறார்கள். அம்பலம் என்பது நீள் சதுர வடிவில் அமைந்த, மேல்கூரையை கொண்ட, ஆடுவதற்கு தக்க வகையில் அமைக்கப்பட்ட ஆடல் அரங்கம். இதை வடமொழியில் ‘சபை’ என்கிறார்கள். இந்த சபையானது எப்பொழுதும் இரண்டு கூரைகளால் அமையும். ஒரு கூரையில்தான் நடராஜப்பெருமான் எழுந்தருளியிருப்பார்.

அதன் எதிரில் உள்ள கூரையில் எந்த தெய்வமும் எழுந்தருளச் செய்யப்படாமல், தூண்களுடன் கூடிய வெற்றிடமாய் அமையும். இந்த இடத்தில்தான் நடராஜப்பெருமானுக்காக எழுந்தருளச் செய்யப்பட்ட சிறிய லிங்க வடிவத்தை பெட்டகத்தில் வைத்து பூஜிப்பர். நடராஜருக்கு சபைக்குள்ளே அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதில்லை. இந்த முன் கூரையில்தான் நடைபெறும். இந்த இடத்தை அம்பலம் என்கிறார்கள். இந்த இடத்திற்கு மேல் உள்ள கலசத்தில் ஒன்பது சக்திகளை தியானித்து பூஜிக்கிறார்கள். அந்த சக்தியையே அபிராமிபட்டர் வெளியாள் என்று குறிப்பிடுகின்றார். ‘வெளிமுதற் பூதங்களாகி விரிந்த அம்மே’ (பாடல்- 17) என்பதனாலும் அறியலாம்.

‘பசும் பெண்’ - பசும் பொன் என்றும் குறிப்பிடலாம். வழக்கு சொல்லாக பொன் என்ற வார்த்தையும் இலக்கியத்தில் பெண் என்ற வார்த்தையையும் பயன்படுத்துகிறார்கள். சிவாலயங்களில் அமைந்திருக்கும் உலா திருமேனிகளை ஐம்பொன் என்பர். உலாத் திருமேனிகள் அனைத்தும் எந்த வடிவமாக இருந்தாலும் (சோமாஸ்கந்தர், அம்பிகை, நடராஜர்) உமையம்மையின் திருமேனியாகவே கருதப்படுகின்றன. இதை, எந்த இறைவனை பூஜித்தாலும் ‘ஆதாரசக்தையே நமஹ’ என்று உமையம்மையை பூஜித்த பிறகே பிற மந்திரங்களைக் கூறுவதன் மூலமாக உணரலாம். இதையே பட்டரும், ‘ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து’ என்கிறார்.

‘பசும் பெண்’ என்ற இந்த வார்த்தையை, ஒரு சிவாலயத்தில் விழாக்காலங்களில் பூஜிக்கப்படும் விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள், சண்டீசர், அஸ்திர தேவர், பள்ளியறை சொக்கர், போகசக்தி, சந்திரசேகரர், நடராஜர், மாணிக்கவாசகர். அந்தந்த கோயிலுக்குரிய உலாத் திருமேனிகள் அனைத்தையும் குறிப்பிடப் பயன்படுத்துவர். இந்த உலாத் திருமேனியை வழிபடுபவர்கள், தாம் ஆலயத்திற்கு வராவிடினும் உமையம்மையின் கருணைக்கு பாத்திரமாவார்கள். அந்த கருத்தை மனதில் கொண்டுதான் நேரில் அபிராமியை பார்க்கும் பட்டர், ‘பசும் பெண்’ என்றார்.

‘‘கொடியே’’ - ஐந்து தத்துவத்தை ‘கொடி’ என்ற வார்த்தையால் குறிப்பிடுவார்கள். கொடிமரம், ஆன்மாவில் உமையம்மை எழுந்தருளியிருக்கக்கூடிய இடைகலா, பிங்களா, சுஷும்னா என்ற நாடிகளை (திருக்கடையூரில் மட்டும் பிஞ்சிளம் கொடியையும் கொடி என்று குறிப்பிடுகின்றார்) ஆன்மாவை சார்ந்து இறையருளை அதற்குள் செலுத்தி, உடல் வேறு, உயிர் வேறு, சிவம் வேறு என்று நம்மை செய்யவல்லதாகிய சக்தியையே ‘கொடி’ என்று குறிப்பிட்டார்.

திருக்கடையூரில், உமையம்மை வடிவத்தை ஸ்ரீவித்யா உபாசனைக்குரிய வகையில் அமைந்திருப்பது நோக்கத்தக்கது. திருக்கடையூரில் இந்தப் பெயருடைய தெய்வங்கள் எங்கே இருக்கின்றன என்று காண்போம்:

மங்கலை - அபிராமி சந்நதியில் உள்ள ஆடிப்பூர அம்மன் உலாத்திருமேனி;

செங்கலசம் முலையாள் - இலக்குமி சந்நதி;

மலையாள் - சோமாஸ்கந்தர் உடன் அமர்ந்திருப்பவள்;

வருணச்சங்கலை செங்கலை - சோமாஸ்கந்தர் உடன் நின்றவள்;

சகலகலா - பரிவார சந்நதியில் எழுந்தருளியுள்ளாள்;

புடையாள் - கோஷ்டத்தில் எழுந்தருளியிருக்கின்ற துர்க்கை;

உடையாள் - சுயம்புவாகிய அமிர்தகடேஸ்வரர் சூழ அமைந்துள்ள ஆவுடையார்;

பிங்கலை - விழாக்காலங்களில்

கொடிமரத்தில் எழுந்தருள் பவள்;

நீலி - பிக்ஷானருடன் வணங்கப்படும் சக்தி (உலாத் திருமேனி);

செய்யாள் - சுப்ரமண்யர் சந்நதிக்கு வலப்புறம் கையில் குழந்தையுடன் காட்சியளிப்பவள்;

வெளியாள் - விஞ்ஞான சபை, காலாந்தக சபை என்ற திருக்கடையூர் சபை;

பசும்பெண் - திருக்கடையூர் விழாக்களில் வீதிக்கு எழுந்தருளும் அனைத்து திருமேனி களும்;

கொடியே - - பிஞ்சிளங்கொடி - திருக்கடையூர் தல விருட்சங்களில் ஒன்று.

திருக்கடையூர் ஆலயத்தில் அபிராமி பட்டர் பரிசாரகராகப் பணியாற்றியதால் அனைத்து உமையம்மையின் வடிவத்தையும் அறிந்து, தெளிந்து, அவற்றின் அருளைப் பெற்று, பிறர் பெறும் வகையில் அந்தாதியையும் பாடியது அவரது தனிச்சிறப்பேயாகும்.

கொடியே! இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த

    படியே! மறையின் பரிமளமே! பனிமால் இமயப்

பிடியே! பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே!

    அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே பாடல் - 22

மக்களுக்கு ஒரு கருத்தை செம்மையாக மனதில் பதிப்பதற்கு மூன்று வகையான வழிமுறைகளை கையாள்கிறது சமய உலகம். உள்ளத்தில் பதித்து பக்தி உணர்வைத் தூண்டுவது, அறிவில் பதித்து ஞானத்தைத் தூண்டுவது, செயலாக செய்வித்து அனுபவத்தை தூண்டுவது, இந்த வகையில் உள்ளத்தில் சமயக் கருத்தை பதிப்பதற்கு நடந்த சில நிகழ்வுகளை எடுத்துக்காட்டி விளக்குவது. (புராணம் என்ற சொல்லிற்கு, நடந்தது என்று பொருள்) உமையம்மை குறித்த புராணங்களில் சொல்லப்பட்ட உலகத்தின் தோற்றம் குறித்த குறிப்பையும், உமையம்மைக்கு விநாயகர் பிறந்த வரலாற்றையும் மிக நுட்பமாக இதில் குறிப்பிட்டுள்ளார்.

உமையம்மையை குறித்த மெய் விளக்கத்தையும், அவளை அடைந்து அருளைப் பெறும் வழியையும் சாத்திரங்கள் தெரிவிக்கின்றன. வேதம் கற்பதற்கு, அதன் பொருளை முழுமையாக அறிவதற்கு வேதாங்கத்தையும், மிக நுட்பமாக இப்பாடல் வரிகளில் வெளிப்படுத்தியுள்ளார். இந்த உலகத்தை கர்மபூமி என்கின்றன சாத்திரங்கள். செயல்பட்டாலன்றி அருள் அனுபவத்தை அடைய இயலாது. உமையம்மையை நோக்கி அருளைப் பெறச் செய்ய வேண்டிய வேள்வி குறித்த விளக்கங்களை தரும் பூர்வ மீமாம்சா போன்ற செயலாக்க முறைகளை செம்மையாக பாடலை பயில்வோர்க்கு அறிவுறுத்தியுள்ளார்.

புராணங்களில் மூலம் உள்ளத்தையும், சாத்திரங்களின் மூலம் அறிவையும், செயல்முறைகளின் மூலம் அனுபவத்தையும் அடைய முயற்சி செய்கின்றவர்க்கு அவர் உள்ளத்தில் தோன்றுகின்ற, அறிவில் தோன்றுகிற மாறுபாடுகள், அதன் மூலம் கிடைக்கும் அனுபவம் இவைகள் சரிதானா? தவறாக புரிந்து கொள்கிறோமா? எப்படி சரி செய்து கொள்வது என்பதையே உபாசனையில் படிநிலை வளர்ச்சி என்பார்கள். அதையும் இப்பாடலில் சுருக்கமாக விளக்கி உள்ளார்கள்.

‘‘கொடியே’’ -

இந்த வார்த்தையால் ஏழு பொருள்களை சாத்திரம் சொல்கின்றது. கொடி என்பது கொம்பை சார்ந்து படர்வது. உமையம்மை கொடியாகவும், சிவபெருமான் கொம்பாகவும், சிவம் சார்ந்து இருக்கும் சிவசக்தியையே கொடியாகவும் கூறுவர். கொடி என்பது பசுமை நிறம் கொண்டது. பச்சை நிறத்தில் உள்ளவளாக தியானிப்பது, பயிர் செழிப்பாக உழவுத்தொழில் வளரவும் அருளளிப்பது. ஆகையால் நிலம் செழிக்க கொடியே என்று அழைத்தார். (‘பச்சைக் கொடியை பதித்து நெஞ்சில்’ பாடல்- 48)

மிருத்தியுஞ்ஜய மூலமந்திர ரகசியமானது வெள்ளரிப்பழத்தை சிவமாகவும், அந்தக் கொடியை சக்தியாகவும் பாவித்து தரையில் படரும் இக்கொடியானது தன் இனத்தை பரப்ப கொடியிலிருந்து வெள்ளரிப்பழம் வெடித்து விதை பரப்புவது போல் கொடிக்கு பாதிப்பு இல்லாமல் கொடியை விட்டு நீங்குவது போல (உடலாகிய கொடியை விட்டு உயிராகிய சிவத்தன்மை கொண்ட வெள்ளரிப்பழமானது தானாக துக்கமின்றி சுகமாக விலகுவது போல்) இந்த யாக்கையை விட்டு சிவஞானம் பெற்று உடலை விட்டு உயிர் விலக வேண்டும் என்ற மூலமந்திரத்தை கொடி என்கின்றார். வேதம் ‘உர்வாருக மிவ பந்தனான்’ என்று சொல்வதிலிருந்து இதை அறியலாம். மிருத்தியுஞ்ஜயரின் சக்தியாகிய பாலாம்பிகையை ‘கொடி’ என்றார்.

‘‘இளவஞ்சிக் கொம்பே’’ -

 இந்த வார்த்தைக்கு சீந்தில் கொடி, பெண் தர்மதேவதை என்று பொருள் உரைக்கிறது மதுரை தமிழ் அகராதி. அதன்வழி முதுமை வராத இளமையான பெண்ணாக உமையம்மையை குறித்தார். ‘கொம்பு’ என்று மேன்மை பொருந்திய கொம்பு என்று ஆகமங்கள் குறிப்பிடும் சிவபெருமானைக் குறிப்பிட்டார். ஆகமத்தில் சிவனை ‘அக்னி ஸ்தம்ப ஆக்ருதிம்’, ‘தீக்கொம்பை போலும் வடிவுடையான்,’ என்று குறிப்பிடுவதிலிருந்து அறியலாம்.

‘இளவஞ்சிக் கொம்பே’ என்பதால் சைவர்கள் வணங்கும் சிவலிங்கத் திருமேனியின் நடுபாகத்தை கொம்பெனவும், அரசிலை போன்ற பாகத்தை சக்தியாகவும், ‘இள’ என்ற வார்த்தையால் பிரம்ம பாகத்தையும் குறிக்கிறார். சிவலிங்கத் திருமேனியை குறிப்பிட்ட (இள - பிரம்மபாகம், வஞ்சி - விஷ்ணுபாகம், கொம்பே - ருத்ரபாகம்) இவை மூன்றையும் இணைத்து குறிப்பிட்டார்.

இளா என்ற வடசொல், வேத ஞானத்தைத் தரவல்ல ஒரு உமையம்மையின் பெயரான இளாதேவி என்பதனைக் குறிக்கும். அதன் சுருக்கமே ‘இள.’ ‘அக்னி மீளே ப்ரோஹிதம்’ என்ற வேத சொற்றொடரிலிருந்து இதை அறியலாம். ‘வஞ்சி’ என்ற சொல் சீந்தில் கொடியைக் குறித்தது. ஒருசில பொருட்களைக் கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் வழிபாடு செய்வது, உமையம்மையின் அருளைப் பெற்றுத் தரவல்லது என்று தந்திர சாத்திரங்கள் குறிப்பிடுகின்றன. அந்த வகையில் வஞ்சி என்ற சீந்தில் கொடியை வேள்வியில் இட்டு மிருத்யுஞ்ஜயரை வழிபாடு செய்தால் இழந்த இளமையை மீண்டும் பெறலாம்.

முதுமையினால் ஏற்படும் நோய்களைப் போக்கிக் கொள்ளலாம் என்கின்றது மிருத்யுஞ்ஜயர் பூஜாவிதி கல்பம். இந்தவகையில் இறைவியருளை பெற்றுத் தரும் சாதனமான சீந்தில் கொடியை இறைவியாகவே குறிப்பிடுகின்றார். ‘யா சிருஷ்டி ராராத்யா தகதி விதி ஹீதம் யா ஹவி யாச ஹோத்ரி’ என்ற வேதவரி மூலம் வேள்வி செய்பவர், செய்து வைப்பவர், வேள்வித் தீ, வேள்வியில் இடப்படுகிற பொருள் அனைத்தும் சிவமேயாம். அந்த வகையில் சீந்தில் கொடியை உமையம்மை என்றே குறிப்பிடுகின்றார். மேலும் ‘வஞ்சி’ என்ற சொல்லால் தர்மதேவதையை குறிப்பிடுகிறார்.

‘வேதே கிலோ தர்ம மூலம்’ - வேதம் தருமத்தின் மூலம். ஆகமம் சிவ தர்மம், இவை இரண்டும் தர்மங்களாக குறிப்பிடப்படுகின்றன. ‘வேதம் சொன்ன வழிக்கே வழிபட’ (பாடல் -79), ‘சரணம் அரண் நமக்கே (பாடல் - 50) என்று தர்மத்தையும், ‘பரமாகம பத்ததியே (பாடல் - 6) என்ற ஆகமத்தையும் கூறுவதிலிருந்து இதை நன்கு உணரலாம். ஆகவே ‘வஞ்சி’ என்ற வார்த்தையால் உமையம்மையை அடைய வழிவகை செய்யும் அறத்தையும் குறிப்பிட்டார். ‘கொம்பு’ என்ற வார்த்தையால் விலங்கினங்களின் கொம்பைக்குறிப்பிட்டார்.

சிருங்கோதகம் என்ற பெயரில் கங்கை நீரை கொம்பில் ஊற்றி சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால் பிறவியிலேயே இருக்கும் குறைபாடுகளை இறைவன் நிவர்த்தி செய்வார் என்று மிருத்யுஞ்ஜய பூஜாவிதி கல்பம் குறிப்பிடுகின்றது. இந்த மிருத்யுஞ்ஜயர், திருக்கடையூரில் எழுந்தருளியிருப்பதனாலும், காலத்தால் வரும் பிணி, மூப்பு, சாக்காடு ஆகியவற்றைத் தவிர்க்க மிருத்யுஞ்ஜயர் பூஜை மேற்கொள்ளப்படுகிறது. ‘சர்வரோக நிவாரண பூஜா’ என்றும் இதனைச் சொல்கிறார்கள். சீந்தில் கொடியினால் ஹோமம் செய்து கலசநீரை சிருங்கோதகம் என்ற கொம்பில் ஊற்றி கங்கை நீரை அபிஷேகம் செய்வதனால் வியாதி நிவாரணம் பெறும் முறையை ‘இளவஞ்சிக் கொம்பே’ என்று குறிப்பிடுகின்றார்.

‘‘எனக்கு வம்பே’’ -

வம்பு என்ற சொல்லிற்கு கயிறு, தீங்கு, நிலையின்மை என்று பொருள்கள். இந்த மூன்று வார்த்தைகளும் காரணத்தால் யாக்கையை குறித்தவை. நிலையாத தன்மையினாலும் அறம், பாவம் என்னும் கயிற்றால் கட்டப்பட்டமையாலும், தன் உணர்வாகிய ஆன்ம உணர்வைப்பெறுவதற்கும், இறைவியை அறிதலாகிற சிவ உணர்வைப் பெறுவதற்கும், இயல்பின் காரணமாய் சில நேரங்களில் உடலானது நோயினாலும், ஆசையினாலும், அச்சத்தாலும் மெய்யுணர்வு அடையாவண்ணம் தீங்கு செய்யும்போதும் ‘வம்பு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். ‘எனக்கு வம்பே’ என்று தன் உடலையே குறித்துக் கொள்கிறார். ‘அறம் பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி’, ‘விடக்கு உடம்பின் உட் கிடப்ப ஆற்றேன்’ - திருவாசகம்

இதையே ஆகமங்கள், ‘தேக ப்ராரப்த்தம் ஏவோக்தம் ப்ராரப்த்தம் தேஹ மேவஹி’ என்கின்றன. சாரும் வினையே யாக்கையாம். யாக்கையோ, வினையின்றி வேறில்லை என்பதால் ஆகமத்தின் வழி அறிய முடிகிறது. இதையே பட்டர் ‘இழைக்கும் வினை வழியே’ (பாடல் - 33), ‘குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே’ (பாடல் 48) என்பதிலிருந்து அறியலாம்.

 

இறை உணர்வை அடைய முடியாமல், உலகியல் உணர்வுகளைச் சார்ந்து மதி மயங்கும் மனதை வம்பே என்கிறார். தீமை செய்வதனாலும், பாசங்களால் கட்டுப்படுத்துவதாலும், உள்ளத்தின் இயல்பு சார்ந்து ஏற்படும் தீமையையே அதாவது வாசனா மலத்தையே அவற்றின் வழிதோன்றும் உணர்வுகளை ‘‘எனக்கு’’ என்று குறிப்பிடுகின்றார். இதை ‘இழவுற்ற நின்ற நெஞ்சே’ (பாடல் - 71), ‘ஆசைக் கடலில் அகப்பட்டு... அல்லற்பட இருந்தேனை’ (பாடல் - 32), ‘முன் செய் புண்ணியம் ஏது என் அம்மே’ (பாடல் - 12) ‘நன்றே வருகினும் தீதே விளையினும்’ (பாடல்- 95) என்ற அந்தாதி வரிகளால் மேலும் தெளிவாக்குகிறார்.

 ‘எனக்கு வம்பு’ என்ற வார்த்தை நேரடியாக உடலையும், உள்ளத்தையும் குறிக்காது. பண்பாலும், பயனாலும், அனுபவத்தாலுமே குறிக்கும். இச்செய்யுளை பொறுத்தவரை மட்டும் உடலையும், உள்ளத்தையும் குறித்ததாக ஆகின்றது. நேரடியாக உள்ளத்தைக் குறிப்பிடாமல், நேரடியாக உடலைக் குறிப்பிடாமல் ஏன் இப்படி மறைமுகமான சொல்லால் குறிப்பிட வேண்டும்? உடலும், உள்ளமும் தான் மோக்ஷத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிற சாதனங்கள். அதன் உயர்வு நீக்கி அதன் இழிவை மட்டுமே இப்பாடலில் வலியுறுத்த எண்ணிய பட்டர், ‘என்ன புண்ணியம் செய்தனமே மனமே’ (பாடல் - 41), ‘இழவுற்ற நின்ற நெஞ்சே’ (பாடல் - 72) என்று முரண்படக் கூறி மானிட சமுதாயம் தன்னுணர்வு பெறவே ‘எனக்கு வம்பே’ என்று கூறுகின்றார்.

‘‘பழுத்தபடியே’’ -

ஸ்ரீவித்யா உபாசகர்கள் உமையம்மை அருளைப் பெறுவதற்கு, அனுபவிப்பதற்கு சில தகுதி நிலைகளை கூறியிருக்கின்றனர். நடைமுறையில் குறிப்பிட்ட சில மந்திரங்கள் அனைத்துமே அறிந்து செயல்பட்டு, அனுபவம் பெற்றிருந்தால் மட்டுமே  ஸ்ரீவித்யா ேக்ஷாடஸீ மந்திரத்தை உபதேசிக்கின்றனர். உமையம்மை வழிபாட்டில் எல்லாம் மந்திரமாகவும், தந்திரமாகவும், யந்திரமாகவும் குறிப்பிட்டு இருந்தாலும் பல வேறுபாடுகளை உடையது.

 வெவ்வேறு விதமான அனுபவங்களை தருவதாகவும், வளர்ச்சி நிலையில் உபாசகனுக்கு ஏற்படும் சில இடையூறுகள், உபாசனையில் ஏற்படும் தவறுகள், அவற்றை சரி செய்யவும், முறையாக சக்தி வழிபாட்டு கொள்கைகளை முழுவதுமாய் குறைவற பெற்று அனுபவ சாத்தியப்படுத்துவதற்கு இந்த வரிசை முறை வழிபாடு குறித்த தெளிவு மிகவும் தேவையானதாக அமையும். அவ்வாறு இல்லையெனில் தேவதை, உபாசகன், உபாசனை, குரு இவற்றிற்குள் மாறுபடின் பலன் இல்லாது போய்விடும்.

ஸ்ரீவித்யாவைப் பொறுத்தவரை பன்னிரண்டிற்கும் மேலான வழிபாட்டு வரிசை முறைகள் வழக்கத்தில் உள்ளன. அவற்றில் ஒன்றை மட்டும் இங்கு காண்போம்.

முதலில் - குரு மந்திரம்

இரண்டாவது - கணபதி மந்திரம்

(உச்சிஷ்ட கணபதி)

மூன்றாவதாக - பஞ்சாயதன மந்திரத்தில் ஏதேனும் ஒன்று

நான்காவது - குலதெய்வ வழிபாடு

ஐந்தாவது - வைதீக சடங்குகள்

ஆறாவது - தென்புலத்தார் வழிபாடு

ஏழாவது - துறவி அல்லது அதிதி வழிபாடு

எட்டாவது - அதிதேவதை வழிபாடு

ஒன்பதாவது - உபதேவதை வழிபாடு

பத்தாவது - பிரத்யதி தேவதை வழிபாடு

இவற்றின் பதினொறாவது படியைதான், சாக்தர்களால் மிக உயர்ந்ததாக கருதப்படும் ேக்ஷாடஸீ மந்திரமானது உபதேசம் செய்யப்படுவது. இவற்றை நாம் தற்காலத்திய கல்வி நிலை பாகுபாட்டில் மழலையர் கல்வி, துவக்க கல்வி, ஒருநிலைக் கல்வி, உயர்நிலைக் கல்வி, மேல்நிலைக் கல்வி, இளங்கலைக் கல்வி, முதுகலை கல்வி, ஆய்வு கல்வி இதுபோன்ற படிநிலையை உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த வரிசை உபாசனையைப்பொறுத்தவரை என்றும் உள்ளது.

இனி இறைவியை பற்றி காண்போம். இறைவியின் அருளானது பத்து படிநிலைகளை கொண்டு அமையும். முதலில் விதை, செடி, மரம், பூ, காய், கனி, கனியிலிருந்து விதை, அது தோற்றுவிக்கும் மரம் இது போல் ஒன்றை ஒன்று சார்ந்ததாகவும், ஒன்று இல்லாது ஒன்று அமையாததாகவும் உள்ளது. இந்த இருவகையினாலும் உமையம்மை உபாசகனின் முயற்சி சார்ந்தும், தன் கருணை சார்ந்தும், அருள் பொழிகிறாள்.

உதாரணமாக ஜபம் செய்வதன் விளைவாக, முதலாவதாக - சகுனங்களை காட்டுவாள்; இரண்டாவது - கனவில் தோன்றுவாள்; மூன்றாவது - குருவாய் வருவாள்; நான்காவது - சக உபாசகர்களாய் வருவாள்; ஐந்தாவது - உமையம்மையின் பெயர் கொண்டவளாகத் தன்னை உணர்த்தி வருவாள்; ஆறாவது - கோயிலில் காட்சி கொடுப்பாள்; ஏழாவது - வீட்டிலுள்ள வழிபாட்டு விக்ரகத்தில் காட்சி கொடுப்பாள்; எட்டாவது - குலதெய்வ பூஜாரியாய் வருவாள்; ஒன்பதாவது - தான் மதிக்கும் உறவினராய் காட்சி கொடுப்பாள்; பத்தாவது - தன்னை விரும்புபவளாய், உபாசகனுக்கு கட்டுப்பட்டவளாய் எப்பொழுதும் வருவாள்.

இந்த நிலைகள்தான் உமையம்மை தருவதற்கும் நாம் அவள் அருளைப் பெறுவதற்கும் காரணமாக இருப்பதால் அந்த படிநிலைகளையே உமையம்மையாக உபசரித்துக் கூறினார்.

‘பழுத்த, படியே’ என்பதனால் அனுகூலமான தகுதி என்று கூறுகின்றார். அகராதியும் பழுத்தல், படி என்ற சொல்லுக்கு இதே பொருளையே தருகிறது.

(தொடரும்)

Related Stories: