யாருக்கு, எந்தத் துன்பத்திலும் நிம்மதி இருக்கும்?

அர்த்தமுள்ள இந்துமதம் - 65

இன்று ‘பகுத்தறிவு பகுத்தறிவு’ என்று பிரமாதமாகப் பேசப்படுகிறது. அது ஏதோ பிறருக்கு இல்லாதது போலவும், சிலருக்கே சொந்தம் போலவும் முழங்கப்படுகிறது. ‘நாங்கள் பகுத்தறிவுத் தீயில் புடம் போட்டு எடுக்கப்பட்ட மண்ணாங்கட்டிகள்’ என்று சிலர் பேச நான் கேட்டிருக்கிறேன்.  அதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. மனிதனை மிருகங்களில் இருந்து ‘பிரித்துக் காட்டுகிற ஆறாவது அறிவுக்குப் பெயர்’ தான் பகுத்தறிவு.

இவள் தாய், இவள் தங்கை, இவள் தாரம் என்று கண்ணுக்கும், மனதுக்கும் சொல்வதே பகுத்தறிவு தான். ஆனால், துரதிர்ஷ்ட வசமாக இந்தப் பேதங்கள் தெரியாதவனே தன்னைப் ‘பகுத்தறிவு வாதி’ என்று அழைத்துக் கொள்கிறான். ஒரு மனிதன் என்னதான் குடித்திருந்தாலும்கூட, தன் தாயின் அருகில் போய்ப் படுப்பதில்லை. அதுதான், மயங்க வைக்கும் போதையிலும் கூட மிதமிஞ்சி நிற்கும் பகுத்தறிவு.  ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்துக் காட்டுவதற்குப் பெயர் பகுத்தறிவு; அவ்வளவுதான்.

இதற்கென்ன தனிப் பட்டயம், தனிப்படை? உலகத்திலுள்ள கோடானுகோடி மானுடர்களுமே பகுத்தறிவாளர்கள்தான். கோயிலுக்குப் போகிறவர்களும், சாமி கும்பிடுகிறவர்களும் பகுத்தறிவாளர்கள் இல்லை என்றால், தலைவனுக்கு மாலை போட்டுக் காணிக்கை கொடுக்கிறவனும் அதே சாதியே! இதிலே வித்தியாசம் என்ன? முன்னது ‘கல்’ என்றால், பின்னது ‘சடலம்.’ கல் பேசாது என்றால், சடலம் வழித்துணைக்கு வராது.

பகுத்தறிவில் சில ஏற்றத்தாழ்வுகளை வேண்டுமானால் கற்பிக்கலாம். மற்ற மனிதர்களின் பகுத்தறிவைவிட, விஞ்ஞானிகளின் பகுத்தறிவு ஆழமானது. கண்டு கொண்ட தண்ணீரை வடிகட்டிக் குடிப்பது மனிதனின் பகுத்தறிவு. காணாத தண்ணீரைக் கண்டுபிடிப்பது விஞ்ஞானியின் பகுத்தறிவு. நம் ஊர் பகுத்தறிவாளர்கள், எதையாவது கண்டுபிடித்தார்களா? பிரியாணியைக் கண்டுபிடித்தார்கள்; அதற்கு வெங்காயம் சுவையானது என்பதைக் கண்டுபிடித்தார்கள்.

உலகத்திற்கு அவர்கள் புதிதாகச் சொன்னது என்ன? கேட்கின்ற மனிதன் உடனே திருந்தி, ஆனந்தமாக வாழ்வதற்கான அற்புதத் திட்டங்கள் எவற்றையாவது அவர்கள் உருவாக்கினார்களா? காலாகாலங்களுக்கு நிலைத்து நிற்கக்கூடிய களஞ்சியங்களையாவது எழுதிக் குவித்தார்களா? எதுவும் இல்லை. கள்ளத் தராசோடு வந்த திருட்டு வியாபாரிகளைப் போல், முதலீடு இல்லாமல் லாபம் தேடியவர்கள் தங்களுக்குத் தாங்களே சூட்டிக்கொண்டே பெயரே ‘பகுத்தறிவாளர்கள்’ என்பதாகும். பலாப்பழத்தைப் பகுத்தால், நார் இருக்கிறது; அந்த நாரைப் பகுத்தால், சுளை வருகிறது; சுளையைப் பகுத்தால், கொட்டை தெரிகிறது.

வெங்காயத்தைப் பகுத்துக்கொண்டே போனால், என்ன தெரியும்? மனிதனின் ஆறாவது அறிவு, சாதாரணமாகவே தினசரி இயங்கிக்கொண்டிருக்கிறது. அதன் சராசரி இயக்கத்திலேயே அது கண்டுபிடித்த விஷயம்தான், ‘தெய்வம் உண்டு’ என்பது. கண்ணெதிரே காணுகின்ற காட்சிகளும், சம்பவங்களும் மனித சக்திக்கு அப்பாற்பட்டவையாகத் தோன்றியதால், இது ஏதோ ஒரு பெரிய சக்தியின் இயக்கம் என்று மனித மனது பேசிற்று; ஆறாவது அறிவு அதை ஒப்புக் கொண்டது.

பகுத்தறிவுக்குத் தெரியாமலா பாண்டிய மன்னர்கள் கோயில் கட்டினார்கள்? கோயில்களில் பூஜைகள் நடத்த நிவந்தங்கள் விட்டார்களே மன்னர்கள், அவர்களுக்கு ஆறாவது அறிவே இல்லையா? ஐக்கிய அமெரிக்காவில் ‘ஹரே கிருஷ்ணா’ இயக்கத்தில் ஈடுபட்டுள்ள பல லட்சம் பக்தர்களுமே பகுத்தறிவு இல்லாதவர்களா? கருப்பூரிலும், திருப்பூரிலும் மேடை போட்டுப் பேசிவிட்டு வயிறு புடைக்கச் சாப்பிட்டு விட்டு, இனம் தெரியாமல் நடந்துகொள்வதுதான் பகுத்தறிவா?

விபூதி பூசாமல் இருப்பதும், குங்குமம் வைக்காமல் இருப்பதும், கல்யாணங்களுக்கு ஐயரை அழைக்காமல் இருப்பதும்தான் பகுத்தறிவில் முளைத்தெழுந்த சுடரொளிகளா? வெறும் பிரமை, மயக்கம்! இன்றைக்குப் பகுத்தறிவாளன் என்று சொல்லிக்கொள்கிற எவனையும்விட, நான் பல விஷயங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறேன். அவர்கள் படிக்காத புத்தகங்களையெல்லாம் நான் படித்திருக்கிறேன். அவர்கள் எழுதாத விஷயங்களையெல்லாம் நான் எழுதியிருக்கிறேன்.

எந்த ஆராய்ச்சியில் இறங்கினாலும் என்னுடைய ஆறாவது அறிவு, அதிலே தெய்வத்தைத்தான் கண்டுபிடிக்கிறது. அறம், பொருள், இன்பம் என்பது வள்ளுவன் பகுப்பு. அதோடு ‘வீடு’ என்ற ஒன்றையும் சேர்த்து நான்காக்கிற்று மதம். அந்த ‘வீடு’ என்பதை வடமொழியில் ‘மோக்ஷம்’ என்பார்கள். இம்மையில் முதல் மூன்றும், மறுமையில் நான்காவதும் மனிதனுக்கு அமைய வேண்டும். ஆனால், அறம் பொருள் இன்பத்தை ஒப்புக்கொள்ளும் சிலரது பகுத்தறிவு, நான்காவதான மோக்ஷத்தை ஒப்புக்கொள்வதில்லை.

‘சொர்க்கமாவது, நரகமாவது; மரணத்திற்குப் பிறகு எதுவுமே இல்லை’ என்பது, அவர்களது வாதம். ஆனால் மத நம்பிக்கையுள்ள சராசரி மக்கள் மோட்ச-நரகத்தை ஒப்புக்கொள்கிறார்கள். அப்படி ஒப்புக்கொண்ட காரணத்தாலேதான், அவர்கள் பாவம் செய்யப் பயப்படுகிறார்கள். சொர்க்கம், நரகமே இல்லை என்று நம்பும் பகுத்தறிவாளன், எந்தத் தவறுக்கும் துணிந்து விடுகிறான். ஆக என்று புரிகிறது; பகுத்தறிவு இரண்டு வகைகள்.

ஒன்று நம்பிக்கையோடு ஆராய்வது; இன்னொன்று அவநம்பிக்கையைப் வளர்ப்பது. இப்படி அவநம்பிக்கையை வளர்த்து விட்டால் சராசரி வாழ்க்கையாவது சந்தோஷமாக இருக்குமா? இல்லை! நம்பிக்கையுள்ளவனுக்கு எந்தத் துன்பத்திலும் ஒரு நிம்மதி இருக்கும். அதாவது, ‘எல்லாம் ஆண்டவனுடைய இயக்கம், நடப்பது நடக்கட்டும்’ என்று துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளும் சக்தி அவனுக்கு வந்துவிடும். பிராமண வீடுகளில், ஒருவர் இறந்து போனால், உடனே அந்தச் சடலத்தைத் திண்ணையிலோ அல்லது வெளி வராந்தாவிலோ  தூக்கிக் கொண்டுவந்து போட்டு விடுகிறார்கள்.

நான் அறிந்த வரையில், மரணத்திற்காக அவர்கள் அதிகம் ஓலமிடுவதில்லை; கதறி அழுவதில்லை. காரணம், அவர்களுடைய பகுத்தறிவு தெளிவாகச் சொல்லிவிட்டது. ‘மரணம் தவிர்க்க முடியாதது’ என்று. அந்தச் சமூகத்தில்தான், அறிவாளிகள் அதிகம் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். வைதீக, மத நம்பிக்கைகளும் அந்தச் சமூகத்தில்தான் அதிகம்.

அவர்கள், இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதுவதைப் பார்க்கும்போது மதநம்பிக்கையுள்ள பகுத்தறிவு, வாழ்க்கையை எவ்வளவு நிம்மதியாக ஓட்டிச் செல்கிறது என்பது புரிகிறது. ஆகவே, ஒவ்வொரு மனிதனுக்கும் மத நம்பிக்கை வேண்டும். மனிதன், மனிதனாக வாழ, மத நம்பிக்கை வேண்டும். மனிதர்கள் மிருகமாக ஆகாமல் இருக்க, மத நம்பிக்கை வேண்டும். மனிதனையும், மிருகத்தையும் பற்றி, இதோ காஞ்சிப் பெரியவர் பேசுகிறார்: மிருகங்கள் குறுக்கு வாட்டில் வளருகின்றன. இதனாலேயே அவற்றுக்குத் ‘திர்யக்’ என்று பெயர்.

இதற்கு மாறாக உயர்ந்து மேல் நோக்கி வளருகின்ற மனிதன், மற்ற பிராணிகளைக் காட்டிலும் மேலான நோக்கத்தைப் பெற வேண்டும். இப்படிச் செய்தால் இவன்தான் சகல ஜீவ இனங்களையும்விட அதிகமான சுகத்தை அனுபவிக்கலாம். ஆனால், நடைமுறையிலோ அவற்றைவிட அதிகமான துன்பத்தைத்தான் நாம் அனுபவிக்கிறோம். மிருகங்களுக்கு நம்மைப்போல் இத்தனை காமம். இத்தனை கவலை, இத்தனை துக்கம், இத்தனை அவமானம் இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அவற்றுக்குப் பாபமே இல்லை. பாபங்களைச் செய்து, துக்கங்களை அனுபவிக்கிறோம்.

ஒரு வழியில் பார்த்தால் மிருகங்களுக்குக் கொடுத்திருக்கும் சௌகரியங்களை ஸ்வாமி நமக்குக் கொடுக்கவில்லை என்று தோன்றும். நம்மை யாராவது அடித்தால், திருப்பி அடிக்க ஓர் ஆயுதம் நமக்கு இல்லை. மாட்டை அடித்தால் அதற்குக் கொம்பு கொடுத்திருக்கிறார்; நமக்கு கொம்பு இல்லை; நகமும் இல்லை. குளிரிலிருந்து காப்பாற்றிக்கொள்ள ஆட்டுக்கு உடம்பில் போர்வை வைத்திருக்கிறார். மனிதன் ஒருவனைத்தான் வழித்து விட்டிருக்கிறார்.

யாராவது அடிக்க வந்தால் எதிர்க்க முடியவில்லை; ஓடலாம் என்றால் வேகமாக ஓட முடியாது. குதிரைக்கு கொம்பு இல்லாவிட்டாலும், ஓடுவதற்கு வேகம் கொடுத்திருக்கிறார்; அதுவும் நமக்கில்லை. இருந்தாலும் ஸ்வாமி மனிதனுக்குத்தான் புத்தியை அதிகமாக வைத்திருக்கிறார். குளிரிலிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், மற்றப் பிராணிகளின் போர்வையை இவன் பறித்துக் கொண்டு விடுகிறான்; கம்பளியாக நெய்து கொள்கிறான். வேகமாகப் போக வேண்டுமா? வண்டியிலே குதிரையைக் கட்டி அதன் வேகத்தை  உபயோகப்படுத்திக் கொள்கிற சக்தியை அவனிடத்தில் ஸ்வாமி வைத்திருக்கிறார்.

தன் சரீரத்திலேயே தற்காப்பு  இல்லாவிட்டாலும், வெளியிலிருந்து தினுசு தினுசான ஆயுதங்களைப் படைத்துக் கொள்கிறான். இவ்வாறாகப் புத்தி பலம் ஒன்றை மட்டும் கொண்டு மற்ற ஜீவராசிகள், ஜடப்பிரபஞ்சம் எல்லாவற்றையும் மனிதனே ஆளுகிறான். மிருகம் ஒவ்வொன்றும், ஒவ்வொரு பிரபஞ்சத்தில்தான் இருக்கும். குளிர் பிரதேசத்துக் கரடி நம் ஊரில் வாழாது. இங்குள்ள யானை அங்கே வாழாது. ஆனால், மனிதன் உலகம் முழுவதும் வாழ்கிறான். ஆங்காங்கே அவன் தன் புத்தியை உபயோகப்படுத்தித் தனக்குச் சாதகமாகச் சூழ்நிலையைச் செய்து கொள்வான் என்று இப்படி விட்டிருக்கிறார்.

இந்த உயர்ந்த புத்தியை வைத்துக்கொண்டு, மனிதன் துக்கப்படுகிறான். பிறந்து விட்டதனாலே இவ்வளவு கஷ்டம். இனிப் பிறக்காமலிருக்க வேண்டுமானால் என்ன பண்ணுவது? பிறப்புக்குக் காரணம் என்ன? நாம் ஏதோ தப்புப் பண்ணியிருக்கிறோம். அதற்குக்  தண்டனையாக இத்தனை  கசையடி வாங்க வேண்டும் என்று விதித்திருப்பதால், இந்த உடம்பை எடுத்து அவற்றை  வாங்குகிறோம். பத்து அடி ஆன பிறகு, இந்த உடம்பு போய்விட்டால், இன்னோர் உடம்பு வருகிறது. பாக்கி அடியை அந்த உடம்பு வாங்குகிறது. காமத்தினாலே, பாவத்தைச் செய்வதினாலே ஜனனம் வருகிறது. காரியம் எதுவும் பண்ணாமல் பாவங்களைச் செய்கிறோம்.

கோபத்துக்குக் காரணம் ஆசை, காமம். முதலில் காமத்தை, ஆசையை ஒழிக்க வேண்டும். பற்றை நிறைய வளர்த்துக்கொண்டு காரியம் செய்யாமல் இருப்பது என்றால் முடியாது. பற்றை ஒழித்துவிட்டால், பாவம் செய்யாமல் இருக்கலாம். ஆசைக்கு காரணம் என்ன? நம்மைத் தவிர இன்னொன்று இருப்பதாக எண்ணுவதால், அதனிடம் ஆசை வருகிறது.

உண்மையில் சாந்தமாகிய ஒரே சிவமே எல்லாமாக இருக்கிறது. ஒரு மாடு கண்ணாடியில் தன்னைப் பார்த்துவிட்டு, இன்னொரு மாடு இருப்பதாக நினைத்து, அதை முட்டப் போகிறது. ஒரு மனிதன் தன் பிரதி பிம்பத்தைப் பார்க்கிறான்.

இன்னொரு மனிதன் இருக்கிறான் என்று அவன் நினைக்கிறானா? இரண்டும் ஒரே பொருள் என்பது அவனுக்குத் தெரிந்து சாந்தமாக இருக்கிறான். இப்படியாக நாம் பார்க்கிற அனைத்துமே ஒன்றுதான். இரண்டாவது என்று எண்ணினால் ஆசை வரும். ஆசை வருவதனால் கோபம் வருகிறது. கோபம் வருவதால் பாவங்களைச் செய்கிறோம். அதனால் ஜென்மம் உண்டாகிறது. எல்லாம் ஒன்று என்ற ஞானம் நமக்கு வந்துவிட்டால், வேறு பொருள் இல்லாததனாலே ஆசை இல்லை; கோபம் இல்லை; பாவம் இல்லை; காரியம் இல்லை; ஜனனம் இல்லை; துன்பமும் இல்லை.

இந்த ஞானத்தை எப்படிப் பெறுவது? நம்மைப் பெற்ற அம்மா உடம்புக்குப் பால் கொடுப்பவள். அறிவுக்கு ஞானப்பால் கொடுப்பவள் அம்பாள்தான். ஞான ஸ்வரூபமே அவள்தான். அவளுடைய சரணாரவிந்தத்தைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டு அவளுடைய ஸ்வரூபத்தோடு நம்மை நாம் கரைத்தாலே ஞானம் வரும்; மனிதன் அப்போது தெய்வமாவான்.

முதலில் மனிதனை மிருகமாக இல்லாமல் மனிதனாக ஆக்க வேண்டும். அப்புறம் அவனைத் தெய்வமாகவே உயர்த்திவிட வேண்டும். இந்தக் குறிக்கோளுடன்தான், சகல மதங்களும் உண்டாகி இருக்கின்றன. சித்தாந்தம், தத்துவங்களில் அவற்றுக்குள் எத்தனை பேதமிருந்தாலும், இப்போதிருக்கிற மாதிரி மனுஷ்யனை ஒரே காமக்குரோதிகளுடன் இருக்கவிடக் கூடாது. இவனை நல்லவனாக ஆக்கி, அன்பு, அடக்கம், சாந்தம், தியாகம் முதலிய குணங்கள் உள்ளவனவாகப் பண்ண வேண்டும் என்பதில் எல்லா மதங்களும் ஒரே குரலில்தான் பேசுகின்றன.

நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்,

சென்னை - 600 017.

(தொடரும்)

Related Stories: