நிரப்ப முடியாத பாத்திரம்!

அவன் ஒரு மன்னன். தனது நாட்டின் எல்லையை விரிவுபடுத்திக் கொண்டே போகவேண்டும் என்ற ஆசையில் பக்கத்து நாட்டுடன் எப்போது போரை ஆரம்பிக்கலாம் என்று எண்ணிக்கொண்டே குதிரை மீது ஏறி நகர்வலம் வந்தான். வழியில் மரத்தடி ஒன்றில் துறவி ஒருவர் கையில் பிச்சைப் பாத்திரத்துடன் அமர்ந்திருந்தார். அவர் அருகில் சென்ற மன்னன், துறவியாரே! நான் இந்த நாட்டு மன்னன். இன்னும் கொஞ்ச நாளில் பக்கத்து நாடுகளுக்கும் நானே மன்னனாகி விடுவேன். அப்படியா...? ஆமாம்! அதனால் எனது நாட்டில் இப்படி ஒருவர் பிச்சை பாத்திரத்துடன் இருக்கக் கூடாது! அப்படியானால்...? உமக்கு என்ன வேண்டுமோ கேளும், கொடுக்கிறேன். இது சத்தியம்!

துறவி சிரித்தார். ஏன் சிரிக்கிறீர்கள்? உன்னால் முடியாததை எல்லாம் கொடுக்கிறேன் என்று சத்தியம் செய்யாதே! மன்னனுக்கு இது அவமானமாகத் தோன்றியது. வாருங்கள் என் அரண்மனைக்கு என்று துறவியை வலுக்கட்டாயமாக அழைத்துக் கொண்டுபோய், என்ன வேண்டும் உங்களுக்கு என்றான். துறவி தன் பிச்சைப் பாத்திரத்தை நீட்டியபடி, இது நிறைய பொற்காசுகள் வேண்டும் என்றார். ஓ! இவ்வளவுதானா? உடனே பொற்காசுகளைக் கொண்டு வாருங்கள் என்று உத்தரவிட்டான் மன்னன். கொண்டுவந்த பொற்காசுகளைப் பிச்சைப் பாத்திரத்தில் அள்ளிப் போட்டான்.  போடப்போட பாத்திரம் நிரம்பவில்லை. இருந்தது அனைத்தையும் கொட்டியாயிற்று. அரசக் கருவூலமே காலியாகி விட்டது. மன்னன் மலைத்துப் போனான். அவனிடமிருந்த கர்வம் அகன்றது. அப்படியே, பொத்தென்று துறவியின் காலில் விழுந்தான். பிறகு எழுந்தான்.

மன்னா! இந்தப் பிச்சைப் பாத்திரத்தை உன்னால் மட்டுமல்ல... வேறு எவராலும்  நிரப்ப முடியாது. காரணம் இது சாதாரணப் பிச்சைப் பாத்திரமல்ல என்றார் துறவி அமைதியாக! அப்புறம் இது என்ன? ‘‘பேராசைகளுடன் வாழ்ந்து செத்துப்போன ஒரு மனிதனின் மண்டை ஓடு இது!’’‘‘ஒருவர் ஏழையாய் இருக்கிறார் என்று அவரை வஞ்சிக்காதே! ஒருவர் ஆதரவின்றி இருக்கிறார் என்று அவரை சிறுமைப்படுத்தாதே! ஏனெனில், ஆண்டவர் அவர்களுக்காக வாதாடுவார். அவர்களது உயிரை வாங்கப் பார்க்கிறவர்களின் உயிரை அவர் பறித்துக்கொள்வார். கடும் சினம் கொள்பவர்களோடு நட்புக் கொள்ளாதே;

எரிச்சல் கொள்பவர்களோடு தோழமை கொள்ளாதே. அப்படிச் செய்தால் அவர்களின் போக்கை நீயும் கற்றுக் கொள்வாய். உன் உயிர் கண்ணியில் சிக்கிக் கொள்ளும். பிறருக்காக ஒருபோதும் பிணையாய் நில்லாதே; பிறர் கடனுக்காக ஒருநாளும் பிணையாய் நிற்காதே. அந்தக் கடனைத் திருப்பிக் கொடுக்க உனக்கு ஒரு வழியும் இல்லாதிருந்தால் நீ படுத்திருக்கையில் உன் படுக்கையும் பறிபோய் விடுமன்றோ? வழிவழியான சொத்துக்கு உன் மூதாதையர் குறித்து வைத்த எல்லையை நீ மாற்றி அமைக்காதே. தம் அலுவலில் திறமை காட்டுகின்ற ஒருவனைப் பார்; அவர் பாமர மனிதரிடையே இரார்; அரச அவையில் இருப்பார்.’’ - (நீதிமொழிகள் 22: 22-29)

- ‘‘மணவைப்பிரியன்’’ஜெயதாஸ் பெர்னாண்டோ.

Related Stories: