இரண்டு அன்னையர்!

“என்ன தவம் செய்தனை யசோதா” எனும் கட்டுரை ஒன்றை அண்மையில் படித்தேன். கிருஷ்ண ஜெயந்தி தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரை அது. அதில் அன்னை யசோதா பற்றியும் கண்ணன் குறித்தும்  படித்தபோது நபிகளாரின் வாழ்வியல் நிகழ்வுகள் என் மனத்திரையில் ஓடின.கண்ணன் தேவகியின் மகன்தான் என்றாலும் அவருடைய வளர்ப்புத் தாய் யசோதா. நபிகளார்(ஸல்) ஆமினாவின் மகன்தான் என்றாலும் அவருடைய வளர்ப்புத் தாய் ஹலீமா. யசோதையின் வீட்டில் கண்ணன் வளரும்போது பல அற்புதங்களை அந்தத் தாய் காண்கிறார். ஹலீமாவின் வீட்டில் நபிகளார் வளரும்போது பல அற்புதங்களை அந்தத் தாய் காண்கிறார்.

Advertising
Advertising

(அந்த அற்புதங்களை விவரித்துச் சொல்ல ஒரு பக்கம் போதாது) பின்னாளில் கம்ச வதம் முடித்துக் கண்ணன் துவாரகையில் முடிசூட்டிக் கொள்ளும்போது எளிய கோலத்தில் வரும் யசோதையை கண்ணனே எழுந்து சென்று இன்முகத்துடன் வரவேற்றுத் தம் அருகில் அமர வைக்கிறார். “கண்ணனே எழுந்து மரியாதை அளிக்கும் அளவுக்கு யார் இந்தப் பெண்மணி?” என்று  சபையோர் திகைக்கின்றனர். “இவரே தம்மை வளர்த்த தாய் யசோதை” என்று சபையோரிடம் கூறுகிறார் கண்ணன். சபையோர் மகிழ்ந்தனர். பின்னாளில் வெற்றி வீரராய் மதீனாவின் ஆட்சியாளராய் நபிகளார் ஆன பிறகு அவரைக் காண வருகிறார் அன்னை ஹலீமா.

நபிகளார் எழுந்து சென்று அன்னையை எதிர்கொண்டு அழைத்து வந்து, தம் மேலங்கியை விரித்துத் தம் அருகில் அமர வைத்துக் கொள்கிறார். இறைத்தூதரே எழுந்து சென்று வரவேற்கும் அளவுக்கு யார் இந்த மூதாட்டி என்று சபையோர் நினைக்கின்றனர். அவர் நபிகளாரின் வளர்ப்புத் தாய் ஹலீமா என்பதை அறிந்து நபித்தோழர்கள் மகிழ்ந்தனர். “இறைத்தூதர்கள் அனுப்பப்படாத எந்தச் சமூகமும் உலகில் இல்லை” என்கிறது குர்ஆன்.(16:36) கண்ணன் இந்திய மக்களுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதராய் இருக்க வாய்ப்பு உண்டு. இந்திய இதிகாசங்களில் இஸ்லாமிய வாழ்வியல் கூறுகள் நிறைய உள்ளன. உரிய முறையில் ஆய்வுகளை முன்னெடுத்தால் பல வெளிச்சங்கள் கிடைக்கக்கூடும்.

இந்த வார சிந்தனை

“எச்சரிக்கை செய்பவர்( இறைத்தூதர்) எவரும் வருகை தராமல் எந்தச் சமுதாயமும் இருந்ததில்லை.” (குர்ஆன் 35:24)

சிராஜுல்ஹஸன்

Related Stories: