வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலையில் ஆலங்கட்டி மழை பெய்தது-குடியாத்தத்தில் இடி தாக்கி தென்னை மரங்கள் கருகின

வேலூர் :  வேலூர், திருப்பத்தூர் திருவண்ணாமலை மாவட்டங்களில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் 105 டிகிரியை தாண்டி சுட்டெரித்த கோடை வெயிலுக்கு இதமாக நேற்று மாலை திடீரென பலத்த காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை சீதோஷ்ண நிலையை முற்றிலும் மாற்றி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.தமிழகத்தில் ஆண்டுதோறும் கோடை வெயில் உச்சம் தொடும் மாவட்டங்களில் ஒருங்கிணைந்த வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கின்றன. இந்த ஆண்டு, அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த மாதம் 4ம் தேதி தொடங்கி 29ம் தேதி நிறைவடைந்தது. ஆனாலும், அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே 100 டிகிரி தாண்டி வெயில் சுட்டெரித்தது.அதன்பிறகு, அக்னி நட்சத்திர நாட்களில் எதிர்பாராமல் பெய்த கோடை மழை, குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையில் உருவான மழை போன்றவை வெயிலில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பை அளித்தது. அக்னி நட்சத்திரத்தின் பெரும்பாலான நாட்கள் மழையால் வெப்பம் தணிந்து காணப்பட்டது.இந்நிலையில், அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகு, வெயில் பாதிப்பு ஓரளவு குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை திருவண்ணாமலை மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்தது. தொடர்ந்து, 4 நாட்களாக வெயில் அளவு 100 டிகிரியை கடந்து வெயில் சுட்டெரித்ததுடன், அதனால் ஏற்பட்ட புழுக்கமும் மக்களை வேதனையில் ஆழ்த்தியது. பகலில் வெயிலும், இரவில் அனல் காற்றும் வீசியது. நேற்றும் வேலூரில் அதிகபட்சமாக 106.3 டிகிரியும், திருவண்ணாமலையில் அதிகபட்சமாக 100.2 டிகிரியும் வெயில் சுட்டெரித்தது. காலை 11 மணியில் இருந்தே வெயில் பாதிப்பு இருந்ததால், சாலைகளில் சென்றோர் பெரிதும் அவதிப்பட்டனர். மதியம் 1 மணி முதல் 3 மணி வரை சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உட்பட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதற்கேற்ப நேற்று காலையில் சுட்டெரித்த கோடை வெயிலுக்கு ஆறுதல் தரும் வகையில், நேற்று மாலை 5 மணியளவில் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் திடீரென கருமேகம் திரண்டு குளிர்ந்த நிலை ஏற்பட்டது.  தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, கே.வி.குப்பம், ஒடுகத்தூர் என பரவலாக காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.  இதில் குடியாத்தம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை 2 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதில் குடியாத்தம் அடுத்த செண்டத்தூர் கிராமத்தில் இடி தாக்கியதில் 2 தென்னை மரங்கள் தீப்பற்றி எரிந்ததில் தீயில் கருகி நாசமானது.அதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் நாட்றம்பள்ளி, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆலங்காயம் என பரவலாக மழை பெய்தது. திருவண்ணாமலையில் மாலை 5 மணிக்கு மேல், சுமார் அரைமணி நேரம் தொடர்ந்து மழை பெய்தது. அதனால், வெயிலின் தாக்கம் குறைந்து, பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்….

The post வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலையில் ஆலங்கட்டி மழை பெய்தது-குடியாத்தத்தில் இடி தாக்கி தென்னை மரங்கள் கருகின appeared first on Dinakaran.

Related Stories: