நீதி வழங்காமல் இருப்பாரா?

‘‘இயேசு ஓர் உவமை சொன்னார். ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும் என்று கேட்டுக்கொண்டே இருந்தார். நடுவரோ நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், நான் கடவுளுக்கு அஞ்சுவதிலை, மக்களையும் மதிப்பதில்லை என்றாலும், இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன்; இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டிருப்பார் என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். பின், ஆண்டவர் அவர்களிடம் நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால் தாம் தேர்ந்து கொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா?

அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும், மானிட மகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ? என்றார்.’’  (லூக்கா 18:28) காவல் நிலையத்திலிருந்து வருகிறேன் என்றார் காவலர். என்ன வேண்டும் உமக்கு? நீதான் வேண்டும்! என்ன சொல்கிறீர்? உன்மீது ஒரு புகார் வந்திருக்கிறது. அதுபற்றி விசாரிக்க அதிகாரி விரும்புகிறார். நாளைக்கு நீ காவல் நிலையம் வரவேண்டும். இப்படிச் சொல்லிவிட்டுக் காவலர் போய் விட்டார். இவன் யோசித்தான். நாம் எந்தத் தப்பும் செய்யவில்லையே என்று தனியே செல்லத் தயங்கி யோசித்துக் கொண்டிருந்தபோது நெருங்கிய மூன்று நண்பர்கள் அவனது நினைவிற்கு வந்தார்கள்.

அந்த மூவரில் ஒருவன் மிகவும் நெருக்கமானவன். அந்த நண்பனைப் பார்த்து விவரம் சொன்னான். காவல் நிலையம் வந்து நீ எனக்காக வாதாடணும் என்றான். அதெல்லாம் முடியாது என்று சொல்லிவிட்டான் அவன். இவனுக்கு அதிர்ச்சி. இவனே இப்படி சொல்லிவிட்டானே என்கிற வேதனையுடன் அடுத்த நண்பனைத் தேடிப் போனான். அவனிடம் விவரம் சொன்னான். வரமுடியாது என்று சொல்லவில்லை. நான் வருகிறேன், ஆனால் காவல் நிலைய வாயில் வரைதான் வரமுடியும். அதைத்தாண்டி என்னால் வரமுடியாது என்றான்.

வாசல் வரைக்கும் வந்து என்ன பயன்? எனவே, மூன்றாவது நண்பனிடம் போனான். அவன் மிகவும் நெருக்கம் இல்லாதவன் என்றாலும் விவரம் கேட்டவுடன் எதுவும் சொல்லாமல், உடனே புறப்படு, போகலாம் என்றான். அவன் கடைசி வரை வந்தான். காவல்நிலைய அதிகாரியிடம் பரிந்து பேசினான். பிரச்னையிலிருந்து விடுவித்தான். சரி! அந்த மூன்று நண்பர்கள் யார் தெரியுமா? முதல் நண்பன் பணம், இரண்டாவது நண்பன் சொந்தம், மூன்றாவது நண்பன் நற்செயல்கள். கடைசி வரையில் நம்மோடு வந்து நம்மைக் காப்பாற்றுவது நாம் செய்கிற நல்ல செயல்கள்தான். அதைத்தான் புண்ணியம் என்கிறது ஆன்மிகம்.

‘‘மணவைப்பிரியன்’’ ஜெயதாஸ் பெர்னாண்டோ

Related Stories: