பாளை ஆயிரத்தம்மன் கோயிலில் தசராவுக்கு கால்நாட்டு வைபவம் : அக்.8ல் கொடியேற்றம்

நெல்லை: பாளை ஆயிரத்தம்மன் கோயிலில் தசரா விழாவுக்கான கால்நாட்டு வைபவம் நேற்று நடந்தது. அக். 8ம்தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது.

பாளை ஆயிரத்தம்மன் கோயிலில் அக்டோபர் 7ம் தேதி அம்பாளுக்கு மாக்காப்பு அலங்காரத்துடன் தசரா விழா துவங்குகிறது. மறுநாள் (8ம் தேதி) காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. இதையொட்டி தசரா விழாவுக்கான கால்நாட்டு வைபவம் நேற்று நடந்தது. இதையொட்டி பந்தல்கால் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோயில்முன் நடப்பட்டது. இதை முன்னிட்டு முத்தங்கி சேவை சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் அருள்பாலித்தார். இதையடுத்து பந்தல் அமைத்தல், அழைப்பிதழ் அச்சடித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை விழா குழுவினர் மேற்கொள்கின்றனர். அக்டோபர் 10 முதல் 18ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறும் தசரா திருவிழாவில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளி கொலு வீற்றிருப்பார்.

10ம் திருநாளான அக்டோபர் 19ம்தேதி விஜய தசமி அன்று பாளையில் உள்ள 12 அம்மன் கோயில்களான ஆயிரத்தம்மன், தூத்துவாரி அம்மன், வடக்கு, தெற்கு முத்தாரம்மன், யாதவர் உச்சினி மாகாளி, கிழக்கு உச்சினி மாகாளி, வடக்கு உச்சினி மாகாளி, விஸ்வகர்மா உச்சினி மாகாளி, புதுப்பேட்டை உலகம்மன், புது உலகம்மன், சமாதானபுரம் மாரியம்மன், வண்ணார்பேட்டை பேராத்துச்செல்வி அம்மன் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோயில்களில் இருந்து மின்னொளி அலங்காரத்தில் அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளியதும் வீதியுலா நடக்கிறது. அக். 20ம்தேதி சூரம்சம்காரத்துடன் தசரா விழா நிறைவுபெறுகிறது. ஏற்பாடுகளை தசரா குழுவினர் செய்து வருகின்றனர்.

Related Stories: