விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பிள்ளையார்பட்டியில் கஜமுக சூரசம்ஹாரம் : ஏராளமானோர் தரிசனம்

திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் சதுர்த்திவிழாவை முன்னிட்டு அசுரனை வதம் செய்யும் கஜமுக சூரசம்ஹாரம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா நடந்து வருகிறது. 6ம் திருநாளான நேற்று மாலை அசுரனை வதம் செய்ய வரும் விநாயகப்பெருமானை பெண்கள் மலர்களால் அலங்கரித்த கோலம் போட்டு வரவேற்றனர். தொடர்ந்து விநாயகர், கோயிலில் இருந்து புறப்பட்டு கோயிலை ஒரு சுற்றுச் சுற்றி வந்து மாலை 6.50 மணியளவில் கோயிலின் கிழக்கு கோபுரம் அருகே அசுரனை வதம் செய்யும் கஜமுக சூரசம்ஹாரம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 9ம் திருநாளான நாளை மறுநாள் செப். 12ம் தேதி காலையில் கோயிலில் இருந்து திருத்தேருக்கு சுவாமி எழுந்தருளல் நடைபெறும். மாலையில் வருடம் ஒருமுறை மட்டும் நடைபெறும் சந்தனக்காப்பு சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சி தருவார். மாலை 4 மணியவில் தேரோட்டம் நடைபெறும். இரவு சுவாமி யானை வாகனத்தில் திருவீதி உலா வருவார். செப். 13ம் தேதி காலையில் கோயில் குளத்தில் விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். மதியம் உச்சிகாலப் பூஜையில் மூலவருக்கு ராட்சத கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைபெறும். அன்று இரவு பஞ்சமூர்த்திகள் திருவீதிஉலா நடைபெறும்.

Related Stories: