குளத்தூர் அருகே விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா

குளத்தூர்: குளத்தூர் அருகே விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. குளத்தூர் அருகே த.சுப்பையாபுரம் கிராமத்திலுள்ள குழந்தை விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா கடந்த 5ம்தேதி மகாகணபதி பூஜை, புண்யாகவாஜனம், கணபதிஹோமம், நவக்கிரஹ ஹோமம், சுதர்ஸண ஹோமம், சுத்தமகாலட்சுமி ஹோமத்தை தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகளுடன் துவங்கியது. இரவு முதல்கால யாகசாலை பூஜை, யந்திர ஸ்தாபனம், சுவாமி பிரதிஷ்டை நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜையுடன் தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து 10 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டதையடுத்து விநாயகருக்கு பால், சந்தனம், விபூதி, இளநீர் என பல்வேறு அபிஷேகம் மற்றும் அலங்காரம், சிறப்பு தீபாராதனைகளுடன் பூஜைகள் நடந்தது. மதியம் 12மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குழந்தை விநாயகரை வழிபட்டு சென்றனர். ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர்கள் செய்திருந்தனர்.

Related Stories: