வடசென்னை பகுதியில் ரூ80 லட்சம் மதிப்புள்ள போதை பவுடர் பறிமுதல்: 9 பேர் கைது தனிப்படை போலீசார் அதிரடி

சென்னை : வடசென்னை பகுதிகளான ராயபுரம், காசிமேடு, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், மண்ணடி, பாரிமுனை, பூக்கடை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் போதை மாத்திரை பவுடர் உள்ளிட்டவை திருட்டுத்தனமாக கொண்டு வந்து விற்பனை செய்து வருவதாக வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் 3 தனிப்படை அமைத்து அந்த பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வந்தனர். இதுதொடர்பாக கடந்த ஒரு வாரமாக போதைப்பொருள் மறைத்து விற்கும் கும்பலை சேர்ந்த ஒரு சிலரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் தனிப்படை போலீசார் நேற்று திருவல்லிக்கேணி பகுதியில் லாட்ஜ்கள் மற்றும் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ஒரு கும்பலை பிடித்தனர். அவர்களிடமிருந்து இரண்டு கிலோ கேட்டமின் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அங்கிருந்த 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்து துறைமுகம் உதவி ஆணையர் வீரகுமாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் வடக்கு கடற்கரை ஆய்வாளர் ராஜகுமார் நடத்திய விசாரணையில், திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த ஜாகிர் உசேன்(52), முகமது சுல்தான்(59), நாசர்(55), சுன்னத்(42), அசாருதீன்(39) என்பது தெரியவந்தது. இவர்கள் போதை பவுடரை பதுக்கி வைத்து திருட்டுத்தனமாக விற்பனை செய்து வந்துள்ளனர். மேலும் இந்த கும்பல் எங்கிருந்து போதை பவுடரை வாங்கி யாருக்கெல்லாம் விற்பனை செய்கிறார்கள் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதேபோல், தனிப்படை போலீசார் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ரியாஸ் உசேன்(23), திருவல்லிக்கேணியை சேர்ந்த சித்திக் முகமது(34) யாசின் மில்பர்(20), ஏழுகிணறு பகுதியை சேர்ந்த அமித் அபிக்(23) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 7 செல்போன்கள், 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். இவர்களும் கேட்டமின் என்ற போதை பவுடரை பதுக்கி விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. 4 பேரையும் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  இவர்கள் வடசென்னை பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 9 பேரையும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதை பவுடரின் மொத்த மதிப்பு ₹80 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கும்பலை சேர்ந்தவர்களை தனிப்படை போலீசார் தேடிவருகின்றனர்….

The post வடசென்னை பகுதியில் ரூ80 லட்சம் மதிப்புள்ள போதை பவுடர் பறிமுதல்: 9 பேர் கைது தனிப்படை போலீசார் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: