ஜாதகத்தில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு?

ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் ஒவ்வொரு விதமான கிரக அமைப்புக்கள். மூலம், பார்வை, சேர்க்கை, ஆட்சி, உச்சம், மூலத் திரிகோணம். பஞ்ச மகாபுருஷ யோகம், பலவகையான ராஜ யோகங்கள் உள்ளன. இந்த வகையான யோகங்கள் சுபயோகம், சுப கத்திரி யோகம், பாப கத்திரி யோகம் என பல பிரிவுகள் இருக்கின்றன. இதில் இந்த நீசபங்க ராஜயோகம் என்பது மிகவும் பிரபலமான யோகமாகும். இது அனுபவபூர்வமாகவும் மிகச்சரியாக பலன் தருகிறது. இதை கிராமப் புறங்களில் உள்ள பெரியவர்கள் பேசும்போது அவருக்கு நீச்ச தசை அதுதான் பல வகைகளில் பெரிய யோகத்தை செய்து விட்டது என்று சொல்வார்கள். அந்தளவிற்கு இந்த யோகம் மிகப் பிரசித்தமான ஒன்று. நீசம் என்பது மிகவும் தாழ்ந்த நிலையை குறிக்கும். கிரகத்தின் வலிமை குன்றிய அமைப்பு, எந்த கிரகம் நீச்சமோ அந்தக் கிரகத்தின் தன்மைகள், காரகத்துவங்கள் எல்லாம் நீர்த்துப் போய்விடும்.

அந்தக் காலத்தில் ஒருவரை மிகவும் கடும் சொற்களால் ஏசும்போது அவன் நீச்சன், நல்ல எண்ணம், நல்ல புத்தி இல்லாதவன். நீசத் தொழில், நீச்ச சேர்க்கை உடையவன் என்று சொல்வார்கள். அது இந்த கிரக நீச்சத்தன்மையை வைத்து சொல்லப்பட்டது. எல்லா கிரகங்களும் ஒவ்வொரு வீட்டில் நீச்சம் அடையும். நீச்சம் பெற்ற கிரகம் நீச்ச தன்மையிலேயே இருந்தால் அந்த கிரகத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் பலன்கள் ஒரு 20 சதவிகிதம்கூட கிடைக்காது. அதேநேரத்தில் அந்தக் கிரகத்திற்கு நீச்ச பங்கம் ஏற்பட்டு இருந்தால் மிகப்பெரிய ராஜயோகத்தை கொடுத்துவிடும். சூரியன் துலா ராசியில் நீசம் அடையும். அதாவது ஐப்பசி மாதம் பிறந்தவர்களுக்கு சூரியன் நீசமாக இருப்பார். சந்திரன் விருச்சிக ராசியில் நீசம். குரு மகர ராசியில் நீசம். புதன் மீன ராசியில் நீசம். சுக்கிரன் கன்னி ராசியில் நீசம். சனி மேஷ ராசியில் நீசம். செவ்வாய் கடக ராசியில் நீசம்.
நீச கிரகம் எப்போது ராஜயோகம் கொடுக்கும்?

நீசன் நின்ற ராசிக்குடையவன் ஆட்சி, உச்சம் பெற்றால் நீசபங்க ராஜயோகம்.
நீச கிரகம் பரிவர்த்தனையில் இருந்தால் நீசபங்க ராஜயோகம்.
நீச்ச கிரகம் வர்க்கோத்தமம் அடைந்தால் நீசபங்க ராஜயோகம்.
நீச கிரகம் சந்திரனுக்கு கேந்திரத்தில் இருந்தால் நீசபங்க ராஜயோகம்.
நீச கிரகத்தை இன்னொரு நீச்ச கிரகம் பார்ப்பது நீசபங்க  
ராஜயோகம்.

நீச கிரகம் நவாம்ச சக்கரத்தில் உச்சம், ஆட்சி பெற்றால் நீசபங்க ராஜயோகம்.
நீச கிரகம் வக்கிரமாக இருந்தால் நீச பங்க ராஜயோகம்.
சாஸ்திரம் காட்டும் வழி  ஜோதிட பரிபாடல் விளக்கம்

ஆதிரை பரணி கார்த்திகை
ஆயில்யம் மூப்பூரங் கேட்டை
தீதிரு விசாகஞ்சோதி
சித்திரை மகமீராறும்
மாதங் கொண்டார் தாரார்
வழிநடைப் பட்டார் மீளார்
பாய் தனிற் படுத்தார் தேறார்
பாம்பின் வாய்த் தேரை தானே!
விளக்கம்:

பரணி, கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், சித்திரை, சுவாதி, விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி. இந்த 12 நட்சத்திரங்களில் சில விஷயங்களை செய்யக்கூடாது என ஜோதிடப் பாடல் நமக்கு அறிவுறுத்துகிறது. குறிப்பாக இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் பணம் கடன் கொடுத்தல், கொடுக்கல், வாங்கல் செய்வது கூடாது. கடன் கொடுத்தால் வசூல் செய்வதில் சிரமங்கள், சிக்கல்கள், வழக்குகள் ஏற்படும். கடன் பெற்றவருக்கு திருப்பி செலுத்த முடியாத அளவிற்கு எதிர்மறை பலன்கள் உண்டாகும். அதேபோல் நகைகளையும் இரவில் தரக் கூடாது. வீட்டு பத்திரம், நகைகளை அடமானம் வைக்கக் கூடாது. நீண்டதூர பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. காரணம் பயணத்தில் தடைகள் உண்டாகும்.

பொருட்கள் தொலைந்துபோக வாய்ப்புள்ளது. குறித்த நேரத்தில் திரும்ப முடியாத சூழ்நிலைகள் வரும். பயணத்தின் நோக்கம் நிறைவேறாமல் போகும். மேலும் மருத்துவரை முதன் முதலாக சென்று சந்திக்கக் கூடாது. மருத்துவமனையில் சாதாரண சிகிச்சைக்காகவோ, அறுவை சிகிச்சைக்காகவோ சென்று சேரக் கூடாது என இந்த ஜோதிட பரிபாடல் மூலம் நாம் அறிய முடிகிறது. பிரபலமாக உள்ளவர்களின் ஜாதக கிரக அமைப்புக்களைக் கொண்டு, ஆதாரப் பூர்வமாக, அனுபவப் பூர்வமாக எப்படி யோகத்தை தந்துள்ளது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. இப்படிப்பட்ட யோக அமைப்புக்கள் நம் ஜாதகத்தில் இருந்தால் நாமும் ஏதாவது ஒரு வகையில் வாழ்க்கையில் உச்ச நிலையை அடைய முடியும் என்ற நம்பிக்கை உண்டாகும்.

இங்கிலாந்து மகாராணி குயின் விக்டோரியா ஜாதகம்:

மிகப்பெரிய அரச பரம்பரையில் பிறந்தவர். 26 நாடுகளுக்கும் மேலாக தன் ஆட்சி, ஆளுமையில் வைத்திருந்தவர். இவரின் ஆட்சி காலத்தில்தான் ஆங்கிலேய ஏகாதிபத்தியம் பரந்து விரிந்தது. தனது 19வது வயதில் அரச யோகம் கிடைக்கப் பெற்றது. பாசம் மிகுந்த குடும்ப வாழ்க்கை மிக அதிகமாக 9 குழந்தைகள் வாரிசுகளாக பிறந்தன. ஒரு சில விஷயங்களை நம் பூர்வ புண்ணிய கர்ம வினைப்படி இறைவன் கூட்டுவிக்கிறான். இந்த பிறவியில் இவருக்கு மிகப்பெரிய அரிய உயர்ந்த ஸ்தானம் கிடைத்துள்ளது. ஜோதிட சாஸ்திர கிரக அமைப்பின்படி இவரின் ஜாதகத்தில் உள்ள அமைப்புக்களை தெரிந்து கொள்ளலாம். ரிஷப லக்னம், ரிஷப ராசி, ராசியில் சூரியன். இது மிக அபூர்வ அமைப்பாகும்.

லக்னம் ராசி, சூரியன். அதாவது விதி, மதி, கதி என்ற மூன்றும் ஒரே ராசியில் அமைந்திருப்பது. நான்காம் அதிபதி பூமியை, நாடாள்வதை குறிக்கும் இடம். அந்த சூரியன் உச்சம் பெற்ற சந்திரனுடன் சேர்ந்து அமாவாசை யோகம், சந்திரன் வர்க்கோத்தமம். பூமிக்காரகன் அங்காரகன் மீன ராசியில் வர்க்கோத்தமம். தனம், குடும்ப, வாக்கு, பூர்வ புண்ணியம் ராஜயோகத்தை தரக்கூடிய நவாம்சத்தில் உச்சம் பெற்று கன்னி ராசியில் இருக்கிறார். மீனத்தில் ராகு, கன்னியில் கேது, வர்க்கோத்தமம். ரிஷப லக்னத்திற்கு தர்மகர்மாதிபதியாக இருக்கும் சனியும், லாபாதிபதி குருவும் பரிவர்த்தனை யோகத்தில் உள்ளார்கள். குரு, கேதுவைப் பார்ப்பது ஐஸ்வர்ய யோகம், குரு, கேது ரிஷப ராசி வரை தொடர்ந்து இருப்பது பூமி புரந்தருளும் சக்கரவர்த்தி யோகமாக பழைய சுவடிகளில் சொல்லப்பட்டுள்ளது.

மர்லின் மன்றோ ஜாதகம்

உலகத்தையே தன் அழகு, நடிப்பு, மாடலிங் என பல வகைகளில் கலக்கி ஹாலிவுட்டையே தன் வசப்படுத்தி, வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும்  கிறங்கடித்த மிகப் பிரபல நடிகை, பாடகி மர்லின் மன்றோவின் ஜாதகம். இந்த ஜாதகத்தில் பல சூட்சுமங்கள் மறைந்து கிடக்கின்றன. சாதாரணமாக பார்க்கும்போது ஜாதகத்தில் யோகங்கள் எதுவும் இல்லாததுபோல் தோன்றும். ஆனால், இந்த அளவிற்குத் தான் சார்ந்த துறையில் உயர் உச்சத்தை தொட்ட இந்த பெண்ணின் ஜாதகத்தில் மிக அபூர்வமான யோக அமைப்புக்கள் சிறப்பாக அமைந்துள்ளன. அதனால்தான் பணம், புகழ், செல்வாக்கு அஷ்ட ஐஸ்வர்யங்கள் கொட்டியது. இவர் பிறந்தது கடக லக்கினம். மகர ராசி. லக்னமும், ராசியும் மிகவும் பலமாக யோகத்துடன் அமைந்துள்ளது.

லக்னாதிபதி சந்திரன் லக்னத்தைப் பார்ப்பது மிகவும் விசேஷம். அதேபோல் ராசிநாதன் சனி துலா ராசியில் உச்சம் பெற்று சந்திரனுக்கு 10ம் வீட்டில் அமைந்தது சசி யோகம். லக்னாதிபதி சந்திரன் கடக லக்னத்திற்கு யோகாதிபதியான செவ்வாயின் நட்சத்திரமான அவிட்ட நட்சத்திரத்தில் இருப்பது. பிரபல ராஜயோகத்தைக் கொடுத்தது. 9, 10க்குடைய தர்மகர்மாதிபதிகள் சேர்க்கை பெற்று இருவரும் தனம், வாக்கு ஸ்தானத்தைப் பார்ப்பது லட்சுமி யோகம். லக்ன கேந்திரத்தில் சந்திரன், சந்திர கேந்திரத்தில் லக்னம், சந்திரனுக்கு 2ல் குரு, செவ்வாய். சந்திரனுக்கு 4ல் சுக்கிரன், சந்திரனுக்கு 5ல் புதன் என சில சூட்சுமமான கணக்குகள் இந்த ஜாதகத்தில் இருப்பதால் இவர் சிகரத்தை தொட்டார். அஷ்டவர்க்கப் பரல் கணித அமைப்பில் இந்த ஜாதகம் சிறப்பாக உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினி அவர்களின் முந்தைய நிலை, அவரின் அசுர வளர்ச்சி, புகழ், செல்வம், செல்வாக்கு என எல்லா விஷயங்களும் அனைவரும் அறிந்ததே. இவருக்கு ஜாதக கிரக அமைப்பு, யோகங்களின் பங்களிப்பு எப்படி என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். இவர் குருவின் ஆதிக்கத்தில் பிறந்து இருக்கிறார். பிறந்த தேதி 12, அதாவது 3ஆம் எண் விதி எண் அதாவது தேதி, மாதம், வருடம் ஆகிய மூன்றையும் கூட்டினால் வரும் எண் 3. இந்த எண் குருவின் ஆதிக்கம் உள்ள எண்.
சிம்ம லக்னத்திற்கு பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியாகிய குரு, ஏழாம் இடத்தில் இருந்து லக்னத்தைப் பார்க்கிறார். நவாம்சத்தில் தனது சொந்த வீடாகிய தனுசில் ஆட்சியாக இருக்கிறார். புதன் நவாம்சத்தில் உச்சமாக இருக்கிறார். சுக்கிரன் நவாம்சத்தில் ரிஷப ராசியில் ஆட்சியாக இருக்கிறார்.

இந்த அம்ச பலம் ஜாதகத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது. பல வகையான யோகங்கள் இருப்பதால்தான் இந்த அளவிற்கு உயர் உச்ச நிலைக்கு வரமுடிந்தது லக்னாதிபதி சூரியன் சதுர்த்த கேந்திரத்தில் இருப்பது சிறப்பாகும். நான்காம் அதிபதி செவ்வாய் மகர ராசியில் உச்சம் பெற்றதால் மகா பாக்கிய யோகம். விரய ஸ்தானாதிபதியாகிய சந்திரன் தனது சொந்த நட்சத்திரமான திருவோணத்தில் இருப்பதும், விரய ஸ்தானத்தைப் பார்ப்பதும் மிக மிக சிறப்பான அமைப்பாகும். லக்னத்திற்கு 4, 5, 6, 7, 8 ஆகிய வீடுகளில் தொடர்ந்து கிரகங்கள் இடைவிடாமல் இருப்பது கிரக மாலிகா யோகம். வித்தைக்கு அதிபதியான புதனுடன், கலைகளுக்கு அதிபதியான சுக்கிரன் சேர்ந்திருப்பது கலைத்துறையில் பெரும் புகழையும், பொருளையும் ஈட்டித் தந்துள்ளது. இன்றும் சில நுட்பமான சார பரிவர்த்தனை யோகங்கள், பார்வை யோகங்கள் காரணமாக மிக உயர்ந்த நிலையை அடைந்துள்ளார்.

ஜோதிட முரசு மிதுனம் செல்வம்

Related Stories: