திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வையொட்டி சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணத்துடன் கும்பாபிஷேக பூஜைகள் செய்யப்பட்டன. யாக சாலையின் மூலவர் மற்றும் கோயிலில் உள்ள இதர சன்னதிகளான வரதராஜ சுவாமி, யோகநரசிம்மர், ராமானுஜர், வகுலமாதா சன்னதியில் உள்ள மூலவர்களின் ஜீவ சக்திகள் கும்பத்திற்கு கொண்டு வரப்பட்டு யாகசாலையில் வைத்து பூஜைகள் நடந்தன.

பின்னர் மூலவர் சன்னதிக்கு மேல் உள்ள ஆனந்த நிலையம் மற்றும் இதர சன்னதிகளின் கோபுரங்களுக்கு மராமத்து பணிகள், தங்க கொடிமரம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இன்று கருவறைக்கு மேல் உள்ள ஆனந்த நிலையம், ராஜகோபுரம் மற்றும் இதர சன்னதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி குறைந்தளவு பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மீண்டும் வரும் 2030ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெறும் என்பதால் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். பக்தர்கள் சிரமமின்றி கும்பாபிஷேகத்தை காண தேவசம் போர்டு சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது.

Related Stories: