அருணகிரி உலா
பொரவாச்சேரி, எட்டுக்குடி ஆகிய இரு தலங்களிலும் ஒரே மாதிரியான ஆறுமுகன் சிலைகளை வடித்த சிற்பி, கட்டை விரலையும் கண்களையும் இழந்த நிலையில் திருவாரூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள பிரம்மபுரத்திலுள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயிலை அடைகிறான். ஆறுமுகன் வடிவத்தை மனக்கண்ணால் தரிசித்து மீண்டும் அதே போன்ற ஒரு ஆறுமுகன் சிற்பத்தை வடிக்கத் துவங்குகிறான். சிறுமி ஒருவள் அவருக்கு உறுதுணையாக இருக்கிறாள். சிலையும் அற்புதமாக உருவாகிறது. சிலையின் கண்களைத் திறக்கும் நாளன்று சிற்பி மிகவும் மனமுருகி ஆறுமுகனை வேண்ட அன்றே இழந்த பார்வை மீண்டது. இதுகாறும் உதவி செய்து வந்த சிறுமி காணாமற்போய் விட்டிருந்தாள்.
தன் எண்ணத்தையே கண்ணாகக் கொண்டு சிற்பி செயல்பட்டதால் அத்தலமும் எண்கண் என்று பெயர் பெற்றது.மூன்றாவது ஆறுமுகன் சிலையைக் காணும் ஆர்வத்துடன் நாமும் எண்கண் பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்குச் செல்கிறோம். ஆறுமுகன் சந்நதிக்கு நேரே உள்ள நுழைவாயில் வழியாக உள்ளே செல்கிறோம். தேவியருடன் ஆறுமுகன் வீற்றிருக்கும் அழகை வர்ணிக்க வார்த்தைகள் போறாது. ஆறுமுகனின் திருவுருவ அழகில் மயங்கும் நாம் அருணகிரியாரின் சொல்லழகில் மயங்கி எண்கண் திருப்புகழைச் சமர்ப்பிக்கிறோம். சிறுவன் முருகன் குங்குமம், சந்தனம் பூசி, கடப்பம், சண்பகம் ஆகிய மாலைகளைத் தன் திருத்தோள்களில் அணிந்து கொண்டு பாதச் சிலம்புகள் கொஞ்ச மயிலேறி அசைந்தாடி வரும் எழிலை வர்ணிக்கும் அழகிய பாடல் இது.
‘‘சந்தனம் திமிர்ந்தணைந்து குங்குமம் கடம்பிலங்கு
சண்பகம் செறிந்திலங்கு திரள் தோளும்
தண்டையம் சிலம்பலம்ப வெண்டையம் சலன்சலலென்று--
சஞ்சிதம் சதங்கை கொஞ்ச மயிலேறித்
திந்திமிந் திமிந் திமிந்தி தந்தனம் தனந்தனென்று
சென்றசைந்துகந்து வந்து க்ருயையோட
சிந்தையம் குலம் புகுந்து சந்ததம் புகழ்ந்துணர்ந்து
செம்பதம் பணிந்திரென்று மொழிவாயே’’
என்பது பாடலின் முற்பகுதி.புனித சந்தனம், குங்குமம் ஆகியவை பூசிக் கொண்டதும், கடப்பம், சண்பகம் ஆகிய மலர்களாலான மாலைகளை அணிந்து கொண்டதுமான திரண்ட தோள்களுடனும், பாதங்களில் தண்டைகளும், அழகிய சிலம்புகளும் மாறி மாறி ஒலிக்கவும், வெண்டையம் சலன் சலன் என்று சப்திக்கவும், இனிமையான சதங்கைகள் கொஞ்சுவது போல் ஒலிக்கவும், மயில் மேல் ஏறி, தாளத்தோடு அசைந்து ஆடி வந்து, கருணையுடன் என் மனக்கோயிலில் புகுந்து ‘‘எந்நாளும் என் புகழைத் தியானித்து என் திருவடிகளை வழிபாடு செய்’’ என்று உபதேசிப்பாயாக! (‘‘நீ வா என நீ இங்கழைத்து பாராவார ஆனந்த சித்தி தர வேணும்’’ என்பது மற்றொரு திருப்புகழ்)
‘‘அந்தமந்தி கொண்டிலங்கை வெந்தழிந்திடும்ப கண்டன்
அங்கமும் குலைந்தரங்கொள் பொடியாக
அம்ப கும்பனும் கலங்க வெஞ்சினம் புரிந்து நின்று
அம்பு கொண்டு வென்ற கொண்டல்
மருகோனே
இந்துவும் கரந்தை தும்பை கொன்றையும் ஜலம் புனைந்திடும்
பரன்தன் அன்பில் வந்த குமரேசா
இந்திரன் பதம் பெறண்டர் தம் பயம் கடிந்த பின்பு
எண்கணங்கமரிந்திருந்த பெருமாளே’’
சிரஞ்சீவியான, ஒப்பற்ற குரங்கான அனுமனைக் கொண்டு இலங்கை வெந்தழியவும், கொடும் செயலைக் கொண்ட வீரனாம் ராவணனது உடல் அரத்தினால் ராவியது போல் பொடித் தூளாகவும், அம்பு முதலான பாணங்களைக் கொண்டிருந்த கும்பகர்ணன் உள்ளங்கலங்கவும், மிகுந்த கோபத்துடன் நின்று அம்பை ஏவி வெற்றி கொண்ட மேகவர்ணனாம் திருமாலின் மருமகனே!பிறை, திருநீற்றுப்பச்சை, தும்பை, கொன்றை, கங்கை இவற்றை அணியும் சிவபெருமானது அன்பால் தோன்றிய குமரேசனே! தேவர்கள் பயம் நீங்குமாறும் தேவேந்திரன் தன் பதவியைத் திரும்பப் பெறுமாறும் செய்து, பின்னர் எண்கண் எனும் திருத்தலத்தில் வந்தமர்ந்த பெருமாளே!
முருகனைத் தரிசித்தவண்ணம் இடப்புறம் திரும்பி அமைதியாகக் காட்சி தரும் பிரம்மபுரீஸ்வரரை வணங்குகிறோம். ஷண்முகநாத சபையிலுள்ள உற்சவரும் மூல விக்ரஹமான ஆறுமுகனைப் போலவே அமைக்கப்பட்டிருக்கிறார். வலக்கரங்களுள் ஒன்று முதுகிலுள்ள அம்பறாத்தூணியிலிருந்து வில்லை உருவி எடுப்பது போன்று அமைக்கப்பட்டிருக்கும் அழகை அருகிலிருந்து கண்டு பிரமிக்கிறோம். (சிலைக்குப் பின்புறம் சுத்தமான பெரியகண்ணாடியை வைத்தால் இன்னும் தெளிவாக ஆறுமுகங்களைத் தரிசிக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது)சப்தமாதர்கள், பிரதான விநாயகர், தனிச்சந்நதியில் தட்சிணாமூர்த்தி, கோஷ்டத்து நர்த்தன விநாயகர் ஆகியோரைத் தரிசிக்கிறோம். சனீஸ்வரர் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
ஆடல்வல்லான், இறைவி பிரஹன் நாயகி, அர்த்தநாரீஸ்வரர், துர்கை, பிரம்மா ஆகியோரையும், பஞ்சபூத லிங்கங்கள், பூரணா புஷ்கலையுடன் விளங்கும் சாஸ்தா, பாலசுப்ரமண்யர், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர் மற்றும் நவகிரஹங்களைத் தரிசித்து வெளியே வருகிறோம்.சிற்பிக்குக் கண் கொடுத்த எண்கண் அழகனை நமது அகக்கண்களையும் திறந்து வைக்குமாறு வேண்டியவண்ணம் எண்கண்ணிலிருந்து புறப்படுகிறோம்.அடுத்ததாக நாம் செல்லவிருக்கும் தலம் புள்ளிருக்கு வேளூர்; ஆம், இதுவே இன்று வைத்தீஸ்வரன் கோயில் எனப்படுகிறது. புள் = ஜடாயு; இருக்கு = ரிக் வேதம், வேள் = முருகன், ஊர் = சூரியன். நால்வரும் இறைவனைப் பூஜித்த தலமாதலால் புள்ளிருக்கு வேளூர் எனப் பெயர் பெற்றது.
‘‘ஆலாலம் உண்டு கண்டம் கறுத்தானைக்
கண் அழலால் காமன் ஆகம் காய்ந்தானைக்
கனல், மழுவும், கலையும் அங்கை பொறுத்தானைப்
புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே’’
- அப்பர் திருத்தாண்டகம்
சீர்காழிக்கும் மயிலாடுதுறைக்குமிடையில் சாலை மருங்கிலேயே கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகப்பெருமானிடம் ‘‘ஞானப்பொருளான உன்னைக் கொஞ்சமேனும் போற்றத் தெரியாமல் மரக்கட்டை போல் இருக்கிறேனே’’ என்று தன்னைத் தானே நொந்து கொள்கிறார் 16,000 பாடல்கள் பாடிய அருணகிரிநாதர்! அவர் முன் நாம் எம்மாத்திரம் என்றெண்ணியவாறு கோயிலுக்குள் நுழைகிறோம்.கோயிலின் கிழக்கில் வீரபத்திரரும், மேற்கில் பைரவரும், தெற்கில் கற்பக விநாயகரும், வடக்கில் காளியும் காவல் புரிகின்றனர்.கிழக்கு வாயிலில் வேம்பு உள்ளது. இதுவே ஆதி வைத்யநாதபுரி எனப்படுகிறது. ஆதி வைத்யநாத சுவாமியையும், விநாயகரையும் கண்டு வணங்குகிறோம். கட்டைக் கோபுரத்தை ஓட்டி ஆதிபுராணேஸ்வரர், வீரபத்திரர் ஆகியோர் திருவுருவங்கள் உள்ளன. விஸ்தாரமான வெளிப்பிராகாரத்தை அடையும்போது நேரே பழநி ஆண்டவர் தரிசனம் அளிக்கிறார். இத்தலத்தில் அருணகிரியார் பாடிய ஆறு பாடல்களுள் ஒன்றை இங்கு சமர்ப்பிக்கிறோம்.
‘‘உரத்துறை போதத் தனியான
உனைச் சிறிதோதத் தெரியாது
மரத்துறை போலுற் றடியேனும்
மலத்திருள் மூடிக் கெடலாமோ
பரத்துறை சீலத்தவர் வாழ்வே
பணித்தடி வாழ்வுற் றருள்வோனே
வரத்துறை நீதர்க்கொரு சேயே
வயித்தியநாதப் பெருமளே’’
வலிமையுடன் பொருந்தியுள்ள தனிப்பெரும் ஞானமூர்த்தியான உன்னைச் சற்றேனும் புகழ்ந்து போற்றத் தெரியாதவன் நான்; மரக்கட்டை போல் ஜடமாக இருக்கும் நான், தன்னையும் மறைத்து ஞான சாதகங்களையும் மறைக்கும் மும்முலமாகிய இருள் மூடிக் கெட்டுப் போகலாமா?மேலான நிலையில் தூய வாழ்க்கை நடத்தும் தவசீலர்களின் செல்வமே! அடியவர்களைத் தன் சரணங்களில் பணிய வைத்து அவர்களுக்கு மரணமில்லாப் பெருவாழ்வை அருள்பவனே! வரமளிப்பதையே தம் தர்மமாகக் கொண்ட சிவனாரின் ஒப்பற்ற குழந்தையே! உடற்பிணி தீர்க்கும் வைத்தியர்களுக்குத் தலைவனாய் உயிர்ப்பிணி தீர்க்கும் பெருமாளே! (பவரோக வைத்தியநாதப் பெருமாளே - திருத்தணித் திருப்புகழ்) அல்லது வைத்யநாதராம் சிவபிரானுக்குப் பெருமாளே!
பழநி மலையில் மருந்தாய் நிற்கும் பழநி ஆண்டவரை அடுத்து ஜுரஹரேஸ்வரர் வீற்றிருக்கிறார். விடாத ஜுரத்தால் அவதிப்படுபவர்கள் இப்பெருமானுக்கு வழிபாடுகள் செய்து பயனடைகின்றனர். பிராகாரத்தை வலம் வருகையில் தெற்கு முகமாக வீற்றிருக்கும் அங்காரகனைத் (செவ்வாய்) தரிசனம் செய்யலாம். செவ்வாய்க்கு ஒரு முறை சரும நோய் ஏற்பட்டபோது இங்குள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி, வைத்தியநாத ஸ்வாமியை வழிபட்டு நோயிலிருந்து விடுபட்டான் என்பது ஐதீகம். எனவே இது அங்காரக க்ஷேத்திரம் எனப்படுகிறது. தெற்குப் பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி எழுந்தருளி உள்ளார்.
திருக்குளத்தின் அருகில் கற்பக விநாயகர் வீற்றிருக்கிறார். கோயில் உள்ளே அம்பிகை தையல்நாயகி அழகுற கோயில் கொண்டிருப்பதைக் காணலாம். வாயிற்படியின் இருபுறங்களிலும் அதிகார நந்தி உற்சவரும், ஜடாயு உற்சவரும் உள்ளனர். தையல் என்றால் அழகிய பெண் என்பது பொருள்; அழகிய பெண்களுக்கெல்லாம் நாயகியாக விளங்குபவள் தையல் நாயகி. ‘பாடகச் சிலம்பு’ எனத் துவங்கும் திருப்புகழில் அருணகிரியார் தையல் நாயகி பற்றிய குறிப்பை அளித்துள்ளார்.
‘‘சேடன் உக்க சண்டாள அரக்கர் குல
மாள அட்ட குன்று ஏழு அலைக்கடல்கள்
சேர வற்ற நின்றாடயில் கரம் ஈரறு தோள்
மேல் சேண்நிலத்தர் பொன் பூவை விட்டு
இருடி யோர்கள் கட்டியம் பாட எட்டரசர்
ஜேஜே யொத்த செந்தாமரைக் கிழவி புகழ்
வேலா நாடகப் புனம் காவலுற்ற சுக
மோகனத்தி மென் தோளி சித்ரவளி
நாயகிக்கிதம் பாடி நித்தமணி புனைவோனே
ஞான வெற்புகந்தாடும் அத்தர் தையல்
நாயகிக்கு நன் பாகர் அக்கணியும்
நாதர் மெச்ச வந்தாடு முத்தமருள் பெரு
மாளே!’’
ஆதிசேடன் நெரிய, பெரும்பாவிகளான அரக்கர் குலம் மடிய, உன்னால் அழிக்கப்பட்ட ஏழு மலைகளும் வலிமை குன்ற, ஏழு சாகரங்களும் ஒன்றாக வற்றிப் போக நின்று விளையாடிய வேல் பிடித்த கரங்கள், பன்னிரு தோள்கள் மேல் விண்ணோர் பூமாரி சொரிய, ரிஷிகள் கட்டியம் கூற, எண் திசைகளிலுமுள்ள அரசர்கள் ஜெய ஜெய என்று முழங்க, லட்சுமி தேவி மெச்சும் வேலா!வள்ளிமலையில் தினைப்புனத்தைக் காவல் செய்தவளும், முருகனுக்கு இன்பம் அளித்தவளும், மென்மையான தோள்களை உடையவளும் ஆகிய அழகிய வள்ளிக்கு மகிழ்ச்சி தரும் பாடல்களைப் பாடி தினமும் ஆபரணங்களை அணிவிப்பவனே! ஞானமலையில் உவப்புடன் விளையாடுபவரும், தையல் நாயகி எனும் உமையைத் தன் பாகத்தில் வைத்திருப்பவரும், ருத்ராக்ஷ மாலை அல்லது எலும்பு மாலையை அணிந்திருப்பவரும் ஆகிய சிவபெருமான் மெச்சும்படி வந்தாடி முத்தமளிக்கும் பெருமாளே! (வைத்தீஸ்வரன் கோயிலில் முருகன் ‘முத்துக்குமரன்’ என்றழைக்கப்படுகிறான்) (‘‘முத்துக்குமரனைப் போற்றுதும்’’ - மீனாட்சி பிள்ளைத் தமிழ்)
தெற்கு நோக்கியுள்ள தையல் நாயகி சந்நதியைச் சுற்றி வரத் தனிப் பிராகாரம் உள்ளது. சகல வியாதிகளையும் தீர்க்கத் திருவுளம் கொண்டு இறைவன் வைத்தியராகி வரும்போது, தையல் நாயகியம்மை தைல பாத்திரமும், வில்வமரத்து அடி மண்ணும் எடுத்துக் கொண்டு அவருடன் வருகிறாள் என்கிறது புராணம். முறைப்படி செய்யப்பட்ட இந்த மண் உருண்டையை (திருச்சாந்துருண்டை எனப்படுகிறது) சித்தாமிர்த தீர்த்தத்தோடு நியமமாகக் கலந்துண்பவர்கள் தீராத வினைகளையெல்லாம் நீக்கிக் கொள்வர் என நம்பப் படுகிறது.மூலவரைத் தரிசித்து இன்புறுகிறோம். கர்ப்பக்ருஹத்தருகில் வடக்கு முகமாக வீற்றிருக்கும் துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவளாகக் கருதப்படுகிறாள். உட்பிராகாரத்தில் சுவாமி சந்நதிக்கு மேற்புறம் நமது செல்லக் குழந்தையான செல்வ முத்துக்குமார சுவாமி வீற்றிருக்கிறார். ஆவலுடன் அச்சந்நதியை நோக்கிச் செல்கிறோம்.
சித்ரா மூர்த்தி
(உலா தொடரும்)
