களக்காடு கோயிலில் வைகாசி திருவிழா : நடராஜர் பச்சை சாத்தி எழுந்தருளும் வைபவம்

களக்காடு: களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோயில் வைகாசி திருவிழாவில், நாளை(26ம் தேதி) நடராஜர் பச்சை சாத்தி காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது. களக்காட்டில் உள்ள பழமைவாய்ந்த ஸ்ரீ சத்தியவாகீஸ்வரர்  கோமதி அம்பாள் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தேரோட்டத் திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான விழா, கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு அபிஷேகங்கள், இரவில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருதலும் நடந்து வருகிறது.

திருவிழாவின் 8ம் நாளான நாளை (26ம் தேதி) நடராஜர் பச்சை சாத்தி காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது. இதையொட்டி காலை 10 மணிக்கு நடராஜர், சிவகாமி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மதியம் 2 மணிக்கு நடராஜர் பச்சை சாத்தி காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறுகிறது. தொடர்ந்து நடராஜர் திருவீதி உலா வருகிறார்.

மாலை 4 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை இடம்பெறுகிறது. இரவு 7 மணிக்கு கங்காளநாதர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார். கங்காளநாதர் பக்தர்களின் பாவத்தை போக்க வருடத்திற்கு ஒரு முறை 8ம் நாளன்று மட்டுமே வெளிவருவது குறிப்பிடத்தக்கது. அவருக்கு அரிசி வழங்கி வழிபடுவது சிறப்புமிக்கதாகும், தொடர்ந்து சந்திரசேகர் மற்றும் சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள் திருவீதி உலா வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா 9ம் திருநாளான வருகிற 27ம் தேதி (ஞாயிறு) நடக்கிறது. அன்று மாலை 3 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோயில் ஊழியர்கள், விழா மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.  

Related Stories: