தோகைமலை பகவதியம்மன் கோயில் திருவிழா : திரளான பக்தர்கள் பங்கேற்பு

தோகைமலை: தோகைமலை பகவதியம்மன் கோவில் திருவிழாவில் கருப்பசாமிக்கு நூற்றுக்கணக்கான கிடாகுட்டிகளை கொடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்தனர். கரூர் மாவட்டம் தோகைமலையில் உள்ள பகவதியம்மன், கருப்பசாமி மற்றும் வெள்ளபட்டி மாரியம்மன் கோயில் திருவிழா 8 பட்டி ஊர்பொதுமக்கள் சார்பாக நடந்தது.  கடந்த வாரம் ஞாயிற்றுகிழமை அன்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. பின்னர் முதல் நாள் திருவிழாவின் போது காலை பகவதியம்மன் கோயிலில் இருந்து சிலாப்போடுதல், பறவைகாவடி, பால்குடம், தீர்த்தக்குடம், கரும்பு தொட்டி மற்றும் தீ சட்டி ஏந்தியவாறு வெள்ளபட்டி மாரியம்மன் கோயிலுக்கு சென்று தீக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்று இரவு கருப்பசாமிக்கு சிறப்பு பூஜை செய்தனர்.

பின்னர் கருப்பசாமியை கண்ணிமார் கோயிலுக்கு அழைத்து சென்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து கருப்பசாமி கோயிலில் இருந்து குட்டி குடிப்பதற்காக புறப்பாடுகள் தொடங்கியது. அங்கு ஏலப்பிள்ளையார் கோயில் முன்பாக 8 பட்டி ஊர்பொதுமக்கள் சார்பாக கருப்பசாமிக்கு முதல் குட்டியை கொடுத்து நேர்த்திக்கடன் செய்தனர்.

அதனை தொடர்ந்து சாமிசெல்லும் வீதிகளில் பொதுமக்கள் நேர்த்திக்கடனுக்காக வைத்திருந்த நூற்றுக்கணக்கான குட்டிகளை கருப்பசாமிக்கு கொடுத்தனர். பின்னர் மருளாளி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.  3 வது நாள் பகவதியம்மன் கோயிலில் இருந்து பூப் பல்லாக்கில் வெள்ளபட்டி மாரியம்மன் சன்னதிக்கு வழிஅனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. மாலை மஞ்சள் நீராட்டுதலுடன் பகவதியம்மன் வீதிஉலா சென்று கரகம் கலைத்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories: