சகல தோஷங்களையும் நீக்கும் நவ கைலாய கோயில்கள்!

பொதிகை மலையில் தாமிரபரணி என்ற பொருநை நதி தோன்றி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாய்ந் செழிப்புகளை வழங்கி கடலில் கலக்கிறது. இந்த நதியோரம் பல புண்ணிய தலங்கள் உள்ளன. இதில் பல கோயில்கள் அன்றைய அரசர்களால் பெரியஅளவில் கட்டப்பட்டுள்ளன. இந்த நதிகரையில் நவக்கிரக வரிசையில் 9 கோயில்களை அமைத்து அவற்றிற்கு நவ கைலாயம் என ெபயரிட்டனர் நம் முன்னோர்கள். பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், செங்கணி (கீழத்திருவேங்கடநாதபுரம்) ஆகிய முதல் 4 கைலாய கோயில்கள் நெல்லை மாவட்ட எல்லைக்குள்ளும், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் ஆகிய 5 கைலாய கோயில்கள் தூத்துக்குடி மாவட்டத்திலும் அமைந்துள்ளன. முதல் 3 கைலாயங்கள் மேலக்கைலாயங்கள் என்றும் அடுத்த  3 கைலாயங்கள் நடுக்கைலாயங்கள் என்றும் கடைசி மூன்று கைலாயங்கள் கீழக்கைலாயங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.

பொதிகை மலையில் இருந்து தவம் செய்த அகத்திய முனிவருக்கு முதல் சீடராக உரோமச முனிவர் என்பவர் பணி விடைகளை செய்து வாழ்ந்து வந்தார். அவருக்கு சிவ பெருமானைக் கண்டு அருள் பெற்று முக்தி அடைய வேண்டுமென்று விருப்பம் ஏற்பட்டது. அவர் தவ வலிமை மிக்கவர். அவர் சிவபெருமானையே நினைத்து வழிபட்டார். சிவபெருமான் இவர் திருவுள்ளத்தைக் கண்டு முனிவரது பெருமையை வெளிக்கொண்டுவர அகத்தியர் மூலம் திருப்பாங்கு கொள்கிறார். அகத்தியர் மகரிஷியை அழைத்து, சிவபெருமானை நவகோள்களாக நினைத்து ஒவ்வொருவரும் வழிபட்டால் கிரகங்கள் ஒன்றும் செய்யாது. எனவே நவகோள்கள் வரிசையில் மக்கள் வணங்குதல் வேண்டும். நீயும் எம்பெருமானைக் கண்டு பேரின்பம் எய்தி முக்தி அடைய  வேண்டுமென்று விரும்பினாய்... தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடினால் வேண்டியது கிடைக்கும்.

இப்போதே புறப்பட்டு தாமிரபரணி ஆற்றின் ஓரமாக செல். உன்னுடன் இந்த 9 மலர்களை தண்ணீரில் அனுப்புகிறேன். இம்மலர் ஒவ்வொன்றும் எங்கு நின்றுவிடுகிறதோ அவ்விடத்தில் சிவனை வழிபடு. நீ வணங்குகின்ற சிவபெருமான் அருள்மிகு கைலாசநாதர் என்றும் அம்மை சிவகாமி என்றும் அழைக்கப்படுவர். பின்னர் சங்கு முகத்தில் நீராடினால் உன் எண்ணம் ஈடேறும் என்று அகத்தியர் கூறினார். அதன்படி உரோமச மகரிஷி தம் குருவின் வாக்குப்படியே புறப்பட முதல் மலர் பாபநாசத்தில் நிற்க அங்கு சிவபெருமானை வைத்து வழிபட்டார். பின்னர் தன் பயணத்தை தொடர்ந்தார். பிற மலர்கள் நின்ற இடங்களிலும் சிவபெருமானை வழிபட்டார். பின்னர் தாமிரபரணி கடலில் கலக்கும் இடத்தில் நீராடி முக்தி பெற்றார் என புராண வரலாறு கூறுகிறது.

நவக்கிரக தோஷம் பெற்றவர்கள் இந்த நவகைலாயத்திற்கு சென்று வழிபட்டு சிவபெருமான் அருளைப் பெற்று தோஷம் நீங்கி சென்றார்கள். நவகைலாயம் பற்றிய சான்றுகள் திருவைகுண்டம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில் “கலியாண குறடு” என்ற சிறுமண்டபத்தின் மேல் 9 இடங்களின் பெயர்கள், செய்திகளும் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. இது தவிர உரோமச முனிவர் சிலை சேரன்மகாதேவி கோயிலிலும், திருவைகுண்டம் கோயிலிலும் ஒரு தூணில் செதுக்கப்பட்டுள்ளது. நவகைலாயம் சென்று வழிபட தேவையான போக்குவரத்து வசதி உள்ளது. பிருங்க முனிவர் என்பவரும் இந்த 9 கைலாயத்திற்கும் பாதயாத்திரையாக வந்து தன்சாபம் நீங்கி இறைவனை அடைந்ததாகவும் ஒரு வரலாறு உள்ளது. சகல தோஷங்கள் நீங்கவும், வாழ்வில் மேன்மைபெறவும் நவகைலாய ஆன்மீகப்பயணம் பயனளிக்கும்.

Related Stories: