சென்னை: கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு போட்டித் தொடருக்கான சின்னம் மற்றும் சீருடையை ஆளுனர் டி.சி.கெலாட், ஒன்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் அறிமுகம் செய்தனர். கடந்த ஆண்டு நடைபெற இருந்த இப்போட்டித் தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கர்நாடகாவில் வரும் ஏப்.24ம் தேதி தொடங்கி மே 3ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்த தொடருக்கான லோகோ, அதிகாரப்பூர்வ சின்னம் ‘வீரா’வுக்கான சீருடை மற்றும் பாடல் அறிமுக விழா பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.ஆளுநர் கெலாட் லோகோ மற்றும் சின்னம் ‘வீரா’வை அறிமுக செய்ய, ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் சீருடை மற்றும் பாடலை வெளியிட்டார். இந்த பாடலை சந்தன் ஷெட்டி, நிகில் ஜோஷி இணைந்து பாடியுள்ளனர். மாநில பட்டு வளர்ப்புத் துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் நாராயண கவுடா, உயர் கல்வித் துறை அமைச்சர் அஷ்வத்நாரயண் மற்றும் அதிகாரிகள் இவ்விழாவில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய ஆளுனர் கெலாட், ‘பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான கேலோ இந்தியாவின் ஒரு அங்கம் தான் இந்த பல்கலை. தொடர். டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மற்றும் பாராலிம்பிக்சில் இந்தியா சிறப்பாக செயல்பட்டது. விளையாட்டுத் துறையில் இந்தியாவின் வலிமையை அதிகரிப்பது இந்த பல்கலை’ என்றார்.ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் கூறுகையில், ‘ஆசிய விளையாட்டு போட்டி, காமன்வெல்த் மற்றும் ஒலிம்பிக்சில் பங்கேற்கக் கூடிய திறமையான வீரர், வீராங்கனைகளை அடையாளம் காண கேலோ இந்தியா பல்கலை. விளையாட்டு போட்டி நல்ல அடித்தளமாக இருக்கும். இந்த முறை நாடு முழுவதும் இருந்து சுமார் 4,500 வீரர், வீராங்கனைகள் 20 வகையான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இவர்களில் இருந்து அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு தகுதியான சிலரை நிச்சயமாக தேர்வு செய்ய முடியும் என நம்புகிறேன்’ என்றார். …
The post கேலோ இந்தியா பல்கலை விளையாட்டு போட்டி பெங்களூருவில் நடந்த விழாவில் சின்னம், சீருடை அறிமுகம்: ஆளுநர் கெலாட், ஒன்றிய அமைச்சர் அனுராக் பங்கேற்பு appeared first on Dinakaran.
