அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

தேனி: அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயிலில் நடந்த சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். தேனி- அல்லிநகரம் அருகே சுமார் 5 கிமீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அருள்மிகு வீரப்ப அய்யனார் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை முதல்நாள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இதில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்றின் காரணமாக விழா நடத்த முடியாத நிலையில், தற்போது கொரோனா நோய் தொற்று வெகுவாக குறைந்து இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ள நிலையில் இத்திருவிழா வருகிற சித்திரை முதல் நாளாள ஏப்ரல் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.இத்தகைய சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை அல்லிநகரத்தில் உள்ள வீரப்ப அய்யனார் கோயில் வீட்டில் இருந்து வீரப்ப அய்யனார் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் புறப்பட்ட சாமி விஎம்சாவடி வழியாக வரதப்பராஜ பெருமாள் கோயில் சென்றது. பின்னர் அங்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து அங்கிருந்து விஎம்சாவடி வழியாக, கீரைக்கல் பஜார் தெரு, மேற்குத் தெருவழியாக வீரப்ப அய்யனார் மலைக்கோயிலுக்கு சென்றது. குதிரை வாகனத்தில் சென்ற சாமிக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட யானை செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமியுடன் நடந்தே மலைக்கோயில் சென்றனர். அங்கே சுமார் 16 அடி உயர தேக்குமர கம்பத்தில் பூஜிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இதில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேலான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. சித்திரை திருவிழா நடக்கும் நாளில் காவடி எடுக்கும் பக்தர்கள் கோயில் வளாகத்தில் மாலை அணிந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அல்லிநகரம் கிராமக்கமிட்டி தலைவர் கோவிந்தசாமி தலைமையில் துணை தலைவர் சிவராமன், செயலாளர் தாமோதரன், துணை செயலாளர் வீரமணி, பொருளாளர் முருகன் மற்றும் கிராம கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர். …

The post அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர் appeared first on Dinakaran.

Related Stories: