ஆண்டிபட்டி பகுதியில் நெல் அறுவடை பணி தீவிரம்-மகசூல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பகுதியில் வைகை ஆற்றங்கரையோரம் உள்ள வயல்களில் நெல் அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. மகசூல் அதிகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஆண்டிபட்டியைச் சுற்றியுள்ள குன்னூர், அம்மச்சியபுரம், டி.அணைக்கரைப்பட்டி, தர்மத்துபட்டி, மூனாண்டிப்பட்டி புதூர், புள்ளிமான் கோம்பை உள்ளிட்ட வைகை கரையோர பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடந்து வருகிறது. கடந்தாண்டு நல்ல மழை பெய்ததால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டன. இப்பயிர் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாரானது.இதனால், ஆண்டிபட்டி சுற்றுவட்டாரத்தில் இயந்திரம் மூலம் தீவிரமாக அறுவடை நடந்து வருகிறது. நெல் அறுவடை முடிந்த வயல்களில் உழவுப் பணிகளும் நடந்து வருகின்றன. ஒரே நேரத்தில் ஒருபுறம் நெல் அறுவடையும், உழவு, நடவு பணிகளும் நடைபெற்று வருகின்றன. நெல் விளைச்சல் அதிகமாக இருப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 69 அடிக்கும் மேல் உள்ளது. இதனால் இரண்டாம் போக சாகுபடிக்கு அணையில் தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டால், ஆண்டிபட்டி பகுதியில் வைகை ஆற்றங்கரையோரத்தில் இரண்டாம் போகத்திற்கு சாகுபடி நடைபெறும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்….

The post ஆண்டிபட்டி பகுதியில் நெல் அறுவடை பணி தீவிரம்-மகசூல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: