27ம் தேதி முதல் மீண்டும் சர்வதேச விமான சேவை: சென்னையில் உயரதிகாரிகள் ஆலோசனை

மீனம்பாக்கம்: இந்திய விமான போக்குவரத்து துறை, 2 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 27ம் தேதி முதல் மீண்டும் சர்வதேச விமான சேவைகளை தொடங்கும் என்று அறிவித்துள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் உயரதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கொரோனா வைரஸ் முதல், 2வது அலை முடிந்த பின்பு, உள்நாட்டு விமான சேவைகள் படிப்படியாக அனுமதிக்கப்பட்டன. இதேபோல, வெளிநாட்டு விமான சேவைகள், ‘வந்தே பாரத்’ மற்றும் சிறப்பு விமானங்கள்  இயக்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டு ஜனவரியில் வழக்கமான சர்வதேச விமான சேவைகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா தொற்றின் 3வது அலை, ஒமிக்ரான் தொற்று பரவலால் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது, வழக்கமான சூழல் திரும்பிய நிலையில், வரும் 27ம் தேதி முதல், சர்வதேச விமான சேவைகள் தொடங்கும் என்று, மத்திய விமான போக்குவரத்து துறை அறிவித்தது. இதற்கான ஆயத்த பணிகளில், விமான நிறுவனங்களும், விமான நிலையங்களும் ஈடுபட்டுள்ளன. இது தொடர்பாக, குடியுரிமை, மத்திய தொழில் பாதுகாப்பு துறை உட்பட, அனைத்து விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் சென்னை விமான நிலைய உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து, விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது: சென்னை விமான நிலையம், சர்வதேச விமான சேவையை தொடங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. தற்போது, வந்தே பாரத் மற்றும் சிறப்பு விமானங்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. 2 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கமான சர்வதேச விமான சேவை தொடங்க உள்ளதால், பயணிகளை கையாள்வது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. குடியுரிமை அனுமதி உட்பட, விரைவான சேவையை வழங்கவும், உரிய பாதுகாப்பு அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. விமான நிறுவனங்களிடமும், ஆலோசனைகள், கருத்துக்கள் கோரப்பட்டது. சர்வதேச விமான சேவையின் போது, பயணிகளுக்கு எந்த குறைபாடும் இருக்க கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர். விமான நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கூறுகையில், ‘சர்வதேச விமான நிறுவனங்கள் விமான சேவையில் ஈடுபட தயார் நிலையில் இருக்கின்றன. சென்னை உள்நாடு மற்றும் சர்வதேச முணையங்களில் இருந்து, 27 விமான நிறுவனங்கள், விமானங்களை இயக்குகின்றன. பயணிகள் முன்பதிவு செய்வது தொடர்பாக, விமான நிறுவனங்கள் தங்களது இணையதளத்தில் தகவல்கள் வெளியிட்டுள்ளன. பல்வேறு விமான நிறுவனங்கள், வரும் 27ம் தேதி முதல் வழக்கமான சேவையை தொடங்குகின்றன. ஆனால் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் மே முதல் தொடங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அந்த வெளிநாட்டு விமான நிறுவனங்கள், இதுவரையில் தங்களது இணையதளங்களில் விமானங்கள் புறப்பாடு, வருகை மற்றும் பயணிகளுக்கான டிக்கெட்கள் முன்பதிவு பற்றி எந்த தகவலையும் வெளியிடவில்லை. சீனாவில் திடீரென அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக 4வது அலை உருவாகலாம் என சில சுகாதார அமைப்புகள் கூறி வருவது காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது’ என்றனர்….

The post 27ம் தேதி முதல் மீண்டும் சர்வதேச விமான சேவை: சென்னையில் உயரதிகாரிகள் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: