மத நல்லிணக்கத்துடன் நடந்த தாளவாடி மாரியம்மன் கோவில் திருவிழா: மசூதியின் வாசலில் இருந்து கோவில் வரை தீக்குண்டம்

ஈரோடு: மத நல்லிணக்கத்துடன் நடைபெற்ற பிரசித்தி பெற்ற தாளவாடி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா. மசூதியின் வாசலில் இருந்து கோவில் வரை அமைக்கப்பட்ட குண்டத்தில் பூசாரி தீ மிதித்தார். தாளவாடி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா இன்று விமரிசையாக நடைபெற்றது. ஈரோடு மாவட்டம்  தாளவாடி நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனிமாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 15 ஆம் தேதி  சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.  இதைத்தொடர்ந்து அம்மன் கோவிலுக்கு திரும்புதல் மற்றும் மலர் ஊஞ்சல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  முதல் காலை வரை விடிய விடிய தாளவாடி நகர் பகுதியில் உள்ள மைசூர் சாலை, ஓசூர் சாலை, தலமலை சாலை மற்றும் தொட்டகாஜனூர் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.  இதை தொடர்ந்து இன்று அதிகாலை கோயிலின் முன்பு தீக்குண்டம் அமைக்கப்பட்டது. மாரியம்மன் கோயிலும் கோயிலுக்கு அருகே இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலமான மசூதியும் அமைந்துள்ள நிலையில் மசூதியின் வாயிலிருந்து  கோவில் வரை தீக்குண்டம் அமைக்கப்படுவது தனிச்சிறப்பாகும். மத நல்லிணக்கத்தோடு நடைபெறும் இந்த விழாவில் குண்டம் அமைக்கும் போது இஸ்லாமிய மக்களும் விழாவில் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து இன்று காலை அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து பூசாரி சிவண்ணா தலையில் மாரியம்மன் சிலையுடன் கூடிய கரகத்தை சுமந்தபடி தீ குண்டத்தில் தீ மிதித்தார். அப்போது கோயிலைச் சுற்றி கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆரவார ஒலி எழுப்பினர். இதைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்த விழாவில் தாளவாடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் கர்நாடக மாநில பக்தர்களும் கலந்து கொண்டனர்.  தாளவாடி மலைப்பகுதியில் கோயில்களில் நடைபெறும் குண்டம் திருவிழாவில் பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்குவது வழக்கம். பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதி இல்லை. இதன்காரணமாக தாளவாடியில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் இன்று பூசாரி சிவண்ணா  மட்டுமே தீ மிதித்தார். திருவிழாவை முன்னிட்டு  புகழ்பெற்ற வீரபத்திரா நடனம், கரகாட்டம், பூஜா நடனம், பொம்மலாட்டம் உள்ளிட்ட பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகளும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. குண்டம் திருவிழா களைகட்டியதால் தாளவாடி நகர்ப்பகுதி விழாக்கோலம் பூண்டது….

The post மத நல்லிணக்கத்துடன் நடந்த தாளவாடி மாரியம்மன் கோவில் திருவிழா: மசூதியின் வாசலில் இருந்து கோவில் வரை தீக்குண்டம் appeared first on Dinakaran.

Related Stories: