காஞ்சி மாநகராட்சியில் குடிநீர் பிரச்னைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: மேயர் மகாலட்சுமி யுவராஜ் பேட்டி

காஞ்சிபுரம்: காஞ்சி மாநகராட்சியில், குடிநீர் பிரச்னைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட மகாலட்சுமி கூறினார்.காஞ்சிபுரம் மாநகராட்சியில் நேற்று நடந்த மேயர் தேர்தலில், திமுக வேட்பாளர் மாகலட்சுமி யுவராஜ் மேயராகவும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குமரகுருநாதன் துணை மேயராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.அவர்கள், தங்களது ஆதரவாளர்களுடன் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி, அண்ணா, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், மேயர் மகாலட்சுமி யுவராஜ் செய்தியாளரிடம் கூறியதாவது.மேயராக என்னை தேர்வு செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, எம்பி செல்வம், எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், என்னை மேயராக தேர்ந்தெடுத்த மாமன்ற உறுப்பினர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் முதல் பெண் மேயராக தேர்வு பெற்று பெருமகிழ்ச்சி அடைகிறேன். காஞ்சிபுரம் மாநகராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு முதலில் முன்னுரிமை அளித்து, பிரச்னையை தீர்த்து வைப்பேன். பாதாள சாக்கடை திட்டத்தை விரிவுபடுத்தி, அனைவருக்கும் முழுமையாக கிடைக்க ஏற்பாடு செய்வேன்.குப்பையில்லா நகரமாக மாற்ற, குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி முழுவதும் சுகாதார பணிகளை சிறப்பாக செய்து சுகாதார காஞ்சியாக உருவாக்குவோம். துணை மேயர், மாமன்ற உறுப்பினர்களுடன் சிறப்பாக செயல்படுத்துவேன் என்றார். பேட்டியின்போது, துணைமேயர் குமரகுரு நாதன் இருந்தார்….

The post காஞ்சி மாநகராட்சியில் குடிநீர் பிரச்னைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: மேயர் மகாலட்சுமி யுவராஜ் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: