குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பரவலாக மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலின் தென்மேற்கில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வட தமிழ்நாட்டின் கரையை நோக்கி 13 கி.மீ. வேகத்தில் நகரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. நாளை கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும். உள்மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மார்ச் 6ல் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்காலில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். மார்ச் 7ல் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும். மார்ச் 8ல் தேனி, திண்டுக்கல், தென்காசியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியிலும் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பிருக்கிறது. மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகையில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. வங்கக்கடலில் தென்மேற்கில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நீடிப்பதால் சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருக்கிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களிலும் ஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுச்சேரியிலும் ஓரிரு மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை மையம் கூறியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், கல்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. …

The post குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பரவலாக மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: