திருவில்லிபுத்தூர் அருகே 3 ஆயிரம் ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

திருவில்லிபுத்தூர் : திருவில்லிபுத்தூர் அருகே அரசியார்பட்டியில் 3 ஆயிரம் ஆண்டு பழமையான கல்திட்டைகள், முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.திருவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி-சத்திரப்பட்டி சாலையின் மேற்குப்பகுதியில் அரசியார்பட்டியில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு, நூர்சாகிபுரம், சிவகுமார், துள்ளுக்குட்டி பிரகதீஸ்வர், பொன்ரமணன் ஆகியோர் கள ஆய்வு செய்தனர். அப்போது புதுக்குளம் கண்மாய் தென்கழுங்கு அருகில் கல்திட்டை, முதுமக்கள்தாழிகள், குத்துக்கல் ஆகியவற்றை கண்டுபிடித்தனர்.இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு கூறியதாவது: அரசியார்பட்டியில் செம்மண் நிலத்தின் மேற்பரப்பில் அருகருகே புதைந்த நிலையில் சிறிய அளவிலான 3 முதுமக்கள்தாழிகள் கிடைத்துள்ளன. தாழிகள் புதைக்கப்பட்ட தரையின் மேற்பகுதியில், பலகைக்கற்களால் சதுரம் அல்லது செவ்வகவடிவில் நான்கு புறங்களிலும் சுவர்போல் அமைத்து அதன்மேல் கற்பலகையை கொண்டு மூடி உருவாக்கப்படுவது கல்திட்டை ஆகும். இதன்மூலம் இங்கு கல்திட்டைகள் இருந்ததை அறிய முடிகிறது. மேலும் ஒரு குத்துக்கல் ஒன்றும் கீழே சாய்ந்த நிலையில் உள்ளது. இப்பகுதி சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு மேற்பரப்பிலும், பாறைகளிலும் இரும்பு தாதுக்கள் காணப்படுகின்றன.பெருங்கற்காலத்தில் இரும்பு கண்டுபிடிக்கப்பட்டு அதனை பயன்படுத்தி வந்துள்ளதால் இதை இரும்புக்காலம் எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு கண்டுபிடிக்கப்பட்டவைகள் சுமார் 3 ஆயிரம் ஆண்டு பழமையானவையாகும். விருதுநகர் மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய சமவெளிப்பகுதிகளில் பெருங்கற்கால நினைவு சின்னங்கள் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்….

The post திருவில்லிபுத்தூர் அருகே 3 ஆயிரம் ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Related Stories: