மிஷன் இம்பாசிபிள்: டெட் ரெகானிங் பாகம் 1 – திரை விமர்சனம்

டாம்குரூஸின் டிசி புரடெக்ஷன்ஸ் உடன் ஸ்கைடான்ஸ் இணைந்து தயாரிக்க கிறிஸ்டோபர் மெக்வைர் இயக்கத்தில் டாம் குரூஸ், ஹெய்லே ஆத்வெல், விங் ரேம்ஸ், சைமன் பெக்ஸ், ரெபேகா ஃபெர்க்யூசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ஆக்ஷன் அதிரடி திரைப்படம். ‘மிஷன் இம்பாஸிபிள்: ஃபால் அவுட்’ 6ம் பாகத்தின் தொடர்ச்சியாக இந்த 7ம் பாகம் இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கிறது. தற்போது டெட் ரெகானிங் முதல் பாகம் வெளியாகி வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.

‘வழக்கம் போலவே உலகை அச்சுறுத்தும் பிரச்னை, அதைக் காப்பாற்றும் ஆக்ஷன் ஹீரோ கதை. ஆனால் இந்த ‘மிஷன் இம்பாசிபிள்’ படத்தில் இன்னும் நவீனத்துவமாக சாட் பிடி, ஏஐ வில்லன், என அப்டேட் வேறு ரகம். இந்த ஏஐ வில்லனை நம் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டால் நாம்தான் உலகின் பலசாலி எனத் தேடும் இன்னொரு கும்பல். ஒரு சாவி, அதனை இரண்டாகப் பிரித்து இருவேறு திசையில் வைத்திருக்கிறார்கள். அதனை தேடி அலையும் ஹீரோவின் குழு மற்றும் வில்லன்கள் குழு.

அந்த சாவி எதனை திறக்கும், திறந்தால் என்ன ஆகும் என யாருக்கும் புரியாத புதிர். போலவே இது ஒரு நீர்மூழ்கி கப்பலுக்கான சாவி என்கிறது படத்தின் ஆரம்பத்தில் வரும் காட்சிகள். ஒருவேளை அமெரிக்க –ரஷ்யா போர் நினைத்தால் இது வேறு என்கிறது கதையின் ஓட்டம். ஆனாலும் ஏன் இந்த சாவிக்கு இவ்வளவு பேர் அலைகிறார்கள். ஹீரோவிற்கு என்ன வேலை, சாவியைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பது மீதி கதை.

டாம் குரூஸ்க்கு வயது 61 என அவரே சொன்னாலும் நம்ப முடியாத அளவிற்கு அவரிடம் அப்படி ஒரு வேகம், துடிப்பு, மின்னல் எஃபெக்ட். குறிப்பாக விமான நிலையங்களில் ஓடும் போதெல்லாம், டாம் குரூஸ்தான் ஓடுகிறாரா, இல்லை டூப் ஏதும் பயன்படுத்தியிருக்கிறார்களா என்னும் ஐயம் உண்டாகிறது. அந்த அளவிற்கு அவர் வயதுக்கு மீறிய ஸ்டைல், ஆக்ஷன், ஸ்டன்ட் என மாஸ் காட்டுகிறார். படத்தின் வில்லனாக கேப்ரியல் கேரக்டரில் வரும் சைமன் பெக், ஹீரோயினாக ஹெய்லி ஆத்வெல், ரெபேகா ஃபெர்க்யூசன் இப்படி படம் முழுக்க வரும் அத்தனை பேருமே ஆக்ஷன் அதிரடி காட்டுகிறார்கள்.

டாம் குரூஸின் அண்டர் கிரவுண்ட் உதவியாளர்களாக வரும் விங் ரேம்ஸ், மற்றும் ஈசாய் மோரேல்ஸ் காமெடிக் காட்சிகளுக்கும் நன்றாகவே பயன்பட்டிருக்கிறார்கள். பல இடங்களில் அவர்கள் தடுமாறுவதும், அவர்களை மீறி ஏஐ வில்லன் செயல்பட்டு, டாம்குரூஸை குழப்பிவிடும் காட்சிகளுமாக படம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு டெக்னாலஜி டிடெய்ல்களில் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது.

ஃபிரேஸர் டக்ரெட் சினிமோட்டோகிராபியும், லோர்ன் போல்ஃபே இசையும் படத்தின் பரபர மொமெண்ட்களுக்கு இன்னும் சிறப்பு சேர்த்திருக்கின்றன. படத்தின் ஒவ்வொரு ஆக்ஷன் காட்சிகளுமே கிட்டத்தட்ட கிளைமாக்ஸில் கொடுக்கக் கூடிய அதிர்வை படம் நெடுகவே கொடுக்கின்றன. இது ஒரு ப்ரீ-கிளைமாக்ஸ்தான் என்றாலும் அதையும் கூட கிட்டத்தட்ட அடுத்த பாகத்திற்கான துவக்கமாக உருவாக்கி படத்திற்கு ஹைலைட்டாக மாற்றியிருக்கிறார்கள்.அந்த ரோம் நகரத்து சேஸிங் காட்சிகள் மட்டும் சற்றே நீளம் மேலும் ‘ஃபாஸ்ட் & ஃபியூரியஸ்’ சாயல் சட்டென நமக்கு வந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை.
படம் வெளியீட்டிற்கு முன்பே வெளியான புரமோஷன் இரயில் காட்சிகள், கதையின் ஓட்டத்தில் இன்னும் பிரம்மாண்டமாகவே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

மொத்தத்தில் சென்ற வருடம் ‘டாப் கன் : மாவரிக்’, இந்த வருடம் ‘மிஷன் இம்பாஸிபிள்:7’, அடுத்த வருடம் ‘மிஷன் இம்பாஸிபிள்: 8’ என இம்பாஸிபிள் என நாம் நினைக்கும் அத்தனையையும் அசால்ட்டாக செய்கிறார் டாம் குரூஸ். ’அவர் நடிப்பிற்கு நான் அடிமை’ என்போர் இந்தப் படத்தை ஒன்றுக்கு மேற்பட்ட முறை பார்க்கலாம், ஆக்ஷன் விரும்பிகள் ஒரு முறை கூட தவற விடாமல் பார்க்க வேண்டிய படம் ‘மிஷன் இம்பாஸிபிள்:7’.

The post மிஷன் இம்பாசிபிள்: டெட் ரெகானிங் பாகம் 1 – திரை விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: