சென்னை: தமிழகத்தில் 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் மெத்தனத்தால், சென்னை உட்பட 4 மாவட்டங்களில் 767 நீர் நிலைகள், 145 கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. அதில் வீடுகள், வணிக வளாகங்கள் பிரமாண்டமாக எழும்பி உள்ளது. தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் சிறுபாசன கண்மாய்கள் 21,609ம், ஊரணிகள் 48,758 என மொத்தம் 70,367 உள்ளது. இதை தவிர்த்து நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 14,138 ஏரிகள் உள்ளது. இந்த நிலையில், பெரும்பாலான ஏரிகள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளது. இதில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் மாநிலம் முழுவதும் 3,482 ஏரிகள் மட்டுமே பாதுகாப்பான நிலையில் உள்ளது. மீதமுள்ள 10,656 ஏரிகள் ஆக்கிரமிப்புகளில் இருப்பதாக நீர்வளத்துறையே தெரிவித்துள்ளது. குறிப்பாக, போரூர், வேளச்சேரி, புழுதிவாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கம், வேங்கைவாசல், செம்பரம்பாக்கம், புழல், ரெட்டேரி உட்பட பெரும்பாலான ஏரிகளின் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது. தற்போது, ஆக்கிரமிப்பு வீடுகளால் ஏரிகள் குட்டையாக மாறி வருகின்றன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென்கிற கோரிக்கை எழுந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசின் மெத்தனத்தால் குளங்கள், ஏரிகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. இதனால், மழை காலங்களில் நீரை சேமித்து வைக்க முடியாத நிலையில், தற்போது, மழை நீர் குடியிருப்புகளுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் மாநிலம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதன்பேரில், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை கணக்கெடுக்கும் பணியில் நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, சென்னை மாவட்டத்தில் மட்டும் குளங்கள், ஆறுகள், கால்வாய், வடிகால்களில் 37ல் 32ம், காஞ்சிபுரத்தில் 549ல் 181ம், திருவள்ளூர் மாவட்டத்தில் 654ல் 388ம், செங்கல்பட்டு மாவட்டத்தில் 893ல் 330ம் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதில், சென்னை மாவட்டத்தில் 45,226 குடியிருப்புகள், காஞ்சிபுரத்தில் 7193 குடியிருப்புகள், திருவள்ளூர் மாவட்டத்தில் 15,330 குடியிருப்புகள், செங்கல்பட்டில் 32334 குடியிருப்புகள் உள்ளது.சென்னையில் 28 ஏரிகளில் 23 ஏரிகள் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதில், 7436 தனி வீடுகள், 3498 குடிசை வீடுகள், 8 அரசு கட்டிடங்கள் மற்றும் 56 இதர கட்டிடங்கள் உள்ளது. அதே போன்று, 3 ஆறுகளில் 3ம் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. 4257 தனி வீடுகள், 3169 குடிசை வீடுகள், 107 வணிக கட்டிடங்கள், 3 அரசு கட்டிடங்கள் மற்றும் 0.51 இதர கட்டிடங்கள் உள்ளது. 6 கால்வாய் உள்ள நிலையில் 6 கால்வாய்களும் ஆக்கிரமிப்பில் உள்ளது. 15,665 தனி வீடுகள், 10,550 குடிசை வீடுகள், 480 வணிக கட்டிடங்கள், 4 அரசு கட்டிடங்களும் ஆக்கிரமிப்பில் உள்ளது.காஞ்சிபுரத்தில் 381 குளங்களில் 149 குளங்களும், நீர்நிலைகளில் ஒன்றும், 5 ஆறுகளில் 4 ஆறுகளிலும், 162 கால்வாய்களில் 27 கால்வாய்களும் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதில், 5061 தனி வீடுகள், 1566 குடிசை வீடுகள், 155 வணிக கட்டிடங்கள், 22 அரசு கட்டிடங்கள், 102 இதர கட்டிடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதே போன்று திருவள்ளூர் மாவட்டத்தில் 578 குளங்களில் 320 குளங்களும், 4 நீர்நிலைகளில் 3 நீர்நிலைகளும், 6 ஆறுகளில் 6ம், 61 கால்வாய்களில் 54 கால்வாய்களும் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதில், 7868 தனி வீடுகள், 7462 குடிசை வீடுகள், 155 வணிக கட்டிடங்கள், 22 அரசு கட்டிடங்கள், 102 இதர கட்டிடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 564 குளங்களில் 271ம், 4 ஆறுகளில் 1ம், 325 கால்வாய்களில் 58 கால்வாய்களிலும் உள்ளது.இதில், 23109 தனி வீடுகள், 3382 குடிசை வீடுகள், 802 வணிக கட்டிடங்கள், 51 அரசு கட்டிடங்கள் மற்றும் 113 இதர கட்டிடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த ஆக்கிரமிப்பில் உள்ள கட்டிடங்கள் தொடர்பான விவரங்களை அறிக்கையாக நீர்வளத்துறை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தலைமை செயலாளர் இறையன்பு தலைமையிலான குழு முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்….
The post 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் மெத்தனத்தால் சென்னை, திருவள்ளூர் உட்பட 4 மாவட்டங்களில் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள 767 நீர்நிலைகள்: 145 கால்வாய்களிலும் கட்டிடம்; நீர்வளத்துறை உயர்அதிகாரி தகவல் appeared first on Dinakaran.