மாசிமக திருவிழாவையொட்டி விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சி அளிக்கும் நிகழ்ச்சி: ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சுமார் 2ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்திப்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோயில் உள்ளது. பல கோயில்களில் கிடைக்கும் வரங்களை இந்த ஒரே கோயிலில் பெறலாம் என்பது ஐதீகம். இந்த கோயிலில் மாதந்தோறும் வரக்கூடிய பவுர்ணமி, அஷ்டமி, சித்ராபவுர்ணமி, சிவராத்திரி, மாசிமக பெருவிழா, கார்த்திகை திருவிழா, அன்னாபிஷேகம், புத்தாண்டு, பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். வருடந்தோறும் மாசி மாதம் நடைபெறும் விழாக்களில் மாசிமக பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். விருத்தாசலம் பகுதியை சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இத்திருவிழாவைக்காண கோயிலுக்கு வருகின்றனர்.அவ்வாறு இந்த வருடம் 12நாட்கள் நடைபெறும் மாசிமகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பஞ்ச மூர்த்திகள் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வருகிறது. விருத்தகீரிஸ்வரர், விருத்தாம்பிகையுடன் சன்னதியில் இருந்து வெளியே வரும் நிகழ்ச்சி 6ம் திருவிழாவான நேற்று நடைபெற்றது. விருத்தகிரீஸ்வரர் நூற்றுக்கால் மண்டபத்தில் உள்ள அபிஷேக மண்டபத்தில் இருந்தபடி, இக்கோயிலை கட்டிய விபசித்து முனிவருக்கு காட்சி அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் அபிஷேக மண்டபத்தில் எழுந்தருளிய விருத்தகிரீஸ்வரர், விருத்தாம்பிகை பாலம்பிகைக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்று, நேர் திசையில் வீற்றிருந்த விபசித்து முனிவருக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து விருத்தகிரீஸ்வரர் பல்லக்கில் எழுந்தருளியபடி கோயில் சன்னதியின் உள்பிரகாரத்தை சுற்றி வீதிஉலா நடைபெற்றது. கோயிலுக்கு வெளியே உள்ள மண்டபத்திற்கு வெளியே வந்து நந்தி வாகனத்தில் விருத்தகிரீஸ்வரர் விருத்தாம்பிகையுடனும், அன்னவாகனத்தில் பாலம்பிகை, விநாயகர், வள்ளிதெய்வானையுடன் முருகனும், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர், விபசித்து முனிவர் ஆகியோர் வாகனங்களில் எழுந்தருளி கிழக்கு கோட்டை வீதியில் நின்றபடி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.அப்போது அங்கிருந்த பக்தர்கள் அனைவரும் ஓம் நமசிவாய என்று பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று நகரின் பல்வேறு பகுதிகளுக்கு வீதியுலா வந்து, இன்று (14ம்தேதி) மதியம் கோயிலை வந்தடைகிறது. விழாவில் 7வது திருவிழாவான இன்று மாலை பிச்சாண்டவர் சாமி புறப்பாடும், இரவில் பஞ்சமூர்த்திகளின் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதால் ஏஎஸ்பி அங்கிட் ஜெயின், இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் தலைமையிலான சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்….

The post மாசிமக திருவிழாவையொட்டி விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரர் காட்சி அளிக்கும் நிகழ்ச்சி: ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: