×

ஆதிபுருஷ் – திரை விமர்சனம்

இதிகாச கதையான ராமாயணத்தில், ராமன் சீதையை மீட்ட ஒரு பகுதியை அடிப்படையாக வைத்து, மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள படம் இது. ராமர் (பிரபாஸ்) தனது மனைவி சீதை (கிரித்தி சனோன்), தம்பி லட்சுமணன் (சன்னி சிங்) ஆகியோருடன், தனது தந்தையின் வாக்குறுதியைக் காப்பாற்ற 14 ஆண்டுகள் வனவாசம் செல்கிறார். வனவாசத்தின்போது ராமர், இலங்கை வேந்தன் ராவணனின் (சயீஃப் அலிகான்) தங்கை சூர்ப்பனகையின் காதலை ஏற்க மறுத்து அவமானப்படுத்தி அனுப்புகிறார். இதனால் ராமரைப் பழிவாங்க முனிவராக மாறுவேடத்தில் வந்து, சீதையை கடத்திக்கொண்டு செல்கிறார் ராவணன். சுக்ரீவனின் வானரப்படை மற்றும் அனுமனின் (தேவ்தத்தா நாகே) உதவியுடன் இலங்கைக்குப் படை நடத்திச்செல்லும் ராமர், சீதையை எப்படி மீட்டார் என்பது படத்தின் கதை. பட்டிதொட்டி முழுவதும் அறிந்த ஒரு கதையை நவீன தொழில்நுட்பத்தில், காட்சி அனுபவத்துடன் கொடுக்க முயற்சி செய்துள்ளார் இயக்குனர் ஓம் ராவத்.

ஆனால், கிராபிக்ஸ் காட்சிகள் குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் கொரியன் படங்கள் போலவும், டி.வி தொடர்கள் போலவும் அமைந்து இயக்குனரின் முயற்சியைப் பொய்யாக்கி இருக்கிறது. காலங்காலமாக ராமாயணத்தை நாடகமாகவும், தெருக்கூத்தாகவும், திரைப்படமாகவும் பார்த்த மக்களுக்கு ஹாலிவுட் ஸ்டைலில் புதிய கோணத்தில் காட்ட முயற்சித்திருப்பது தெரிகிறது. ஆனால், ராமாயணத்தை கண்கவர் வண்ணத்தில் பார்த்த மக்களுக்கு டார்க் புளூ கலர் டோனில் பார்ப்பதில் சிரமம் இருக்கிறது. வேன்ஹெல்சிங் போன்ற டார்க் ேடான் படங்கள், பிளானட் ஆப் தி ஏப்ஸ், கொரில்லா படங்களின் சாயல் படத்தில் நிறையவே இருக்கிறது.

படத்தின் அறிமுகக்காட்சியில் வரும் சண்டை, சுக்ரீவன் மற்றும் வாலி இடையிலான சண்டை, ராவணன் ஒரு ராட்சத வவ்வாலில் அமர்ந்து வரும் காட்சி, ராமர் பாலம் உருவாக்கும் காட்சி, சஞ்சீவி மலையை அனுமன் தூக்கிக்கொண்டு வரும் காட்சி, 50 வருடங்களுக்கு முந்தைய படங்களில் எப்படி காட்டப்பட்டதோ அப்படியேதான் இருக்கிறது. அடுத்தது கேரக்டர் உருவாக்கம். ராமர் சாந்தமே உருவானவர், கோபத்திலும் சிரிப்பவர். ஆனால், பிரபாஸ் முறுக்கிய மீசையுடன் எப்போதும் சீரியசாகவே இருக்கிறார். அவரது முரட்டுத்தோற்றம் கேரக்டருக்குப் பொருந்தவில்லை. எல்லாக்காட்சியிலும் ஒரேமாதிரி முகபாவத்தை வெளிப்படுத்தியுள்ளார். ராவணன் சயீஃப் அலிகான் படம் முழுக்க ரோபோ போல் நடக்கிறார். கரகரவென்ற குரலில் பேசுகிறார். கிரித்தி சனோன் சோகம் ததும்பும் சீதையை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். கேரக்டருக்கேற்ற தோற்றமும், சாந்தமும் அவருக்கு நன்கு கைகொடுத்துள்ளது.

சஞ்சித் பல்ஹாரா மற்றும் அங்கித் பல்ஹாராவின் பின்னணி இசை படத்தை ஓரளவுக்குதான் உதவியிருக்கிறது. அஜய் அதுல், சாசெட்பரம்பராவின் இசையில் ‘ராம சீதா ராம்’ பாடலும், ‘ஞாழல் மலரே’ பாடலும் மனதை வருடுகிறது. ராமாயண கதை மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. அதற்கு அவர்கள் ஒரு உருவம் கொடுத்து வைத்துள்ளனர். ஆனால், படத்தில் வரும் கேரக்டர்கள் கிரேக்க மன்னர்களின் ஆடைகளை அணிந்துள்ளனர். அவர்களின் அரண்மனை கொடூரமான காட்டேரிகளின் அரண்மனை போல் காட்டப்பட்டு, கதை முழுக்க அந்நியப்பட்டு நிற்கிறது. ராமாயணம் கதையை படமாக்கும் முன், ஒருமுறை ராமாயணம் டிவி சீரியலை பார்த்துவிட்டு, படமாக்கி இருக்கலாம்.

The post ஆதிபுருஷ் – திரை விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Rama ,Sita ,Ram ,Prabhas ,Kriti Sanon ,Lakshmanan ,Sunny Singh ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ராம நவமி நாளில் அயோத்தி ராமரின்...