திருமழிசை குளிர்ந்த நாயகி ஸமேத ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த திருமழிசையில் அமைந்துள்ள ஸ்ரீசீதளாம்பிகா ஸமேத மனோனு கூலேஸ்வரர் எனும் குளிர்ந்த நாயகி ஸமேத ஸ்ரீ ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில், அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கரிகால பெருவளவன் சிவதரிசனத்தின் பொருட்டு யானையின் மீதமர்ந்து திருமழிசை என்னும் புவிசாரம் நிறைந்த மஹீசாரபுரம் சேஷரத்தில் வருங்கால் கரிகால பெருவளனை ஆட்கொள்ள வேண்டி யானையடி சிக்கிய ஊனாங் கொடியின் கழ் அரசனது உடைவாளால் வெட்டப்பட்டுத் தான்தோன்றியாய் வெளிப்பட்டவரும், தருமசேத்திரமான பாரதத்தின் கண் 64 சுயம்புலிங்க மூர்த்தங்களில் ஒன்றாகிய ஸ்ரீ குளிர்ந்தநாயகி என்ற சீதளாம்பிகையை இடப்பகம் கொண்ட ஒத்தாண்டேஸ்வரர் எனும் ஸ்ரீ மனோனுகூலேஸ்வரப் பெருமாள் அருளும் மூலாலயம் மற்றும் சுற்றுக் கோயில் விமானங்கள் வண்ணங்கள் பூசப்பட்டு மேலும் பல்வேறு திருப்பணிகள் நல்ல முறையில் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவையொட்டி  கடந்த ஜனவரி 27 ஆம் தேதி மங்கள இசை, கோ பூஜை, மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கின. இதைத் தொடர்ந்து 28 ஆம் தேதி குரு வந்தனமும், தீபாராதனையும் நடைபெற்றது. மேலும் 29 ஆம் தேதி மங்கள இசையுடன் தொடங்கி சித்தி வினாயக பூஜையும், 30 ஆம் தேதி அஷ்டமூர்த்தி ஹோமமும், 31 ஆம் தேதி குமார கணபதி பூஜையும் நடைபெற்றன. மகா கும்பாபிஷேக விழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றன. இந்நிலையில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் கால பூஜை மாலை தொடங்கியது.  இதனைத் தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளும் 11 கால பூஜைகள் நடைபெற்றது. மகா கும்பாபிஷேக நாளான இன்று 7 ஆம் தேதி, அதிகாலை 5 மணிக்கு, 12 ஆம் கால பூஜைகள் துவங்கி, அங்குரார்ப்பணமும், சிவசூர்ய பூஜையும், இதனையடுத்து காலை 7:20 மணிக்கு மஹா பூர்ணாஹூதியும், கலசங்கள் புறப்பாடும்,  மூலலிங்க ஜீவன்யாசமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, காலை 9:30 மணியளவில், ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், பிறகு 10:20 மணியளவில் பரிவாரங்கள் மற்றும் மூல லிங்க மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகமும், மகா அபிஷேகமும் நடைபெற்றன. இந்த கும்பாபிஷேக வைபவத்தை சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் சமேத ஸ்ரீ கமடேஸ்வரர் திருக்கோயில் சிவஸ்ரீ டாக்டர் டி.எஸ்.சண்முக சிவாச்சாரியார் சர்வ சாதகம் ஏற்று நடத்தி வைத்தார். இதனைத் தொடர்ந்து இன்று மாலை 7 மணிக்கு ஸ்ரீ சீதளாம்பிகா சமேத மனோனுகூலேஸ்வரர் திருக்கல்யாண வைபவமும், நாளை 8 ஆம் தேதி முதல் மண்டலாபிஷேகமும் நடைபெற உள்ளது என கோயில் அறக்கட்டளை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இந்த மகா கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள் ட்டீ.துரைராஜ் செங்குந்தர், ட்டீ.டி.ராமமூர்த்தி செங்குந்தர், எஸ்.சிவானந்தம் செங்குந்தர், டி.பழனிச்சாமி செங்குந்தர், ட்டீ.மோகனன் செங்குந்தர் மற்றும் செங்குந்தர் மகாசபை உத்தரவுப்படி திருக்குட முழக்கு நன்னீராட்டு திருவிழாக்குழு தலைவர்கள் ட்டீ.எஸ்.சண்முகம் செங்குந்தர், ட்டீ.டி.கதிர்வேலு செங்குந்தர், ட்டீ.எஸ்.உமாசங்கர் செங்குந்தர் மற்றும் உறுப்பினர்கள் விழாக்குழுவினர் செய்திருந்தனர். இந்த கும்பாபிஷேக விழாவில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, ஒன்றியக்குழு தலைவர் பூவை எம்.ஜெயக்குமார் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவ டி.தேசிங்கு, திமுக நகர செயலாளர் தி.வே.முனுசாமி, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ஜெ.மகாதேவன், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் உ.வடிவேல், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பரமேஸ்வரி கந்தன் மற்றும் அரசு அலுவலர்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்….

The post திருமழிசை குளிர்ந்த நாயகி ஸமேத ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம் appeared first on Dinakaran.

Related Stories: