லண்டன்: இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்டின் 2வது இன்னிங்சில், இங்கிலாந்து அணி அசத்தலாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டதால், வெற்றியின் விளிம்பில் உள்ளது. இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5 டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், கடைசி டெஸ்ட் கடந்த ஜூலை 31ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்கியது. முதல் இன்னிங்சில் இந்தியா 224, இங்கிலாந்து 247 ரன்கள் எடுத்தன. பின் 2வது இன்னிங்சை ஆடிய இந்தியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் அசாத்திய அரை சதங்களால் 396 ரன்களை குவித்தது. அதன் பின், 374 ரன் இலக்குடன் இங்கிலாந்து 2வது இன்னிங்சை துவங்கியது. 3வது நாளான நேற்று முன்தினம் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து ஒரு விக்கெட் இழந்து 50 ரன் எடுத்திருந்தது. இந்நிலையில், நேற்று 4ம் நாள் ஆட்டம் தொடர்ந்தது.
சிறிது நேரத்தில் பென் டக்கெட் (54 ரன்), கேப்டன் ஒல்லி போப் (27 ரன்) ஆட்டமிழந்தனர். அதன் பின், ஜோ ரூட், ஹேரி புரூக் இணை சேர்ந்து இந்திய பந்து வீச்சாளர்களின் பந்துகளை பதம் பார்த்தனர். இருவரின் அட்டகாசமான ஆட்டத்தால், 4வது விக்கெட்டுக்கு 195 ரன்கள் பங்களிப்பு கிடைத்தது. மிரட்டலாய் ஆடிய ஹேரி புரூக் 111 ரன் குவித்து ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் நடப்பு தொடரின் 3வது சதத்தை நிறைவு செய்த ஜோ ரூட் 105 ரன்னில் அவுட்டானார். 73 ஓவர் முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 337 ரன் எடுத்திருந்தது. ஜேமி ஸ்மித் 1, ஜேமி ஓவர்டன் 0 ரன்னுடன் களத்தில் இருந்தனர். வெற்றிக்கு இன்னும் 39 ரன்களே தேவைப்பட்டதால், இங்கிலாந்து வெற்றி பெறும் சூழல் காணப்பட்டது. இன்னும் ஒரு நாள் ஆட்டம் முழுமையாக உள்ளதால், போட்டி டிரா ஆவதற்கான வாய்ப்பு குறைவு என்பதால், இங்கிலாந்து தொடரை கைப்பற்றும் நிலை இருந்தது.
The post இந்தியாவுடன் 5வது டெஸ்ட்; வெற்றியின் விளிம்பில் இங்கிலாந்து: ேஹரி புரூக் மிரட்டல் சதம் appeared first on Dinakaran.
