×

மாணவிகளிடம் சில்மிஷம் கைதான ஆசிரியர் சஸ்பெண்ட்: 4 ஆசிரியைகள் மீதும் நடவடிக்கை

சேலம்: மாணவிகளிடம் சில்மிஷம் செய்து கைதான அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், சம்பவத்தை மறைத்த, 4 ஆசிரியைகள் மீதும் நடவடிக்கை பாய்கிறது. சேலம் மாவட்டம் இடைப்பாடியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தமிழ் ஆசிரியர் செந்தில்குமரவேல் (58), மாணவிகளிடம் பாலியல் ரீதியில் சில்மிஷம் செய்து வந்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் தமிழ்நாடு முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பிய புகாரின்பேரில், பள்ளிக்கல்வித்துறை, காவல்துறை, குழந்தைகள் நலக்குழும அதிகாரிகள் நேரடியாக பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், மாணவிகள் அளித்த புகார் உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, சங்ககிரி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து, ஆசிரியர் செந்தில்குமரவேலை கைது செய்து, ேசலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், மாணவிகளின் புகார் மீது உரிய நடவடிக்கையை எடுக்காமல் இருந்த தலைமை ஆசிரியை சீதா (54), உதவி தலைமை ஆசிரியைகள் ஜெயலட்சுமி (41), மல்லிகா (55), உடற்கல்வி ஆசிரியை விஜி (46) ஆகியோர் மீது பாலியல் சில்மிஷ குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக, போக்சோ வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், ஆசிரியர் செந்தில்குமரவேலை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். அத்துடன், சம்பவத்தை மறைத்த 4 ஆசிரியைகள் மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், `தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் செந்தில்குமரவேல், ஓராண்டிற்கும் மேலாக மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து ஏற்கனவே மாணவிகள் அளித்த புகாரின் பேரில், பள்ளியின் தலைமை ஆசிரியை சீதா எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், பள்ளியின் புகார் பெட்டியில் போட்ட கடிதத்தை உடற்கல்வி ஆசிரியை விஜி கிழித்து போட்டுள்ளார்.

இந்த விவகாரம் உதவி தலைமை ஆசிரியைகளுக்கும் தெரிந்துள்ளது. இதில் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியரும், அதனை மறைத்த ஆசிரியைகளும் உறவினர்கள் என கூறப்படுகிறது. இதனால் திட்டமிட்டே மாணவிகளின் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர். இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியை, உதவி தலைமை ஆசிரியைகள் மற்றும் உடற்கல்வி ஆசிரியை மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது’ என்றனர்.

The post மாணவிகளிடம் சில்மிஷம் கைதான ஆசிரியர் சஸ்பெண்ட்: 4 ஆசிரியைகள் மீதும் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Salem ,Idappadi, Salem district ,Senthilkumaravel… ,
× RELATED செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை...