ஆவடி, ஆக. 3: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், ”நலம் காக்கும் ஸ்டாலின்” என்னும் முழு உடல் பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்பட்டு நேற்று முதல் நடைமுறையில் உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம் ஊரக வட்டாரங்களில் 14, வட்டாரங்களிலும் 42 மற்றும் ஆவடி மாநகராட்சியில் 3 முகாம்கள் நடைபெற உள்ளது.
அதன்படி ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஆவடி செக்போஸ்ட் இம்மாகுலேட் இருதய மேரி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நேற்று அமைச்சர் சா.மு.நாசர் முன்னிலையில் \”நலம் காக்கும் ஸ்டாலின்\” சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இதில் அனைவருக்கும் ரத்த பரிசோதனை, இ.சி.ஜி மற்றும் எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகள் அனைத்தும் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது.
முகாமில் பொது மருத்துவம், இருதயம், எலும்பு, நரம்பியல், தோல் மருத்துவம் மற்றும் மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட 17 வகையான சிறப்பு மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்டு மருத்துவ சேவைகள் வழங்கப்படும். மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுபவர்களுக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்கோ கார்டியோகிராம், இசிஜி, எக்கோ, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே பெண்களுக்கான கர்ப்பபைவாய் மற்றும் மார்பக புற்று நோய் பரிசோதனைகள் முகாமிலேயே மேற்கொள்ளப்படும். முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பாக அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 50 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு சீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், மாவட்ட கலெக்டர் மு.பிரதாப், ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர், ஆவடி மாநகராட்சி துணை மேயர் சூரியகுமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா, இணை இயக்குநர்கள் கிருஷ்ணராஜ், அம்பிகாசண்முகம், மாவட்ட சுகாதார அலுவலர்கள் பிரியாராஜ், பிரபாகரன், ஆவடி மாநகராட்சி நகர்ப்புற சுகாதார அலுவலர் ராஜேந்திரன், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்: அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.
