×

ஆரணி அருகே ரூ.12 லட்சத்தில் புதிய ரேஷன் கடை: எம்எல்ஏ திறந்து வைத்தார்

பெரியபாளையம், டிச.22: ஆரணி அருகே, போந்தவாக்கம் ஊராட்சியில், சுமார் 1500க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்குட்பட்ட மாதவரம் கிராமத்தில் சுமார் 300க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க போந்தவாக்கம் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு நீண்ட தூரம் நடந்து சென்று ரேஷன் பொருட்கள் வாங்கி மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

எனவே, தங்கள் பகுதிக்கு ரேஷன் கடை கட்டித் தர வேண்டும் என எம்எல்ஏ துரை சந்திரசேகரிடம் கோரிக்கை வைத்திருந்த நிலையில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2024-25 நிதியாண்டில் ரூ12.லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ துரை சந்திரசேகர் கலந்துகொண்டு மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து, முதல் விற்பனை தொடங்கி வைத்தார். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில், கூட்டுறவு சார்பதிவாளர் இளையராஜா, கூட்டுறவு சங்க செயலர் பாஸ்கரன், ஊராட்சி செயலர் சுப்பிரமணி, விற்பனையாளர் ரேகா, மீஞ்சூர் காங்கிரஸ் வட்டார தலைவர் அத்திப்பட்டு புருஷோத்தமன், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

Tags : Arani ,MLA ,Periypalayam ,Ponthavakam panchayat ,Madhavaram ,Ponthavakam ,
× RELATED ஆவடி சத்தியமூர்த்தி நகர் அரசினர்...