சென்னை: உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான். வீட்டில் ஒட்டுகேட்பு கருவியை வைத்தது அன்புமணிதான் என ராமதாஸ் பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார். பாமக நிறுவனர் ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையேயான அதிகார மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் நேற்று ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
பாமக என்பது நான் உருவாக்கிய கட்சி.
96 ஆயிரம் கிராமங்களுக்குச் சென்று வேர்வை சிந்தி நான் வளர்த்த கட்சி. வேறு எவரும் இதற்கு உரிமை கொண்டாட முடியாது. நான் 17ம் தேதி பொதுக்குழு என்று சொல்லியிருக்கிறேன். என்னால் செயல் தலைவர் என்று சொல்லப்பட்ட அவர் 9ம் தேதி பொதுக்குழு என சொல்கிறார். அது கட்சி விதிகளுக்கு புறம்பானது. பொதுவாக பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட வேண்டுமென்றால் 15 நாட்களுக்கு முன்பாக அறிவிக்கை அனுப்ப வேண்டும். நான் முறையாக அறிவித்திருக்கிறேன். அதனால் வேறு யாரும் பாமக பொதுக்குழுவை கூட்டுவது என்று சொல்வது சட்டத்திற்கும், கட்சியின் விதிகளுக்கும் புறம்பானது.
தைலாபுரம் வீட்டில் உளவுக்கருவி வைத்தது அன்புமணிதான். உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான். இது சம்பந்தமாக காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறேன். நானும் ஒரு டீம் மூலம் விசாரித்து வருகிறேன். இப்போது, பாமகவின் மகளிர் அணி மாநாடு வரும் 10ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில், 3 லட்சம் மகளிர் பங்கேற்க இருக்கிறார்கள். அன்புமணி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு பொய்யைச் சொல்லி வருகிறார்.
தேர்தல் நெருங்குவதால், கட்சியை பலப்படுத்த பாமகவின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு நான் ஏற்பாடு செய்து, அதில் பங்கேற்க 108 மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்தேன். ஆனால், 100 மாவட்டச் செயலாளர்களை அன்புமணி போனில் அழைத்து, போகாதே போகாதே என்று சொல்லி நிறுத்தினார். அந்த 100 பேரு நான் போட்ட ஆளு. அதோடு கட்சியின் நிறுவனர், தலைவர் நானு என்னை பார்க்க கூடாது என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது. 100 பேரு வராததால் வேறு 100 பேரை அமர்த்தினேன். பீகார் மக்கள் இங்கு வந்து வாக்களிப்பது சரியாக இருக்காது. தந்தையை மிஞ்சிய மகன் இருக்க கூடாது, இதை சொன்னது நம்முடைய பிரதமர், நம்முடைய பிரதமர். இவ்வாறு தெரிவித்தார்.
The post உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன்; வீட்டில் ஒட்டுகேட்பு கருவியை வைத்தது அன்புமணிதான் appeared first on Dinakaran.
