×

இங்கிலாந்துடன் 5வது டெஸ்ட் வலுவான நிலையில் இந்தியா

லண்டன்: இங்கிலாந்து சென்றுள்ள இந்தியா – இங்கிலாந்து இடையிலான கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த ஜூலை 31ம் தேதி துவங்கியது. முதல் இன்னிங்சில் இந்தியா 224, இங்கிலாந்து 247 ரன்னுக்கு ஆல் அவுட்டாகின. 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா, 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன் எடுத்திருந்தது. இந்நிலையில், 3ம் நாள் ஆட்டத்தை இந்தியா நேற்று தொடர்ந்தது. ஆகாஷ் தீப், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை சிறப்பாக ஆடி, 3வது விக்கெட்டுக்கு 107 ரன் குவித்திருந்தபோது, ஆகாஷ் தீப் 66 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் கேப்டன் சுப்மன் கில் 11, கருண் நாயர் 17 ரன்னில் அவுட்டாகினர். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஜெய்ஸ்வால் 118 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.

83 ஓவர் முடிவில் இந்தியா, 7 விக்கெட் இழப்புக்கு 356 ரன் எடுத்து, 333 ரன் முன்னிலை பெற்றிருந்தது. ஜடேஜா 53, வாஷிங்டன் சுந்தர் 16 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில், கஸ் அட்கின்சன் 3, ஜோஷ் டங், ஜேமி ஓவர்டன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

‘நைட் வாட்ச்மேன்’ ஆகாஷ் அரை சதம்
இங்கிலாந்துடனான 5வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சை ஆடிக்கொண்டிருந்த இந்தியா, 2வது நாள் ஆட்ட நேர முடிவில் சாய் சுதர்சன் (11 ரன்) விக்கெட்டை இழந்தது. அதையடுத்து, நைட் வாட்ச்மேனாக ஆகாஷ் தீப் அனுப்பப்பட்டார். நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணியின் ஆகாஷ் தீப் – ஜெய்ஸ்வால் இணையின் அபார பேட்டிங்கால் ரன்கள் மளமளவென உயர்ந்தன. ஆகாஷ் தீப் அரை சதம் விளாசி அசத்தினார். கடந்த 2011ல், இங்கிலாந்து அணிக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் நைட் வாட்ச்மேனாக, அமித் மிஷ்ரா களமிறங்கி அரை சதம் (84 ரன்) விளாசி இருந்தார். 14 ஆண்டுக்கு பின், அந்த சாதனையை தற்போது ஆகாஷ் தீப் அரங்கேற்றி உள்ளார்.

The post இங்கிலாந்துடன் 5வது டெஸ்ட் வலுவான நிலையில் இந்தியா appeared first on Dinakaran.

Tags : India ,England ,London ,London Oval ,Dinakaran ,
× RELATED சில்லி பாய்ன்ட்…