×

இன்று முதல் மாமல்லபுரத்தில் ஆசிய அலைச் சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியா உட்பட 20 நாடுகள் பங்கேற்பு

மாமல்லபுரம்: ஏஎஸ்எப் 4வது ஆசிய அலைச் சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டி சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் இன்று தொடங்குகிறது. தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளாக தேசிய, சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது. அதன் தொடர்ச்சியாக ஆசிய அலைச்சறுக்கு கூட்டமைப்பு (ஏஎஸ்ஐ), இந்திய அலைச் சறுக்கு கூட்டமைப்பு (எஸ்எப்ஐ) ஆகியவை இணைந்து தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்புடன் சென்னை அருகே மாமல்லபுரத்தில் 4வது ஆசிய அலைச் சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த உள்ளது.

இந்தப் போட்டி இன்று முதல் ஆக.12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியாவுடன் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், சீனா, ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், மாலத்தீவு உட்பட 20 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 பேர் கலந்து கொள்கின்றனர். வீரர்கள், வீராங்கனைகளுக்கு பொதுப் பிரிவு, யு18 பிரிவுகளில் அலைச் சறுக்குப் போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு போட்டியிலும் முதல் 4 இடங்கள் பெறுபவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம், தாமிர பதக்கங்கள் வழங்கப்படும்.

இந்தப்போட்டியில் சிறப்பிடம் பெறும் வீரர்கள், வீராங்கனைகள் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கள் பிரிவுகளில் விளையாட தங்கள் நாடுகளின் சார்பில் தகுதி பெறுவார்கள். சாம்பியன் பட்டம் பெறுபவர்கள் நேரடியாக உலக அலைச் சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் சிறப்பு வாய்ப்பை பெறுவார்கள். இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள 12பேரில் 8 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

தொடக்க விழா
ஆசிய அலைச் சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டி தொடக்க விழா இன்று மாலை மாமல்லபுரம் தனியார் விடுதியில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் தென் ஆப்ரிக்கா முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்திய அலைச் சறுக்கு விளையாட்டின் விளம்பர தூதருமான ஜான்டி ரோட்ஸ், செங்கல்ப்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் டி.சினேகா, எஸ்டிஏடி உறுப்பினர் செயலர் மேகநாத் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். சாம்பியன்ஷிப் போட்டி நாளை காலை தொடங்கும்.

The post இன்று முதல் மாமல்லபுரத்தில் ஆசிய அலைச் சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியா உட்பட 20 நாடுகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Asian Surf Championship Tournament ,Mamallapuram ,India ,ASF 4th Asian Surf Championship tournament ,Chennai ,Tamil Nadu ,Asian Surfing Federation ,
× RELATED சில்லி பாய்ன்ட்…