அம்பத்தூர் தொழிற்பேட்டை தார்ஷீட் கம்பெனியில் திடீர் தீ விபத்து: பல லட்சம் பொருட்கள் சாம்பல்

ஆவடி: அம்பத்தூரில் அதிகாலையில் தார்ஷீட் தயாரிக்கும் கம்பெனியில் நடந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை, ஆவின் பால் பண்ணை சாலையை ஒட்டி ‘தார் ஷீட்‘ தயார் செய்யும் கம்பெனி உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் தார் ஷீட் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இதில் 25க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். மேலும், இங்கு மாதவரம் மில்க் காலனியைச் சேர்ந்தவர் கேசவலு (52).  நிர்வாக இயக்குநர்.  இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் ஊழியர்கள் அனைவரும் கம்பெனியில் இருந்து வீட்டுக்கு சென்றனர். பின்னர், இரவு நேர பாதுகாப்பு பணியில் காவலாளிகள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அதிகாலை 3 மணிக்கு கம்பெனியின் ஒரு பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. பின்னர், சிறிதுநேரத்தில் அப்பகுதியில் தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதனைப்பார்த்த, அங்கு இருந்த காவலாளிகள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும், அம்பத்தூர், ஜெ.ஜெ.நகர், வில்லிவாக்கம், கோயம்பேடு, திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் இருந்து 6 தீயணைப்பு வாகனங்களில் 25க்கும் மேற்பட்ட வீரர்கள் வந்தனர். பின்னர், அவர்கள் வாகனங்களில் இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.இதன் பிறகு, தீயணைப்பு வீரர்கள்  3 மணி நேரம் போராடி கம்பெனியில் பற்றிய தீயை அணைத்தனர். இதில், தார் ஷீட்கள், மூலப்பொருட்கள், எந்திரங்கள் எரிந்து சேதமானது. இதனால், பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமானது என கூறப்படுகிறது. புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மல்லிகா தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரியவந்தது. மேலும், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post அம்பத்தூர் தொழிற்பேட்டை தார்ஷீட் கம்பெனியில் திடீர் தீ விபத்து: பல லட்சம் பொருட்கள் சாம்பல் appeared first on Dinakaran.

Related Stories: