மணிமுத்தாறு மலையடிவாரத்தில் யானைகள் அட்டகாசம்

*விளை நிலங்களை நாசம் செய்ததால் விவசாயிகள் வேதனைஅம்பை : மணிமுத்தாறு மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள கிராமங்களில் யானைகள் புகுந்து விளைநிலங்களை நாசம் செய்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைய துவங்கியுள்ளன. நேற்று முன்தினம் மணிமுத்தாறு அருகே உள்ள ஏர்மாள்புரம், செட்டிமேடு, திருப்பதியாபுரம் கிராமங்களில் விளை நிலங்களில் புகுந்த யானைகள் கூட்டம் நெற்பயிர்களை நாசம் செய்தது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விவசாயி சுப்பிரமணியன் கூறுகையில், ‘மணிமுத்தாறு மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஏர்மாள்புரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் அடிக்கடி யானைகளின் தொந்தரவு இருந்து வருகிறது. இதனால் எங்களால் விவசாயம் சரியாக செய்ய முடியவில்லை. வனத்துறை சார்பில் சோலார், மின்வேலி மற்றும் அகழிகள் வெட்டினாலும் அவற்றையும் கடந்து யானைகள் வந்து விளைநிலங்களை சேதப்படுத்துகிறது. இதனால் நாங்கள் ஆண்டுதோறும் பெரும் வருவாய் இழப்பை சந்தித்து வருகிறோம். இதுதொடர்பாக நாங்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை,  எனவே எங்கள் பகுதி விவசாயிகள் இளைஞர்கள் ஒத்துழைப்புடன் யானைகளை காட்டுக்குள் விரட்டினோம். மீண்டும் இதுபோன்று காட்டு விலங்குகளால் பாதிப்பு ஏற்படாதவாறு வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.கடந்த சில மாதங்களுக்கு முன் செட்டிமேடு  பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு சொந்தமான விளைநிலங்களில் யானைகள் புகுந்து  100க்கும் மேற்பட்ட பனை மரங்களை வேரோடு சாய்த்து நாசம் செய்தது குறிப்பிடத்தக்கது….

The post மணிமுத்தாறு மலையடிவாரத்தில் யானைகள் அட்டகாசம் appeared first on Dinakaran.

Related Stories: