டவுன் நயினார்குளம் அருகே குப்பை எரிப்பால் புகை மண்டலமான சாலை: வாகன ஓட்டிகள் பாதிப்பு

நெல்லை: நெல்லை டவுன் நயினார்குளம் வடக்கு மவுண்ட்ரோடு சாலையில் உள்ள பாலத்தின் கீழே செல்லும் நெல்லை கால்வாயின் நீரானது அருகே உள்ள நயினார்குளத்திற்கு செல்கிறது. இப்பகுதியில் செல்லும் கால்வாயின் ஓரங்களிலும், நயினார்குளத்தின் கரை ஓரங்களிலும் பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுப் பொருட்கள் குவிந்து கிடக்கிறது. இப்படி குவிந்து கிடக்கும் குப்பைகளால் இக்கால்வாயின் நீரோட்டம் பாதிக்கப்படுகிறது. மேலும் இதுபோன்ற குப்பைகள் நெல்லை கால்வாய் மற்றும் நயினார்குளத்தின் சுற்றுப்புற பகுதிகளை ஆக்கிரமித்து உள்ளதால் அதன் பரப்பளவு சுருங்கி வருகிறது. அதோடு இப்பகுதிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளை சிலர் அவ்வப்போது தீயிட்டு கொளுத்துகின்றனர். இன்று சிலர் அங்கு கொட்டப்பட்டிருந்த குப்பைகளுக்கு தீ வைத்ததால் எழுந்த புகை மண்டலத்தால் அப்பகுதியில் உள்ள சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். நெல்லை மாநகர பகுதிகளில் உடையார்பட்டி, நயினார்குளம் உள்ளிட்ட குளங்களை அழகுபடுத்தும் விதமாக அதிலுள்ள அமலைச் செடிகளை அகற்றும் பணிகள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. உடையார்பட்டி குளத்தின் ஒரு பகுதியில் பொதுமக்கள் குளத்திற்குள் குப்பைகளை கொட்டாத வகையில் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டது. நயினார்குளம் மார்க்கெட் எதிரே உள்ள குளக்கரை பகுதியில் நடைபாதை உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகள் மேற்ெகாள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நயினார்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டுவது மற்றும் அதை தீயிட்டு கொளுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நீர்நிலைகள் பாதிக்கப்படுவதோடு, அப்பகுதியில் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறல் உள்ளிட்ட சுவாச பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். எனவே மாநகர பகுதிகளில் உள்ள அனைத்து குளங்கள் உள்ளிட்ட பிற நீர்நிலைகளிலும் பொதுமக்கள் குப்பைகள் கொட்டுவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நீர்நிலைகளை தூர்வாருதல், அழகுபடுத்துவது, சுற்றிலும் வேலிகள் அமைப்பது போன்ற நடவடிக்கைகளால் நீர்நிலைகளை பாதுகாத்து நிலத்தடிநீர் மட்டத்தை அதிகரிக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்….

The post டவுன் நயினார்குளம் அருகே குப்பை எரிப்பால் புகை மண்டலமான சாலை: வாகன ஓட்டிகள் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: